ஒரு காற்றுக்கால மதியவேளை, உஷா ஷிண்டே அவரது பேரனுடன், அவர்கள் ஆற்றை கடக்க பயன்படுத்தும் தெப்பம் போன்ற படகில் ஏறினார். அந்த படகு சரியான நிலையில் இல்லாததால், அவர் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே கவிழ்ந்தது. இதனால் உஷா நிலை குலைந்துவிட்டார். குழந்தையுடன் ஆற்றில் விழுந்தவுடன் அவருக்கு உயிர் பயம் ஏற்பட்டுவிட்டது.
இது, கோவிட் – 19ன் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவிக்கொண்டிருந்த இந்தாண்டு மார்ச் மாத்தில் நடைபெற்றது. உஷாவின் 4 வயது பேரன் ஷாம்பூவுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. “கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என நான் அஞ்சினேன்“ என்று உஷா (65) கூறுகிறார். “அவனின் பெற்றோர்கள் மேற்கு மஹாராஷ்ட்ராவில் ஒரு கரும்பு ஆலையில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். எனவே நான் அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக ஓடினேன்“ என்று மேலும் கூறுகிறார்.
அதற்காக மருத்துவமனை செல்வதற்கு அவர்கள் ஆற்றை கடக்க வேண்டும். அதற்கு அப்பகுதி மக்கள் தற்காலிக தெப்பம் போன்ற படகை பயன்படுத்தி வந்தனர். “என்னால் சரியாக நிற்க முடியாமல் நான் ஷாம்பூவுடன் ஆற்றில் விழுந்துவிட்டேன். எனக்கு நீச்சலும் தெரியாது. நல்லவேளையாக அருகில் இருந்த எனது சகோதரரின் மகன் ஆற்றில் உடனடியாக குதித்து நாங்கள் கரை ஏறுவதற்கு உதவினார். நான் அஞ்சினேன். என்னால் எனது பேரனுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று நான் நினைத்தேன்“ என்று உஷா கூறுகிறார்.
மஹாராஷ்ட்ராவின் பீட் மாவட்டத்தில் வின்சர்ணா ஆற்றின் கரையில் உஷாவின் சவுடாடா கிராமம் உள்ளது. கண்கவர் ராமேஸ்வர் நீர்வீழ்ச்சி, 225 அடி உயரத்தில் இருந்து இந்த ஆற்றில் விழுகிறது. அந்த நீர்வீழ்ச்சி இவர்களின் கிராமத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் பட்டோடா தாலுகாவில் உள்ளது. இந்த ஆறு சவுடாடாவை இரண்டாகப் பிரிக்கிறது. கிராமத்தின் முக்கிய பகுதியில் இருந்து சில இடங்களை பிரிக்கிறது. சவுடாடாவின் பிரிந்துள்ள ஷிண்டே வாஸ்டி பகுதியில் பாலம் இல்லாததால், மக்கள் கடைகள் முதல் மருத்துவமனைகள் வரை ஆற்றைக்கடந்தே எல்லாவற்றிற்கும் செல்ல வேண்டியுள்ளது.
கிராம மக்கள் ஆற்றை எளிதாக கடப்பதற்காக, தடிமனான கயிற்றை ஆற்றின் குறுக்கே இரு கரைகளையும் இணைக்கும் வகையில் கட்டியுள்ளனர். அந்த தெப்பம் போன்ற படகுக்கு இடையில் கயிறு செல்கிறது. அந்தக்கயிறுதான் படகை ஒரு புறமாக சறுக்கிவிடாமல் நிலையாக கொண்டு செல்ல பயன்படுகிறது. கரையில் உள்ள சிறிய மலைப்பகுதியில் 3 தெப்பம் போன்ற படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமைதியான மலைகள் சூழ்ந்த அழகான ஆறு மற்றும் பசுமை வயல்வெளிகளும், இந்த கடினமான பயணத்தால், ரசிக்க முடியாமல் ஆகிவிட்டது. பயணம் செய்ய வேண்டுமெனில், ஒருவர் அந்த சிறிய குன்றுபோன்ற மலையில் ஏறி கவனமாக நடந்து வந்து தெப்பம்போன்ற படகில் ஏறவேண்டும். கயிறை இழுப்பதன் மூலம் படகு நகர்ந்து செல்லும். அந்த படகு 5 முதல் 7 நிமிடத்தில் மறு கரையை அடைந்துவிடும்.
“நாங்கள் பல ஆண்டுகளாக ஆற்றைக்கடக்க பாலம் கட்டித்தரவேண்டும்“ என்று கேட்கிறோம் என்று பாலாசாகேப் ஷிண்டே கூறுகிறார். 46 வயதான அவர் ஷிண்டே வாஸ்டி அரசு ஆரம்ப பள்ளியின் ஆசிரியர். “இங்கிருந்து செல்வதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஆனால் அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அது வயல்களின் வழியாக செல்லக்கூடிய பாதை, ஆனால், விவசாயிகள் எங்களை வயல்களுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, ஒவ்வொரு முறை நாங்கள் வெளியே செல்லும்போதும் உயிரைப்பணயம் வைத்து நாங்கள் செல்கிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இவ்வாறு சவுடாடாவில் வெளியே செல்வது சிரமம் உள்ளதால், சவுடாடாவின் ஷிண்டே வாஸ்டி பகுதியில் உள்ள 500 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அது குழந்தைகள் மற்றும் பெண்களை அதிகம் பாதித்தது. “கர்ப்பிணி பெண்கள் கூட ஆடிச்செல்லும் இந்த படகில்தான் ஆற்றை கடக்க வேண்டும். அது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இதனால், இங்குள்ள பெண்கள் அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள்“ என்று இந்துபாய் ஷிண்டே கூறுகிறார். 40 வயதான இவருக்கு கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் உள்ளது. “எங்களால் அக்கறையில் சென்று வசிக்க முடியாது. ஏனெனில் எங்கள் விவசாய நிலங்கள் இங்குதான் உள்ளன“ என்று வருத்தமாக கூறுகின்றனர்.
இந்துபாயின் 22 வயது மகள் ரேகா கர்பமடைந்திருந்தபோது, அவரது தாய் வீட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. ஆற்றைக்கடக்கும்போது ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் ஏதாவது ஆகிவிடும் என்ற அச்சத்தில் அவர் இங்கு வரவேயில்லை. “வழக்கமாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஆனால், நான் எனது மகளை கவனித்துக்கொள்ளவில்லை. நான் அதை தவிர்த்துவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார். “அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டால், எங்களால் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால் என்ன செய்வது என நாங்கள் ஆபத்தை விலைக்கு வாங்க விரும்பவில்லை. எங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலே, நாங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துதான் மருத்துவமனைக்கே செல்வோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இவர்கள் இவ்வாறு தனித்திருப்பது கோவிட் – 19 தொற்று ஏற்பட்ட மார்ச் 2020க்குப்பின்னர் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. “நல்லவேளையாக இங்கு ஒருவரும் கோவிட்டால் இறக்கவில்லை“ என்று பாலாசாகேப் கூறுகிறார். “எங்களில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், நாங்கள் பரிசோதனை செய்துகொள்ள மாட்டோம். யாராவது இங்கிருந்து மருந்தகத்திற்குச் சென்று பேரசிட்டமால் மருந்து வாங்கி வருவார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குபின்னர், கணேஷ் தாவ்லே என்ற மருத்துவர் மற்றும் சுகாதார செயற்பாட்டாளர் அருகில் உள்ள லிம்பாகணேஷ் கிராமத்தில் இருந்து ஷிண்டே வாஸ்டி கிராமத்திற்கு வாரம் இருமுறை வருகிறார். “இங்கு நிறைய பேருக்கு உடல் வலி, தலை வலி உள்ளிட்ட கோவிட் போன்ற அறிகுறிகளுடன் பலர் இருந்தார்கள். அந்த அறிகுறிகளுக்கு நான் சிகிச்சையளித்தேன்“ என்று அவர் கூறுகிறார். என்னால் முடிந்தவரை நான் செய்தேன் என்று அவர் கூறுகிறார். “இங்குள்ள பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும். இங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறைவு. 21ம் நூற்றாண்டில் ஒரு ஆற்றைக்கடக்க தற்காலிக படகு வைத்திருக்கும் நிலை ஒரு கிராமத்தில் இருக்கக்கூடாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இப்போது இவர்கள் பயன்படுத்தும் தெப்பம் போன்ற படகு பழையதைவிட உறுதியாக உள்ளது. புதிய தெப்பம் போன்ற படகுகள், இந்தாண்டு துவக்கத்தில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வலர்களால் செய்துகொடுக்கப்பட்டது. இரும்பு மற்றும் ரப்பர் கொண்டு உறுதியாக செய்யப்பட்டுள்ளது. “நாங்கள் தெர்மக்கோல் அல்லது லாரியின் டயர்களை பயன்படுத்தி முன்பெல்லாம் அக்கறை செல்வோம்“ என்று வத்சலா ஷிண்டே கூறுகிறார். இவர் 70 வயதான விவசாயி. இவருக்கு சொந்தமாக ஷிண்டே வாஸ்டியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. “அவையெல்லாம் மிகுந்து ஆபத்தானது மற்றும் அவற்றை கையாள்வதிலும் சிரம்ம இருந்தது. தெர்மக்கோல் எளிதில் உடையக்கூடிய ஒன்று“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இதனால்தான், ஷிண்டே வாஸ்டியின் பெரும்பாலான குழந்தைகள் 4ம் வகுப்பைத்தாண்டி படிக்கவில்லை. “இங்குள்ள ஆரம்பபள்ளியில் 4ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது“ என்று இந்துபாய் கூறுகிறார். “10 வயது குழந்தையால் எப்படி தெர்மக்கோலிலும், டயரிலும் ஆபத்தின்றி ஆற்றை கடக்க முடியும். நாங்களும் அன்றாடம் வேலைக்கும், வயல்களுக்கும் செல்பவர்கள். தினந்தோறும் அவர்களை பள்ளிக்கு கொண்டு சென்றுவிட்டு, அழைத்துவர முடியாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த புதிய தெப்பம்போன்ற மிதவைபடகுகளில் வேண்டுமானால் அவர்கள் ஆற்றின் அந்தக்கரையில் உள்ள பள்ளிக்கு சென்று மேல்நிலை படிப்பு படிக்க முடியும். ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆற்றைக்கடக்கும் எவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “நல்லவேளையாக ஒருவரும் இதுவரை தண்ணீரில் மூழ்கியதில்லை. ஆனால் நாங்கள் அனைவரும் ஒருமுறை அல்லது இருமுறை ஆற்றில் தவறி விழுந்திருக்கிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒவ்வொரு தெப்பம்போன்ற மிதவை படகிலும் 4 – 6 பெரியவர்கள் பயணிக்க முடியும். அதிக எடையும் படகை தலைகீழாக கவிழ்த்துவிடும். அவர்கள் மளிகை சாமான்கள் வாங்க செல்லும்போது அடிக்கடி செல்வதை தவிர்க்க தேவையானவற்றை அதிகளவில் வாங்கி வைத்துக்கொள்ளவும் வேண்டும். அதே நேரத்தில் தெப்பம் போன்ற மிதவை படகில் எடுத்துச்செல்லக்கூடிய அளவு மட்டுமே அவர்கள் பொருட்களை எடுத்துவரவும் வேண்டும்.
எப்போதும் அந்த அளவு சரியாக இருக்காது. “நான் ஒரு சில முறை பால், மளிகை மற்றும் தானியங்களுடன் ஆற்றில் விழுந்துள்ளேன்“ என்று வத்சலா கூறுகிறார். “வயதாகிவிட்டதால், நான் மார்க்கெட் செல்வதை நிறுத்திவிட்டேன். கிராமத்தில் உள்ள பல பெண்களுக்கு நீச்சல் தெரியாது. மேலும் புடவை கட்டிக்கொண்டு அதில் ஏறுவதும் சிரமம். எனவே பெண்கள் வீடுகளிலேயே இருந்துவிடுவார்கள். ஏதேனும் அவசரம் என்றால், எங்கள் கிராமத்தில் இருப்பது கொடுமைதான்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக வத்சலா விவரிக்கிறார். அவரது மருமகள் ஜிஜாபாய்க்கு உணவு நஞ்சாகி உடல் நலன் குறைவு ஏற்பட்டது. அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்து வந்ததால், அவரை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. “ஆனால், அந்த தெர்மக்கோல் மிதவையில் அவரால் ஏறமுடியவில்லை. அவருக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு இருந்ததால், நாங்கள் அவர் தன்னை சுதாரித்துக்கொண்டு ஏறும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரை அழைத்துக்கொண்டு ஆற்றை கடப்பதற்கு நீண்ட நேரமானது.
நாங்கள் தாமதமாக சென்றதால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. நாங்கள் மருத்துவமனையை அடைந்த உடனே அவர் இறந்துவிட்டார். “இதில் குறிப்பிடவேண்டியது, சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தால், அவர் உயிரோடு இருந்திருப்பாரா என்பதில்லை“ என்று தாவ்லே கூறுகிறார். “அவர்களின் குடும்ப உறுப்பினர் குறிப்பிட்ட நேரத்தில் அழைத்துச்செல்லப்பட்டிருந்தால், உயிரோடு இருந்திருப்பார் என்று கூறமுடியாது. இந்த விஷயத்தை மாவட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதில் அவரது முயற்சியும் முடியவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்தப்பிரச்னை இங்குள்ள இளம்வயது ஆண்களுக்கு திருமணமாவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. “எங்கள் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு நாங்கள் கடும் சிரமப்படுகிறோம். பெண்களை பெற்றவர்கள் தங்கள் மகள்கள் இங்கு வந்து மாட்டிக்கொள்வார்கள் என்று அஞ்சுகிறார்கள்“ என்று பாலாசாகேப் கூறுகிறார். “அதற்காக நாங்கள் அவர்களை குறை சொல்ல முடியாது. ஏனெனில் எங்கள் உறவினர்கள் கூட இங்கு அடிக்கடி வருவதில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த செய்தி புலிட்சர் மையம் வழியாக நிருபருக்கு கிடைத்த சுதந்திர இதழியல் மானியத்தில் மூலம் சேகரிக்கப்பட்டது.
தமிழில்: பிரியதர்சினி R.