“எங்கள் கிராமத்திற்கு கரோனா வைரஸ் வந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று சொல்லும் வர்தா மாவட்டத்தில் உள்ள 23 வயதாகும் பிரஃபுலா கலோகார், “ஆனால், இங்கு ஏற்கனவே பொருளாதாரம் பாதித்துவிட்டது“ என்கிறார்.
மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 ஊரடங்கு தொடங்கியது முதல் அன்றாடம் தேவைப்படும் 500 லிட்டர் பால் விநியோகம் நின்றுபோனது. அர்வி தாலுக்காவில் உள்ள 520க்கும் மேற்பட்டவர்களும், பெரும்பாலான குடும்பங்களும் நந்தா கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
போர் புலிகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள வார்தா மாவட்டத்தில் 40-50 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் நந்தா கோலி சமூகத்தினர் கலப்பின ஆயர்கள். இவர்கள் காவாலிஸ் என்றும் அறியப்படுகின்றனர். அவர்கள் நாட்டு பசுவினமான காலோ வகை பசுக்களை வளர்த்து வர்தா முழுவதும் பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், கோவா போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். ஊரடங்கு தொடங்கிய 15 நாட்களுக்குள் “வர்தாவில் உள்ள நந்தா கோலி சமூகத்தினருக்கு குறைந்தது 25,000 லிட்டர் பால் விற்பனை சரிந்திருக்கும்“ என்கிறார் கலோகார்.
சேமித்து வைக்க முடியாத பால், பால் பொருட்களுக்கான தேவை திடீரென சரிந்தது, பால் பண்ணைத் துறையை பாதித்துள்ளது. வீடுகளில் பால் வாங்குவது குறைந்ததோடு ஓட்டல்கள், உணவகங்கள், இனிப்பு கடைகளும் மூடப்பட்டு இருப்பது, பால் பொருட்களின் தேவையை மேலும் சரியச் செய்துள்ளது. தேசிய பால்வள வளர்ச்சி வாரியத்தின் மானியத்தில் இயங்கும் மதர் டைரி போன்ற பெரிய பால் பண்ணைகள் கூட பால் கொள்முதலை நிறுத்திவிட்டன.
நெடிய விநியோகச் சங்கிலி கொண்ட இத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஆயிரக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும். இந்த பொருளாதார இழப்பு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்கிறார் கலோகார். நந்தா கோலி சமூகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர் பிரஃபுலா மட்டும் தான். வர்தாவின் பருத்தி பொருளாதாரம் பற்றி நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டத்திற்காக அவர் ஆராய்ந்து வருகிறார்.






