”கிராமத்து பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம் நன்றாக இல்லை. ஆகவே என் மகள்களை வாரணாசிக்கு அழைத்து சென்றேன். அவர்களை பள்ளியில் சேர்த்த மூன்று மாதங்களிலேயே மீண்டும் எங்கள் கிராமத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுமென யார் நினைத்திருப்பார்?” என்றார் அருண் குமார் பஸ்வான். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் 15000 ரூபாய் ஊதியத்துக்கு ஓர் உணவகத்தில் மார்ச் மாத ஊரடங்கு வரை வேலை பார்த்தார்.
மே மாத தொடக்கத்தில், குடும்பத்துக்கான உணவுக்கு சம்பாதிக்க முடியாத நிலையை எட்டியதும் வாரணாசியிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பிகாரின் கயா மாவட்டத்திலுள்ள சொந்த ஊரான மாயாப்பூருக்கே திரும்பப் போய்விடுவது என தீர்மானித்தார் பஸ்வான். “குடும்பத்துடனும் இன்னும் பிறருடனும் அதிகாலை 3 மணிக்கு கிளம்பிவிடுவேன்,” என பஸ்வான் மே 8ம் தேதி என்னிடம் தொலைபேசியில் கூறினார். “நாங்கள் எல்லை வரை (உத்தரப்பிரதேச – பிகார்) நடந்து சென்று பின் பேருந்தில் செல்வோம். அங்கிருந்து பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என சொல்கிறார்கள். நடுவே ஏதேனும் லாரி எதிர்ப்பட்டாலும் எல்லையில் இறக்கிவிடச் சொல்லி கேட்டு பார்ப்போம்.”
பஸ்வான், அவருடைய 27 வயது மனைவி சபிதாவுடனும் 8 வயது மகள் ரோலி, 6 வயது மகள் ராணி மற்றும் 3 வயது மகன் ஆயுஷ் ஆகிய மூன்று குழந்தைகளுடனும் அடுத்த நாள் காலையில் கிளம்பிவிட்டார். மாநில எல்லை தாண்டி 53 கிலோமீட்டர்களில் இருக்கும் கரம்னசா செக்போஸ்ட்டுக்கு நடந்தனர். அங்கு பிகாரின் கைமுர் மாவட்ட நிர்வாகம் அமைத்திருக்கும் சுகாதார முகாமில் உடல் வெப்பத்துக்கான பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை இல்லையென கண்டறியப்பட்டால் மட்டுமே பேருந்துக்கு அனுமதி கிடைக்கும். “நல்லவேளையாக மாநில அரசுப் பேருந்தே கிடைத்தது. அங்கிருந்து கயாவுக்கு சென்றுவிட்டோம்,” என அவர் மே 11ம் தேதி மாயாப்பூர் சேர்ந்ததும் என்னிடம் சொன்னார். அங்கிருந்து கிராமத்துக்கு செல்வதற்கான பேருந்துக்கு காத்திருந்தார்கள். கிராமத்தை அடைந்ததும் அவர்கள் தனித்திருக்கும் சிகிச்சையில் இருந்தார்கள்.
வீடு திரும்பியதில் ராணி சந்தோஷமடைந்திருக்கிறார். ஆனால் ரோலி பள்ளிச் சீருடை அணியமுடியாமல் போய்விட்டதென புகார் செய்ததாக பஸ்வான் கூறுகிறார்.
பஸ்வான் 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பணிபுரிந்த வாரணாசி உணவகம் முதன்முதலாக மார்ச் 22ம் தேதி ஜனதா ஊரடங்குக்காக அடைக்கப்பட்டது. பிறகு தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25ம் தேதியிலிருந்து மீண்டும் அடைக்கப்பட்டது. கடைசி சம்பளத்தை அவர் மார்ச் மாதத்தில்தான் பெற்றார். ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து நிலைமை சிரமமானது. மாவட்ட அதிகாரிகள் கொடுத்த உணவுப் பொட்டலங்களுக்காக வாரணாசியில் அவர் ஒரு நாளைக்கு இரண்டு தடவை நீண்ட வரிசைகளில் காக்க வேண்டியிருந்தது.
மே 8ம் தேதி பஸ்வான் என்னிடம், “எங்களுக்கு கிடைத்த உணவுப் பொட்டலங்கள் இப்போது நிறுத்தப்பட்டு விட்டது. இங்கிருந்து கிளம்புவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” எனக் கூறினார்.






