குழந்தைகளுக்கான தெலுங்கு புராணக் கதைகளில் ஒரு கெட்ட மந்திரவாதி வருவார். அவர் பெயர் மாயலா பக்கீர். ஆந்திராவின் அனந்தபூரின் தெருக்களில் அந்த மந்திரவாதி தற்போது முறைத்து பார்த்தபடி நம்மை நோக்கி வருகிறார். அந்த மந்திரவாதியின் தற்போதைய அவதாரம் கிஷோர் குமார். மறைந்த, புகழ்பெற்ற பாடகர் அல்ல இந்த கிஷோர் குமார். ஆந்திர மாநில காவல்துறையில் ஆயுத ரிசர்வ் படையின் கான்ஸ்டபிளாக இருக்கிற கிஷோர் குமார் இவர். அவரது இந்த படம் ஏப்ரல் 2 ஆம் தேதி நகரின் மத்திய பகுதியில் உள்ள கடிகார கோபுரத்திற்கு அருகில் எடுக்கப்பட்டது.
தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள போலிஸ் படை பொதுவாக, பொதுமக்களுக்கு எதையாவது சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றால் அடி, உதை பாணியில்தான் மக்களிடம் பேசும். ஆனால், தற்போது அது மக்களிடம் பேசுவதற்கான மொழியாக - கலை வடிவத்தை எடுத்துச் சென்றுள்ளது. கைகளை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையின் ஒரு வீடியோ வெளியானது. அதில் பிரபலமான தெலுங்கு பாடலான ராமுலோ ரமலாவுக்கு ஏற்றவகையில் போலீசார் நடனமாடுவார்கள். தற்போது ‘அனந்தபூர் போலிஸ்’ என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தையும் அனந்தபூர் காவல்துறை ஆரம்பித்துள்ளது. அதில் பயமுறுத்தும் கொரோனா வைரஸ் தலைக்கவசத்துடன் கெட்ட மந்திரவாதி மாயலா பக்கீரின் படங்களையும் அது வெளியிட்டது., கொரோனா என்ற வார்த்தையின் ஒரு அர்த்தம் ‘கிரீடம்’. இன்னொரு அர்த்தமாக, தலைக்கவசம் என்பதையும் வைத்துக்கொள்வோம். அதில்தான் அந்தக் காவலர் கிஷோர் குமார் மந்திரவாதியின் வேடத்தில் இருந்தார்.
ஒரு பிரச்சார வாகனத்தோடும் போஸ்டர்களோடும் காவல்துறை மக்களிடம் செய்தியை கொண்டுசென்றுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய இடைவெளி தூரம் பற்றியும் அவர்கள் எவ்வாறு தங்களின் தனிப்பட்ட சுத்தம் பேண வேண்டும் என்பது பற்றியும் அவற்றுக்கான விதிமுறைகள், மக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை பற்றி இந்த பிரச்சாரம் மக்களிடம் செய்தியை எடுத்துச் சென்றது. மிகவும் அவசியமான பொருள்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வருவதற்காக அறிவிக்கப்பட்ட நேரங்களில், கடைத் தெருக்களில், மருத்துவமனைகளில் இந்த பிரச்சாரத்தை காவல்துறையினர் கொண்டு சென்றனர். மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியம் இல்லாத புதிய திசையில் காவல்துறையினர் செயல்படுகிற விஷயம் இது.
தமிழில்: த. நீதிராஜன்