இரண்டு இலைகளுக்கும் ஒரு மொட்டுக்கும் ரஜிந்தெர் தேடி அலைகிறார். அவரின் விரல்கள் சரிவான மலைப்பகுதியில் வரிசையாக நடப்பட்டிருக்கும் தேயிலைத் தாவரங்களின் மீது அலைகிறது. அருகே நிற்கும் அவரின் மனைவி கூடையுடன் தயாராக இருக்கிறார். இமயமலையின் தவுலதார் தொடரில் இருக்கும் இம்மலைப்பகுதியின் தேயிலை தாவரங்களை தாண்டி உயர்ந்து நிற்கும் ஓஹி மரங்கள் மனிதர்களை குள்ளமாக தெரிய வைக்கிறது.
அது அறுவடைக் காலம். அவசரமாக ரஜிந்தெர் சிங் தேடும் இலைகள் கிடைக்கவில்லை. தினமும் கங்க்ரா மாவட்டத்தின் தண்டா கிராமத்திலுள்ள வயலுக்கு அவர் வருவார். சும்னா அல்லது 20 வயது மகன் ஆரியன் அவருடன் வருவார்கள். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள்தான் தேயிலை பறிப்பதற்கான காலம். ஆனால் அவர் பறிப்பதற்கு எதுவுமில்லை.
“வெயிலை உங்களால் உணர முடியும். மழை எங்கே என தெரியாது!” என்கிறார் அவர் இமாச்சலப் பிரதேசத்தின் பலம்பூர் தாலுகாவில் இறந்து கொண்டிருக்கும் தாவரங்களை கவலையோடு பார்த்தபடி.
கடந்த இரண்டு வருடங்களில் பொழிந்த குறைவான மழையினால் ரஜிந்தெருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம் புரிந்து கொள்ளக் கூடியதே. 2016ம் ஆண்டின் ஐநா உணவு விவசாய நிறுவனத்தின் பன்னாட்டு அரசுகளின் அறிக்கையின்படி, “தேயிலை தோட்டங்களுக்கு நிலையற்ற மழை பாதிப்பை விளைவிக்கும்.” பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே மழைப்பொழிவை வேண்டும் தேயிலை மீதான காலநிலை மாற்ற விளைவை ஆராயும் அறிக்கை அது. ஏப்ரல் மாதத்தின் முதல் அறுவடைக்கு அதிக விலை தேவைப்படும். 800 ரூபாயிலிருந்து கிலோவுக்கு 1,200 வரை விலை இருக்கும்.
இரண்டு ஹெக்டேர் நிலத்தை மேலதிகமாக குத்தகைக்கு எடுத்திருந்ததால் 2022ம் வருடம் ரஜிந்தெருக்கு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். “என் வருமானம் அதிகரிக்கும் என நினைத்தேன்,” என்கிறார் அவர். மொத்தமாக தற்போது மூன்று ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் அவர், விளைச்சல் காலம் முடிந்ததும் கிட்டத்தட்ட 4,000 கிலோ தேயிலை அறுவடை செய்துவிடும் திட்டத்தில் இருந்தார். 20,000 ரூபாயை குத்தகைக்கு செலவழித்தார். தேயிலை தயாரிப்பு செலவின் 70 சதவிகிதம் தொழிலாளர் ஊதியம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்கிறார் அவர். “தோட்டத்தை பார்த்துக் கொள்வதில் உழைப்பு மற்றும் இடுபொருள் செலவுகள் நிறைய ஆகும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார். இலைகளை பதனப்படுத்துவதற்கான செலவு கூடுதல் செலவாகும்.


















