முத்துராஜாவை சித்ரா முதன்முறையாக 2016ம் ஆண்டு, ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்தார். கண்டதும் காதல். முத்துராஜாவும் காதலில் விழுந்தார். ஆனால் அவரால் சித்ராவை பார்க்க முடியவில்லை. அவருக்கு பார்வை கிடையாது. சித்ராவின் குடும்பம் அவர்களின் காதலுக்கு எதிராக இருந்தது. மாற்றுத்திறனாளியை மணம் முடித்து வாழ்க்கையை சித்ரா நாசம் செய்து கொள்வதாக அவர்கள் வாதிட்டனர். இருவருக்கும் சேர்த்து சித்ராதான் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் சொல்லி பார்த்தனர். ஆனால் சித்ராவின் காதலை கலைக்க முடியவில்லை.
திருமணமான ஒரு மாதத்திலேயே சித்ராவின் குடும்பம் நினைத்தவை பொய்யானது. முத்துராஜாதான் சித்ராவை முழு நேரமாக கவனித்துக் கொண்டார். சித்ராவுக்கு இருதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை கொடிய பல திருப்பங்களை காணத் தொடங்கியது. எனினும் சோலாங்குருணி கிராமத்தில் வாழும் 25 வயது எம்.சித்ராவும் 28 வயது டி.முத்துராஜாவும் வாழ்க்கையை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டனர். இது அவர்களின் காதல் கதை.
*****
மூன்று பெண் குழந்தைகளையும் மனைவியையும் நிறைய கடன்களுடன் விட்டுச் சென்றுவிட்டார் சித்ராவின் தந்தை. அப்போது சித்ராவுக்கு 10 வயது. கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாளாது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார் தாய். பக்கத்து மாநிலமான ஆந்திரப் பிரதேசத்துக்கு தப்பிச் சென்றார். அங்கு பருத்தி நூல் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் அவர்கள் அனைவரும் வேலைக்கு சேர்ந்தனர்.
இரண்டு வருடங்கள் கழித்து மதுரைக்கு திரும்பினர். கரும்பு விவசாய வேலைக்கு சென்றனர். அப்போது சித்ராவுக்கு வயது 12. 10 கரும்புகளை பிடுங்கி வெட்டி கொடுத்தால் 50 ரூபாய் வருமானம் சித்ராவுக்கு கிடைக்கும். வலி நிறைந்த வேலை. அந்த வேலை அவரின் கைகளுக்கு சிராய்ப்புகளையும் முதுகுக்கு வலியையும் கொடுத்தது. தந்தை வாங்கியிருந்த கடன்களை அவர்களால் அடைக்க முடியவில்லை. எனவே சித்ராவும் அவரின் அக்காவும் ஒரு பருத்தி ஆலையில் பணிபுரிய அனுப்பப்பட்டார்கள். தினக்கூலி 30 ரூபாய். மூன்று வருடங்களில் 50 ரூபாயாக அது உயர்த்தப்பட்டது. வாங்கிய கடனை அவரால் அடைக்க முடிந்தது. கடன் தொகையும் வட்டியும் சித்ராவுக்கு ஞாபகத்தில் இல்லை. முடக்கிப் போடும் அளவுக்கு அது இருந்ததாக மட்டும் நினைவில் இருக்கிறது.
ஒரு கடனை அடைத்ததுமே அக்காவை மணம் முடிக்கவென இன்னொரு கடன் வாங்கப்பட்டது. சித்ராவும் அவரின் தங்கையும் மீண்டும் வேலைக்கு சென்றனர். இம்முறை ஒரு ஜவுளி ஆலைக்கு சென்றனர். தமிழ்நாட்டின் தனியார் ஜவுளி ஆலைகளால், பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு உதவும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய சுமங்கலி திட்டத்தின் கீழ் அவர்கள் வேலைக்கு சேர்ந்திருந்தனர். ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகங்களில் இருக்கும் திருமணமாகாத பெண்கள் மூன்று வருடங்களுக்கு பணியமர்த்தப்பட்டு, ஒப்பந்தம் முடிவடையும்போது அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு பெரும் தொகை கொடுக்கப்படும். ஒரு வருடத்துக்கு 18000 ரூபாய் வருமானம் ஈட்டிய சித்ரா இன்னும் பதின்வயதை கடக்கவில்லை. கடனை அடைப்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். 2016ம் ஆண்டு வரை குடும்பத்தை அவர்தான் நடத்தினார். 20 வயது ஆனபோது முத்துராஜாவை சந்தித்தார்.
*****
சித்ராவை சந்திப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன் முத்துராஜா தன் இரு கண்களின் பார்வையையும் முற்றிலுமாக இழந்திருந்தார். தேதியும் நேரமும் அவர் மனதில் பதிந்திருந்தது. ஜனவரி 13, 2013 அன்று, பொங்கல் விழாவின் முந்தைய இரவு ஏழு மணிக்கு பார்வை இழந்தார். கண் தெரியவில்லை என உணர்ந்ததும் நேர்ந்த பதற்றத்தை அவரால் நினைவுகூர முடிகிறது.
அடுத்த சில வருடங்கள் அவருக்கு பெரும் விரக்தியை கொடுத்தது. பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தார். கோபமும் அழுகையும் தற்கொலை எண்ணங்களும் அவரை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவர் தப்பினார். சித்ராவை சந்தித்தபோது அவருக்கு வயது 23. பார்வை இல்லை. “பிணத்தை போல்” அதுவரை உணர்ந்திருந்தார். சித்ராதான் புதிய வாழ்க்கையை கொடுத்ததாக மென்மையாக கூறுகிறார் அவர்.
சில துரதிர்ஷ்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நேர்ந்து முத்துராஜாவின் பார்வையை பறித்தது. ஏழு வயதாக இருக்கும்போது அவரும் அவருடைய சகோதரியும் மதுரையில் இருந்த அவர்களின் நிலத்தில் ரோஜா செடிகளை இடம்பெயர்த்து நட்டுக் கொண்டிருந்தனர். அவை விற்பனைக்காக வளர்க்கப்பட்ட பூக்கள். அச்சமயத்தில் ஒரு அசம்பாவிதம் நேர்ந்தது. அவரின் சகோதரி ஒரு செடியை பிடுங்கியபோது, கையில் சரியாக பிடிக்காததால், அதன் தண்டு முத்துராஜாவின் முகத்தில் பட்டது. அதன் முட்கள் அவரின் கண்களில் குத்தின.
ஆறு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு இடது கண்ணில் ஓரளவு பார்வை கிடைத்தது. அவரின் குடும்பம் மூன்று செண்ட் நிலத்தை (0.03 ஏக்கர்) விற்று கடனில் விழுந்தது. கொஞ்ச காலம் கழித்து ஒரு விபத்து நேர்ந்து, பார்வையிருந்த அவரது கண், மீண்டும் பாதிப்புக்குள்ளானது. பள்ளிப் படிப்பு முத்துராஜாவுக்கு கடினமானது. அவரால் கரும்பலகையையோ அதிலிருந்த வெள்ளை எழுத்துகளையோ பார்க்க முடியவில்லை. ஆசிரியர்களின் உதவியோடு 10ம் வகுப்பு வரை படிக்க முடிந்தது.
இறுதியாக 2013ம் ஆண்டின் ஜனவரி நாளில் முத்துராஜாவின் உலகம் முழு இருட்டுக்குள் விழுந்தது. வீட்டுக்கு வெளியே இருந்த இரும்புத் தடியில் எதிர்பாராதவிதமாக மோதி பார்வை இழந்தார். சித்ராவை சந்தித்தபிறகுதான் மீண்டும் அவரின் வாழ்க்கையில் ஒளி வந்தது, காதலாக.
*****
2017ம் ஆண்டில் திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து சித்ராவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மதுரை அண்ணாநகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பல பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பிறகு சித்ராவின் இதயம் பலவீனமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இத்தனை காலம் உயிரோடு இருப்பதே ஆச்சரியம் எனக் கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள். (என்ன குறைபாடு என சித்ராவுக்கு தெரியவில்லை. அவரின் மருத்துவ ஆவணங்கள் மருத்துவமனையில் இருக்கின்றன.) வாழ்க்கை முழுக்க அவர் உழைத்துக் கொட்டிய அவரின் குடும்பம் அவருக்கு உதவ மறுத்தது.
அவரின் சிகிச்சைக்கென அதிக வட்டியில் 30000 ரூபாய் கடன் வாங்கினார் முத்துராஜா. சித்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். வீடு திரும்பிய பிறகு அவர் சரியானார். ஆனால் அதற்கு பிறகு முத்துராஜாவுக்கு காதில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. விரக்தியடைந்து இருவரும் தற்கொலை செய்து கொள்வதை பற்றி யோசித்தனர். ஆனால் புதிய உயிர் அவர்களை தடுத்து நிறுத்தியது. சித்ரா கர்ப்பம் தரித்தார். அவரின் இதயம் தாங்குமா என கவலை கொண்டார் முத்துராஜா. மருத்துவர்கள் கர்ப்பத்தை தொடருமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினர். பல மாதம் தொடர்ந்த கவலை மற்றும் பிரார்த்தனைகளுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். நான்கு வயதாகும் விஷாந்த் ராஜாதான் அவர்களுக்கான நம்பிக்கை, எதிர்காலம், சந்தோஷம் எல்லாம்.
*****
அன்றாட வாழ்க்கை இருவருக்கும் சிரமாமவே இருக்கிறது. கனமான எதையும் சித்ராவால் தூக்க முடிவதில்லை. இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் குழாயில்தான் நீர் பிடிக்க முடியும். சித்ராவின் தோளில் கைவைத்து அவர் வழிநடத்த தண்ணீர்ப் பானையை சுமந்து வருகிறார் முத்துராஜா. சித்ராதான் அவரின் வழிகாட்டி. அவரின் கண்களும் கூட. அருகே உள்ள நிலங்களிலிருந்தும் காட்டுப் பகுதியிலிருந்தும் வேப்பங்காய்களை சேகரிக்கிறார் சித்ரா. பின் அவற்றை காயவைத்து கிலோ 30 ரூபாய் என விற்கிறார். பிற நேரங்களில் அவர் மஞ்சநத்தி காய்களை சேகரித்து 60 ரூபாய்க்கு விற்கிறார். விவசாய நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மல்லிகை பூக்கள் சேகரித்து தினக்கூலி 25லிருந்து 50 ரூபாய் வரை பெறுகிறார்.
நாளொன்றுக்கு சராசரியாக 100 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் சித்ரா. அவர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு அப்பணம் சரியாகி விடுகிறது. தமிழ்நாட்டு அரசின் மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டத்தின் கீழ் முத்துராஜாவுக்கு கிடைக்கும் 1000 ரூபாய் சித்ராவுக்கான மருந்துகள் வாங்க செலவாகி விடுகிறது. “என்னுடைய வாழ்க்கை இந்த மருந்துகளால்தான் ஓடுகிறது. இவற்றை எடுக்கவில்லை எனில், வலி வந்துவிடும்,” என்கிறார் சித்ரா.
கோவிட் பொதுமுடக்கம், பழங்களை சேகரிக்கும் வாய்ப்பையும் அவரிடமிருந்து பறித்து விட்டது. வருமானம் குறைந்ததால், மருந்துகள் எடுப்பதை சித்ரா நிறுத்திவிட்டார். உடல்நிலை மோசமாகி மூச்சு விடுவதும் நடப்பதும் அவருக்கு சிரமமாகி விட்டது. தேநீருக்கு பால் வாங்கக் கூட பணமில்லை. எனவே அவரது மகன் பாலில்லாத தேநீர்தான் குடிக்கிறார். “எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது,” என்கிறார் விஷாந்த். அவரின் பெற்றோர், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் இழப்பு மற்றும் அவர்களின் காதல் என எல்லாமும் புரிந்தது போல.
இக்கட்டுரையை செய்தியாளருடன் இணைந்து அபர்ணா கார்த்திகேயன் எழுதியிருக்கிறார்
தமிழில் : ராஜசங்கீதன்