கடந்தாண்டு ஷஷ்டி புனியா பள்ளியைவிட்டு நின்றுவிட்டார். பின்னர் அவர் சித்தாராம்பூரில் இருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருக்கு ரயிலில் சென்றார். சுந்தர்பன்ஸ் பகுதியில் அவரது கிராமம் உள்ளது. “நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். நான் பள்ளியில் மதிய உணவு உண்ண முடியாது“ என்று அவர் கூறுகிறார். ஷஷ்டிக்கு வயது 16. 9ம் வகுப்பு படிக்கிறார். மேற்கு வங்கத்திலும், இந்தியாவிலும், அரசுப்பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை மட்டும்தான் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்தாண்டு மார்ச் மாதத்தில், ஷஷ்டி தனது கிராமத்திற்கு திரும்பி வந்துவிட்டார். தெற்கு 24 பாரகனாஸ் மாவட்டத்தில் உள்ள காக்கத்வீப் வட்டத்தில் அவரது கிராமம் உள்ளது. ஊரடங்கு துவங்கியதால் அவர் தனது கிராமத்திற்கு வந்துவிட்டார். பெங்களூரில் அவர் வீட்டு வேலைகள் செய்கிறார். அவருக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் பணத்தை அவர் வீட்டிற்கு மாதந்தோறும் அனுப்ப வேண்டும். அதுவும் நின்றுவிட்டது.
ஷஷ்டியின் 44 வயதான தந்தை தனஞ்ஜாய் புனியா, சித்தாராம்புர் கடற்கரை பகுதியில் உள்ள நயாச்சார் தீவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவர் வெறுங்கையாலே மீன்கள் மற்றும் நண்டுகள் பிடிப்பார். சில சமயம் சிறிய வலைகளில் மீன் பிடிப்பார். அருகில் உள்ள சந்தையில் அவற்றை விற்பார். 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார்.
அவர்களின் மண் குடிசையில், தனஞ்ஜாயின் தாய் மஹாராணி, அவரது மகள்கள் ஜன்ஜாலி (21), ஷஷ்டி (18), மகன் சுப்ரத்தா (14) ஆகியோர் வசித்து வருகின்றனர். சுப்ரத்தா பிறந்த சில மாதங்கள் கழித்து அவரது மனைவி இறந்துவிட்டார். “தீவில் முன்புபோல் நிறைய மீன்களும், நண்டுகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. பல ஆண்டுகளாக எங்களின் வருமானம் பெருமளவு குறைந்துவிட்டது“ என்று தனஞ்ஜாய் கூறுகிறார். அவருக்கு தற்போது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. “நாங்கள் வாழ்வதற்கு மீன்களும், நண்டுகளும் பிடிக்க வேண்டும். அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் எங்களுக்கு என்ன கிடைக்கும்?“ என்று கேட்கிறார்.
அதனால், ஷஷ்டியை பள்ளிக்கு அனுப்பாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார். மற்ற மாணவர்களும் சுந்தர்பன்சின் பள்ளிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நின்று வருகிறார்கள். உப்பு மண், விவசாயத்தை கடினமாக்குகிறது. அகன்றுவரும் ஆறுகள் மற்றும் அடிக்கடி வீசும் புயல் காற்றும் அவர்களின் வீடுகளை அழித்து வருகிறது. அதன் விளைவாக, இந்தப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலானோர், பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். குழந்தைகளும், பதின்பருவ மாணவர்களும் வேலை தேடி வேறு இடங்குளுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் முதல் தலைமுறை மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பள்ளி திரும்புவதில்லை.
தெற்கு 24 பார்கனாசில் 768,758 மாணவர்கள் 3,584 அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். 432,268 மாணவர்கள் 803 மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வந்தார்கள். ஆசிரியர்கள் இல்லாமலும், கட்டிடங்கள் இடிந்தும் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. இது அவர்கள் மேலும் பள்ளிக்கு வருவதை தடுத்துவிட்டது.
“சுந்தர்பன்ஸ் பகுதி பள்ளியில் இடைநிற்றல் விகிதம் 2009ம் ஆண்டில் இருந்து அதிகரித்து வருகிறது“ என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் அசோக் பேரா கூறுகிறார். இவர் கோராமரா தீவில் சாகர் வட்டத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்தப்பகுதிகள் வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கும் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பகுதிகளாகும். அவர் இந்த பகுதியில் அயிலா புயல் ஏற்பட்ட காலத்தை குறிப்பிட்டு, பரவலாக ஏற்பட்ட அழிவு மற்றும் மேலும் மக்கள் இடம்பெயர்வதற்கு நிர்பந்தித்ததை கூறுகிறார். அப்போது முதல், பல புயல்களும், சூறாவளி காற்றும் இங்குள்ள நிலம் மற்றும் குளத்தில் உப்புத்தன்மையை அதிகரித்துவிட்டது. அதுவும், பள்ளிசெல்லும் பதின் பருவ குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதற்கு பெற்றோரை நிர்பந்தித்தது.
“இங்கு எங்கள் நிலம் மற்றும் வீடுகளை ஆறுகள் பறித்துச்சென்றுவிட்டன. புயல்கள் எங்கள் மாணவர்களை எடுத்துச்சென்றுவிட்டன“ என்று அமியோ மொண்டல் கூறுகிறார். இவர் கோசாபா வட்டத்தில் உள்ள அம்தாலி கிராமத்தில் உள்ள அமிர்தா நகர் உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியராவார். “ஆசிரியர்களாகிய நாங்கள் உதவியற்றவர்களாகிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த காலியான வகுப்பறைகள், சட்டம் மற்றும் உலகளவிலான இலக்குகளை கடந்து வேறு களநிலவரத்தை பேசும். 2015ம் ஆண்டில், ஐநாவின் 2030க்கான வளர்ச்சி இலக்குகளில், 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதில் நான்காவது அம்சம், “அனைவரையும் உள்ளடக்கிய, சமமான, தரமான கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். வாழ்நாள் முழுதும் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்“ என்பதாகும். நாட்டின், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009, கல்வி குழந்தைகளின் உரிமை என்கிறது. அது 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் அதில் சேர்க்கிறது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2005, அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களை கட்டாயம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகை திட்டங்களை, பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக அறிவித்துள்ளது.
ஆனால், சுந்தர்பன்ஸ் பகுதியில் உள்ள பள்ளிகள் மெதுவாக மாணவர்களை இழந்துவருகிறது. ஒரு ஆசிரியராக ஒவ்வொரு மாணவராக வருகையை நிறுத்தி, காலியாகிக்கொண்டு வரும் வகுப்பறைகளை பார்க்கும்போது, குறைந்துகொண்டே வரும் நிலத்தின் நடுவில் நிற்பதைபோல் உணர்கிறேன்.
“படிப்பதால் என்ன ஆகும்? நான், எனது தந்தையைப்போல், ஆற்றில் மீனும் நண்டும் பிடிக்கத்தான் வேண்டும்“ என்று அம்பன் புயல் இந்தாண்டு மே 20ம் தேதி பத்தரபிரட்டிமாவில் உள்ள அவரது கிராமம் புராபுரிரை தாக்கிய பின்னர் எனது மாணவர் ராபின் புனியா கூறினார். ராபின் (17), இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியை இடையில் நிறுத்திவிட்டு, மீன்பிடிப்பதில் அவரது தந்தைக்கு உதவி வருகிறார். அம்பன் புயல் அவர்களது வீட்டை சிதைத்துவிட்டது. அவரது கிராமத்தை உப்புநீர் வெள்ளத்தில் மிதக்கவிட்டது. சப்தமுகி ஆற்றை காட்டி, “இந்த ஆறு எங்களை நாடோடிகளாக்கிவிடும்“ என்று கூறுகிறார்.
இங்குள்ளவர்களில் விடுபட்டவர் 17 வயதான மொஷ்டாக்கின் ஜமாதர், ஷஷ்டியின் கிராமத்தைச் சேர்ந்தவர். “எனக்கு படிப்பில் எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை“ என்று அவர் கூறுகிறார். அவர் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் பள்ளியை இடையில் நிறுத்தியது குறித்து இவ்வாறு கூறுகிறார். “படிப்பதால் என்ன வரப்போகிறது?“ என்று அவரது தந்தை எலியாஸ் ஜமாதர் கேட்கிறார். “சம்பாதித்து குடும்பத்திற்கு உதவுவதற்காக நான் எனது மகனை முழு நேர மீன்பிடி வேலையில் அமர்த்திவிட்டேன். கல்வியால் ஒன்றும் வரப்போவதில்லை. அது எனக்கு உதவாது“ என்று மேலும் கூறுகிறார். 49 வயதான எலியாஸ், 6ம் வகுப்புக்கு பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு, குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க துவங்கினார். பின்னர் கொத்தனார் வேலைக்காக கேரளாவுக்கு இடம்பெயர்ந்தார்.
பள்ளியில் இருந்து இடையில் நின்றுவிடுவது குறிப்பாக பெண் குழந்தைகளை பாதிக்கிறது. அதில் பெரும்பாலானோர் வீடுகளில் தங்கிவிடுகிறார்கள் அல்லது திருமணம் செய்துகொள்கிறார்கள். “நான் ராக்கி ஹஸ்ரா (7ம் வகுப்பு மாணவி) விடம் ஏன் 16 நாட்களாக பள்ளி செல்லவில்லை என்று நான் கேட்டதற்கு அவர் அழத்துவங்கிவிட்டார்“ என்று திலிப் பைரங்கி கூறுகிறார். அவர் 2019ம் ஆண்டு இவ்வாறு என்னிடம் கூறினார். அவர் காக்த்வீப் வட்டத்தின் ஷிப்கலிநகர் கிராமத்தின் ஐஎம் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். “அவர்களின் பெற்றோர்கள் ஹீக்ளி நதியில் நண்டு பிடிக்கச்செல்லும்போது, அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்“ என்று தெரிவித்தார்.
இந்த இடைநிற்றல்களை ஊரடங்கு அதிகரித்துவிட்டது. அமல் ஷீட், புராபுரிர், டாட் கிராமத்தைச் சேர்ந்த மீனவர். அவரது 16 வயது மகள் கும்கும் 9ம் வகுப்பு படித்துத்துக்கொண்டிருந்தபோது அவர்கள் குடும்பத்தின் பொருளாதார பிரச்னையை எளிதாக்குவதற்காக அவரது திருமணத்திற்காக படிப்பை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். “இந்த நதி வழக்கம்போல் மீன்களை தருவதில்லை“ என்று அமல் கூறுகிறார். அவரது 6 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர். “எனவேதான் அவர் படித்துக்கொண்டிருந்தபோதும், நான் ஊரடங்கு காலத்திலே அவருக்கு திருமணத்தை முடித்துவிட்டேன்“ என்று மேலும் கூறுகிறார்.
223 மில்லியன் குழந்தை மணப்பெண்ணில் 22 மில்லியன் மணப்பெண்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்க என்று 2019ம் ஆண்டு யுனிசெப் அறிக்கை அளித்துள்ளது.
பெங்கால் அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தபோதும், பெருமளவிலான குழந்தை திருமணங்கள் இங்கு நடக்கிறது (சுந்தர்பன்ஸ் பகுதியில்). பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பெண்களுக்கு கல்வி கொடுப்பது குடும்பத்திற்கு உதவப்போவதில்லை என்று கருதுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கான செலவு குறையும், அதை சேமிக்கலாம் என்று கருதுகின்றனர்“ என்று பதர்பிராட்டிமா வட்டத்தின் ஷிப்நகர் மோக்ஷதா சுந்தரி வித்யாமந்திரின் தலைமை ஆசிரியர் பிமான் மைட்டி கூறுகிறார்.
“கோவிட் – 19 ஊரடங்கையொட்டி, பள்ளிகள் திறக்கப்படாமல் நீண்ட நாட்களாக பூட்டிக்கிடகின்றன. பாடங்களும் நடைபெறுவதில்லை“ என்று மைட்டி தொடர்கிறார். “கல்வி கற்பதை மாணவர்கள் இழந்துவிட்டார்கள். இதற்குப்பின் மாணவர்கள் வர மாட்டார்கள். அவர்கள் சென்றுவிடுவார்கள். அவர்களை கண்டுபிடிக்க முடியாது“ என்று அவர் வருந்துகிறார்.
ஜீன் மாதத்தின் நடுவில் ஷஷ்டி புனியா பெங்களூரில் இருந்து வீடு திரும்பியபோது, அவரையும் திருமணம் செய்ய நிர்பந்தித்தார்கள். தபாஸ் நய்யா (21), அதே பளளியில் படித்தவர். 17 வயதில் 8ம் வகுப்பு படித்தபோது, அவருக்கு படிப்பில் விருப்பமில்லை. குடும்பத்திற்கு உதவ விரும்பி பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார். அதனால், கேரளாவில் கொத்தனார் வேலையை தேடிக்கொண்டார். ஊரடங்கை தொடர்ந்து மே மாதத்தில் ஊர் திரும்பிவிட்டார். “அவர் தற்போது சிப்கலிங்கநகரில் உள்ள கோழிகடையில் பணிபுரிகிறார்“ என்று ஷஷ்டி கூறுகிறார்.
அவரது மூத்த சகோதரி ஜன்ஜாலி புனியா (21) தனது 18 வயதில் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். அவர் பார்க்கும் திறனும், கேட்கும் திறனுமற்ற மாற்றுத்திறனாளி. அவர் உத்பால் மொண்டல் (27) என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரும் குல்பி வட்டத்தில் உள்ள அவரது கிராமமான நியுடன் தியான்கிரான்சாரில் உள்ள பள்ளியிலிருந்து 8ம் வகுப்பு படித்தபோது இடையில் நின்றவர்தான். மொண்டல் குழந்தையாக இருந்தபோது அவருக்கு போலியோ தாக்கியது. அது முதல் அவரால் நடக்க முடியாது. “நான் எனது கால்களால் நடந்து பள்ளி சென்றதில்லை. சர்க்கர நாற்காலி வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை“ என்று அவர் கூறுகிறார். நான் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும், என்னால் படிக்க முடியவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
“எனது இரண்டு பேத்திகளும் படிக்க முடியவில்லை“ என்று ஜன்ஜாலி மற்றும் ஷஷ்டியின், அவர்களை வளர்த்த 88 வயதான பாட்டி மஹாராணி கூறுகிறார். தற்போது கோவிட்-19 ஊரடங்ககை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், “எனது பேரனும் தொடர்ந்து படிக்க முடியுமா என்று தெரியவில்லை“ என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.