எந்த மொழியில் ஒரு தாய் கனவு காணுவாள்? கங்கை முதல் பெரியாறு கரை வரை எந்த மொழியில் அவள் குழந்தைகளுடன் பேசுவாள்? ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், கிராமம் பொறுத்து அவளின் நாக்கின் நிறம் மாறுகிறதா? ஆயிரக்கணக்கான மொழிகளும் லட்சக்கணக்கான வட்டார வழக்குகளும் அவளுக்கு தெரியுமா? எந்த மொழியில் அவள் விதர்பாவின் விவசாயிகளுடனும் ஹத்ராஸ் குழந்தைகளுடனும் திண்டுக்கல் பெண்களுடனும் பேசுவாள்? கவனியுங்கள்! உங்களின் தலையை செம்மண் மீது அழுத்துங்கள். காற்று உங்களின் முகத்தை உரசிச் செல்லும் மலை முகட்டில் நின்று கவனியுங்கள்! அவள் பேசுவது கேட்கிறதா? அவளின் கதைகள், பாடல்கள், அழுகுரல் யாவும் கேட்கிறதா? சொல்லுங்கள்? அவளின் மொழியை அடையாளம் கண்டீர்களா? சொல்லுங்கள், உங்களுக்கு தெரிந்த தாலாட்டை அவள் பாடுவது எனக்குக் கேட்பது போல் உங்களுக்குக் கேட்கிறதா?
நாக்குகள்
ஒரு
கத்தி நாக்குக்குள் இறங்குகிறது!
கூரிய முனைகள்
மென் சதைகளைக் கிழிக்கின்றன
என்னால் பேச முடியவில்லை
வார்த்தைகளையும் எழுத்துகளையும்
பாடல்களையும் எல்லாக் கதைகளையும்
எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும்
கத்தி பறித்துக் கொண்டது
ரத்தம்
வடியும் நாக்கிலிருந்து
ஓடும் ரத்த ஓடை
வாயிலிருந்து நெஞ்சுக்கு பாய்ந்து
வயிற்றை அடைந்து, பாலினத்துக்கும் சென்று
வளமான திராவிட மண்ணை எட்டியது.
ஒவ்வொரு துளியும் புதியவற்றை உருவாக்குகின்றது
கரிய பூமியிலிருந்து செம்புற்களின் இதழ்கள் முளைத்தன.
அடியில்
நூற்றுக்கணக்கான நாக்குகள்
ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில்
இறந்தவை புராதன இடுகாடுகளிலிருந்து எழுகின்றன
மறந்தவை வசந்தகாலப் பூக்கள் போல் மலர்கின்றன
என் தாய்க்கு தெரிந்த கதைகளையும் பாடல்களையும் பாடியபடி
கத்தி
என் நாக்குக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது
மழுங்கிய முனைகள் நடுங்குகின்றன
மொழிகளின் தேசத்திலிருந்து எழும் பாடலுக்கு பயந்து
தமிழில் : ராஜசங்கீதன்