“நம்ம கெஸ்ட் ஹவுஸ் பத்திதான் விசாரிக்க வந்துருக்காங்க” என தன் அறைவாசியான லாவன்யா-விடம் கூறுகிறார் ராணி. எங்கள் வருகையின் நோக்கம் தெரிந்ததும் இருவரும் நிம்மதி அடைகிறார்கள்.
இந்த கெஸ்ட் ஹவுஸ் குறித்து ஜனவரி மாதம் மதுரை மாவட்டத்தின் டி.கல்லுப்பட்டி வட்டத்திலுள்ள கூவலபுரம் கிராமத்தில் கெஸ்ட் ஹவுஸ் பற்றி நாங்கள் விசாரிக்க சென்றபோது, அங்குள்ள தெருக்களில் பயம் தொற்றிக் கொண்டது. கிசுகிசுப்பான தொனியில் பேசிய ஆண்கள், தூரத்தில் ஒரு திண்ணையில் அமர்ந்திருந்த இரண்டு இளம் தாய்மார்களை எங்களிடம் சுட்டிகாட்டி, அவர்களிடம் செல்லுமாறு கூறினர்.
“அது மறுபக்கத்தில் உள்ளது. வாங்க போகலாம்” என கூறிய பெண்கள், கிராமத்திலிருந்து அரை கிமீ தள்ளியிருந்த ஒதுக்குப்புறமான இடத்திற்கு எங்களை கூட்டிச் சென்றனர். கெஸ்ட் ஹவுஸ் என்று சொல்லப்படுகிற இந்த இரண்டு தனித்த அறைகளும், நாங்கள் சென்றபோது யாரும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. ஆச்சர்யமளிக்கும் வகையில், இரண்டு சிறிய கட்டிடங்களுக்கு இடையே நின்ற வேம்பு மரத்தின் கிளைகளில் சாக்கு மூட்டைகள் தொங்கி கொண்டிருந்தன.
மாதவிலக்காகும் பெண்களே இந்த கெஸ்ட் ஹவுஸில் “விருந்தினர்களாக” இருக்கிறார்கள். யாருடைய அழைப்பின் பேரிலேயோ அல்லது தங்கள் விருப்பதினாலோ அவர்கள் இங்கு வரவில்லை. ஊர் கட்டுப்பாட்டிற்கு பயந்து தங்கள் நேரத்தை இங்கு செலவழிக்கின்றனர். மதுரையிலிருந்து 50கிமீ தள்ளியுள்ள இந்த கிராமத்தில் 3000 மக்கள் வசிக்கின்றனர். கெஸ்ட் ஹவுஸில் நாங்கள் பார்த்த இரண்டு பெண்களும் இன்னும் ஐந்து நாட்களுக்கு இங்குதான் தங்கியாக வேண்டும். எனினும், பருவம் அடைந்த இளம் பெண்களும், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தையுடனும் ஒருமாத காலத்திற்கு இங்கு தங்க வேண்டும்.
“எங்கள் சாக்குகளை அறையில் எங்களிடமே வைத்துக் கொள்வோம்” என விவரிக்கிறார் ராணி. மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் பயன்படுத்த தனித்தனி பாத்திரங்கள் இந்த சாக்குகளில் உள்ளது. வீட்டிலிருந்து உறவினர்கள் சமைத்து வரும் உணவுகளை, இந்த பாத்திரங்களில் வைத்து பெண்களுக்கு கொடுக்கிறார்கள். உடல்ரீதியான தொடுதலை தவிர்ப்பதற்காக, அங்குள்ள வேம்பு மரத்தில் பாத்திரங்களை விட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு “விருந்தினருக்கும்”, அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனித்தனி பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு இரண்டு அறைகள் மட்டுமே இருப்பதால், அதை பகிர்ந்துதான் ஆக வேண்டும்.
ராணி, லாவன்யா போன்ற கூவலபுரத்து பெண்கள், மாதவிலக்கு சமயத்தில் இந்த அறையில் தங்குவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டி, இதுபோன்ற ஒரு அறையை முதன் முதலாக இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டினர். திருமணம் முடிந்த இருவருக்கும் (ராணி, லாவன்யா) 23 வயதாகிறது. லாவன்யாவிற்கு இரண்டு குழந்தைகளும் ராணிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரின் கணவர்களும் விவசாய தொழிலாளர்களாக உள்ளனர்.
“இப்போது, நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம். சில சமயங்களில் எட்டு அல்லது ஒன்பது பெண்கள் இருக்கும்போது நெருக்கடியாக இருக்கும்” என கூறுகிறார் லாவன்யா. இது வழக்கமாக நடப்பதால், இரண்டாது அறை கட்டி தருகிறோம் என பரந்த உள்ளத்துடன் கிராம பெரியோர்கள் வாக்குறுதி கொடுத்தனர். அதற்கேற்ப ஊரின் இளைஞர் நல அமைப்பு நிதி திரட்டி, 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-வது அறை கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது இரண்டு பேர் மட்டுமே இருந்தாலும், பெரிதாகவும், காற்று வசதியாகவும், வெளிச்சமாகவும் இருப்பதால் ராணியும் லாவன்யாவும் புதிய அறையை உபயோகிக்கின்றனர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பிற்போக்குதனமான வழக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறையின் ஓரத்தில் லேப்டாப் ஒன்றுள்ளது. இது லாவன்யா பள்ளியில் படிக்கும் போது மாநில அரசாங்கம் கொடுத்தது. “இங்கு அமர்ந்து கொண்டு எப்படி எங்கள் நேரத்தை போக்குவது? என் லேப்டாப்பில் உள்ள பாடல்கள் அல்லது திரைப்படங்களை பார்ப்போம். வீட்டுக்கு செல்லும்போது என் லேப்டாப்பையும் எடுத்து சென்று விடுவேன்” என்கிறார் லாவன்யா.
“மாசடைந்த” பெண்களுக்கான இடம் என கூறப்படும் முட்டுதுறையை, “கெஸ்ட் ஹவுஸ்” என நாசுக்காக கூறுகிறார்கள். “எங்கள் குழந்தைகள் முன் இதை கெஸ்ட் ஹவுஸ் என்றே கூறுகிறோம். அப்போதுதான் இது எதற்கென்று அவர்களுக்கு தெரியாது. உண்மையிலேயே முட்டுதுறையில் இருப்பது அவமானகரமான விஷயம். குறிப்பாக கோயில் திருவிழா அல்லது பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் சமயத்தில் அல்லது இந்த வழக்கத்தை பற்றி தெரியாத உறவினர்கள் வெளியூரிலிருந்து வரும்போது”. மாதவிலக்கு சமயத்தில் கண்டிப்பாக பெண்கள் தனியாக இருக்க வேண்டும் என்ற வழக்கம் கடைபிடிக்கப்படும் மதுரை மாவட்டத்தின் ஐந்து கிராமங்களில் கூவலபுரமும் ஒன்று. புதுபட்டி, கோவிந்தநல்லூர், சப்தூர் அழகாபுரி, சின்னையாபுரம் ஆகியவை இதே வழக்கத்தை பின்பற்றும் மற்ற கிராமங்களாகும்.
இத்தகைய தனிமைப்படுத்தல் களங்கத்திற்கு இட்டுச் செல்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கெஸ்ட் ஹவுஸிற்கு வராத திருமணம் ஆகாத இளம் பெண்களைப் பற்றி கிராமத்தில் தவறாக பேசப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதான பானு (உண்மையான பெயர் அல்ல) கூறுகையில், “எனது மாதவிடாய் சுழற்சி எப்படி வேலை செய்கிறது என்பது இவர்களுக்கு புரியவில்லை. 30 நாட்களுக்கு ஒருமுறை நான் முட்டுதுறைக்கு செல்லாவிட்டால், பள்ளிகூடத்திற்கு நீ போக முடியாது என கூறுகிறார்கள்”.
“எனக்கு எந்த ஆச்சர்யமும் ஏற்படவில்லை” என்கிறார் மாதவிடாயை சுற்றியுள்ள தவறான கற்பிதங்கள் குறித்து தொடர்ந்து பேசிவரும் பாண்டிசேரியை சேர்ந்து பெண்ணிய எழுத்தாளரான சாலை செல்வம். ”பெண்களை கீழாகவும், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாவும் நடத்தவே இந்த உலகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கலாச்சாரம் என்ற பெயரில் அவளது அடிப்படை உரிமையை மறுக்கும் மற்றுமொரு வாய்ப்பாகவே இந்த தடை உள்ளது. “ஒருவேளை ஆண்களுக்கு மாதவிலக்கு வந்திருந்தால், இப்படித்தான் வித்தியாசமாக இருந்திருக்குமா?” என தனது பிரபலமான கட்டுரையில் ( “ஒருவேளை ஆண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்”) பெண்ணியவாதி குளோரியா ஸ்டீனெம் கேட்டிருப்பார்.”
கூவலபுரத்திலும் சாப்டூர் அழகாபுரியிலும் நான் சந்தித்த பல பெண்களும், பாகுபாடுகளை பிறர் கண்ணில் தெரியாமல் கலாச்சாரம் மறைக்கிறது என்று செல்வம் கூறிய கருத்தை வலுப்படுத்துகின்றனர். ராணியும் லாவன்யாவும் வற்புறுத்தலின் பேரில் தங்கள் கல்வியை பணிரெண்டாம் வகுப்பிற்கு மேல் தொடரவில்லை. இருவருக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. “பேறு காலத்தின் போது எனக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து எனக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. முட்டுதுறை செல்வதற்கு கொஞ்ச நாள் தள்ளினாலும், மறுபடியும் உனக்கு குழந்தை பிறக்கப்போகிறதா என கிராமத்தினர் என்னிடம் கேட்பார்கள். எனது பிரச்சனைகள் அவர்களுக்கு புரிவதேயில்லை” என்கிறார் ராணி
இந்த வழக்கம் எப்போது தொடங்கியது என ராணி, லாவன்யா மற்றும் கூவலபுரத்தைச் சேர்ந்த மற்ற பெண்களுக்கு தெரியவில்லை. “எங்கள் அம்மாக்கள், பாட்டிகள், பாட்டிக்கு பாட்டிகளும் இதேப்போன்று தான் தனிமையாக இருந்திருப்பார்கள். அதனால் நாங்களும் அவர்களைப் போலவே இருக்கிறோம்” என்கிறார் லாவன்யா.
சென்னையை சேர்ந்த மருத்துவரும் திராவிட சிந்தனையாளருமான டாக்டர் எழிலன் நாகநாதன் இந்த வழக்கத்திற்கு புதியதான ஆனால் பகுத்தறிவு சார்ந்த விளக்கம் ஒன்றை தருகிறார். “நாம் வேட்டையாடிகளாக இருக்கும் போதே இந்த வழக்கம் தோன்றியிருக்க வேண்டும்” என அவர் நம்புகிறார்
தமிழ் பதமான வீட்டுக்கு தூரம் ( மாதவிலக்கான பெண்களை தனிமைப்படுத்தி வைப்பது ) என்பது உண்மையிலேயே காட்டுக்கு தூரம் என்பதிலிருந்து வந்தது. ரத்த வாசனையை (மாதவிடாய், குழந்தை பிறப்பு அல்லது பருவம் அடைதல் சமயத்தில் ஏற்படும்) முகர்ந்து வரும் காட்டு விலங்குகள் தங்களை வேட்டையாடி விடும் என்ற நம்பிக்கையில், பெண்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த வழக்கம் நாளடைவில் பெண்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்டது”.
கூவலபுரம் நாட்டுப்புறவியலில் பெரிதாக பகுத்தறிவு இல்லை. சித்தருக்கு மரியாதை செலுத்தும் நம்பிக்கை இது என கிராமத்தினர் கூறுகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு சுற்றியுள்ள ஐந்து கிராமங்களும் கட்டுப்பட்டுள்ளது. “சித்தர் எங்களோடு வாழ்ந்த மறைந்தவர். அவர் சக்திவாய்ந்த கடவுள்” என்கிறார் 60 வயதாகும் மு. முத்து. கூவலபுரத்தில் உள்ள சித்தர் தங்கமுடி சாமி கோயிலுக்கு இவர்தான் தலைமை நிர்வாகி. “புதுபட்டி, கோவிந்தநல்லூர், சப்தூர் அழகாபுரி, சின்னையாபுரம் மற்றும் எங்களுடைய கிராமமும் சித்தரின் மனைவிகள் என நாங்கள் நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உடைக்கும் எந்த முயற்சியும் கிராமத்தை அழிவிற்கு இட்டுச் செல்லும்”.
தனது வாழ்க்கையின் பெரும்பங்கை கூவலபுரத்தில் கழித்த ராசு, இங்கு எந்த பாகுபாடும் இல்லை என மறுக்கிறார். அவர் கூறுகையில், “கடவுளுக்கு மரியாதை செலுத்தவே இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. தங்குவதற்கு நல்ல அறை, காற்றாடி, போதிய இடம் என எல்லா வசதியும் பெண்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது”.
அவருடைய சகோதரியான முத்துரொலி அவருடைய காலத்தில் இதையெல்லாம் அனுபவிக்க முடியவில்லை. “வேயப்பட்ட கூரையின் கீழ்தான் நாங்கள் தங்கினோம். அப்போது மின்சாரமும் கிடையாது. இன்றுள்ள பெண்களுக்கு எல்லா வசதிகள் கிடைத்தும் குறை கூறுகிறார்கள். ஆனால் இங்குள்ள முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் நாம் மண்ணாகிப் போவோம்” என உறுதியோடு கூறுகிறார்.
கிராமத்திலுள்ள பல பெண்கள் இந்த கதையை நம்புகின்றனர். மாதவிலக்கை மறைத்த பெண் ஒருவருக்கு, தொடர்ந்து கனவில் பாம்பு வந்ததாகவும், பாரம்பரியத்தை உடைத்து முட்டுதுறைக்கு போகாமல் இருந்ததால் கடவுள் தன் மீது கோபமாக உள்ளார் என்பதற்கான அறிகுறியே இது எனவும் அதற்கு அவர் விளக்கம் தருகிறார்.
இந்த உரையாடல்கள் அனைத்திலும் ஒன்று மட்டும் சொல்லாமல் விடுபட்டுள்ளது. “வசதியான” கெஸ்ட் ஹவுஸ் என்று கூறப்படும் அந்த அறைகளில் கழிவறை கிடையாது. “நாப்கின் மாற்றவோ அல்லது அவசரத்திற்கோ தூரத்தில் உள்ள வயல்வெளிக்கே நாங்கள் செல்வோம்” என்கிறார் பானு. பள்ளிக்கு செல்லும் இளம் பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் ( பயன்படுத்திய நாப்கின்களை எரித்தோ அல்லது புதைத்தோ அல்லது கிராமத்துக்கு வெளியேயோ அப்புறப்படுத்துகின்றனர்). ஆனால் வயதான பெண்கள் இன்னும் பழைய துணியை துவைத்து மறுபடியும் பயன்படுத்துகிறார்கள்.
முட்டுதுறைக்கு வெளியே திறந்தவெளியில் தண்ணீர் குழாய் உள்ளது. கிராமத்தில் உள்ள மற்றவர்கள் யாரும் இதை தொட மாட்டார்கள். “நாங்கள் எடுத்துச் சென்ற போர்வையும் துணியும் துவைக்கவில்லை என்றால், கிராமத்திற்குள் நாங்கள் காலடி எடுத்து வைக்க முடியாது” என ராணி கூறுகிறார்.
600 நபர்கள் வசிக்கும் அருகிலுள்ள சாப்டூர் அழகாபுரி கிராமத்தில், ஒருவேளை இந்த பழக்கத்தை மீறினால், தங்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும் என இங்குள்ள பெண்கள் நம்புகின்றனர். கற்பகம் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) சென்னையை சேர்ந்தவர். திருமணமாகி வந்த புதிதில் அவருக்கு இந்த வழக்கம் ஆச்சரியமாக இருந்தது. “ஆனால் கலாச்சாரம், மீற முடியாது. இப்போது நானும் என் கணவரும் திருப்பூரில் பணிபுரிகிறோம். எப்போதாவது விடுமுறைக்குதான் இங்கு வருவோம்.” மாடிப்படிகளுக்கு கீழுள்ள சின்ன இடம்தான் மாதவிலக்கு நேரங்களில் இவருக்கான இடம்.
சாப்டூர் அழகாபுரியில் இருக்கும் முட்டுதுறை சிறியதாகவும், இடிந்து விழும் நிலையிலும் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது. இதனால், மாதவிலக்காகும் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தெருவில் தங்குகின்றனர். “மழைகாலத்தில் முட்டுதுறைக்கு சென்று விடுவோம்” என்கிறார் 41 வயதாகும் லதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)
இதில் முரணான விஷயம் என்னவென்றால், கூவலபுரம் மற்றும் சாப்டூர் அழகாபுரி கிராமங்களின் பெரும்பாலான வீடுகளில் ஏழு வருடங்களுக்கு முன்பு அரசாங்கம் கட்டிக் கொடுத்த கழிவறை உள்ளது. இளைஞர்களும் சிறுவர்களும் இதை பயன்படுத்தினாலும், வயதானவர்களும் பெண்களும் வயல்வெளிக்கே செல்கின்றனர். ஆனால் இரண்டு கிராமங்களில் உள்ள முட்டுதுறையிலும் கழிப்பறைகள் கிடையாது.
“மாதவிலக்கு காலம் தொடங்கியதும் முட்டுதுறையில் தங்குவதற்காகச் செல்லும் போது கூட, பிரதான சாலையில் நாங்கள் செல்ல முடியாது. யாருமே பயன்படுத்தாத சுற்றுப்பாதையில் சென்று தான் முட்டுதுறையை அடைய வேண்டும்” என்கிறார் 20 வயதாகும் ஷாலினி. மதுரையில் உள்ள கல்லூரியில் மைக்ரோபயாலஜி படித்து வரும் ஷாலினி, ‘ரகசியத்தை உடைத்து விடுவோம்’ என்ற பயத்தில் மாதவிடாய் குறித்து மற்ற மாணவிகளிடம் ஒருபோதும் விவாதிப்பதில்லை. “இது ஒன்றும் பெருமிதமான விஷயம் இல்லை” என்கிறார் ஷாலினி.
சாப்டூர் அழகாபுரியைச் சேர்ந்த இயற்கை விவசாயியான 43 வயதாகும் டி. செல்வகனி, இந்த தடை குறித்து கிராம மக்களிடம் எவ்வளவோ பேச முயற்சித்துள்ளார். “ஸ்மார்ட்போன்களையும் லேப்டாப்பையும் பயன்படுத்தும் நாம், 2020-ம் ஆண்டிலும் மாதவிலக்காகும் நம் பெண்களை தனிமைப்படுத்தி வைக்கிறோம்?” என அவர் கேட்கிறார். அவர் கூறிய காரணம் எதுவும் வேலை செய்யவில்லை. “மாவட்ட கலெக்டரே இங்கு வந்தால் இந்த வழக்கத்தை பின்பற்றியாக வேண்டும்” என வலியுறுத்துகிறார் லதா. “மருத்துவமணைகளில் பணியாற்றும் செவிலியர்கள் கூட ( படித்து வேலைபார்க்கும் மற்ற பெண்களும் ) மாதவிலக்கு சமயத்தில் வெளியே தங்குகிறார்கள். உங்கள் மனைவியும் கூட இதை கடைபிடித்தாக வேண்டும். இது நம்பிக்கை சார்ந்த விஷயம்” என செல்வமனியிடம் கூறுகிறார் லதா.
இங்கு ஐந்து நாள் வரை பெண்கள் தங்க வேண்டும். புதிதாக பருவமடைந்த இளம்பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் ஒரு மாதம் முழுதும் தங்க வைக்கப்படுகிறார்கள்
சாலை செல்வம் கூறுகையில், “இதுபோன்ற கெஸ்ட் ஹவுஸ்களை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நீங்கள் பார்க்க முடியும். இதற்கு காரணமாக வேறு வேறு கோயில்களையும் வித்தியாசமான காரணங்களையும் கூறுவார்கள். நாம் எவ்வுளவுதான் மக்களிடம் பேச முயற்சித்தாலும், நம்பிக்கை சார்ந்த விஷயமென்பதால் அவர்கள் நாம் பேசுவதை காது கொடுத்து கேட்பதேயில்லை. அரசியல் அதிகாரத்தால் மட்டுமே இதை மாற்ற முடியும். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களோ, கெஸ்ட் ஹவுஸை நவீனப்படுத்தி தருகிறோம், அதிக வசதிகளை செய்து தருகிறோம் என ஓட்டு கேட்டு கிராமத்திற்கு வரும்போது வாக்குறுதி கொடுக்கிறார்கள்”.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இந்த கெஸ்ட் ஹவுஸ் வழக்கத்தை நிறுத்த முடியும். நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் இது கடினமானது என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற தீண்டாமையை இன்னும் எத்தனை காலத்திற்கு அனுமதிக்க போகிறோம். அரசாங்கம் கடுமையான முடிவை எடுத்தால், நிச்சயம் எதிர்ப்பு இருக்கும். ஆனால், இந்த வழக்கம் இத்தோடு முடிய வேண்டும். என்னை கேட்டால், இதையெல்லாம் மக்கள் விரைவிலேயே மறந்து விடுவார்கள்” என்கிறார் செல்வம்.
மாதவிலக்கை சுற்றியுள்ள தடைகள் மற்றும் அவமானம் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதியது அல்ல. மாதவிலக்கை சுற்றி பின்னப்பட்டுள்ள அவமானத்தால், கஜா புயல் தஞ்சாவூரை தாக்கியபோது பட்டுக்கோட்டை வட்டம் அனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதேயான விஜயா பலியானார். தனது முதல் மாதவிலக்கு சமயத்தில் வீட்டிற்கு அருகேயுள்ள குடிசையில் தனியே இருக்க வைக்கப்பட்டுள்ளார் அந்த சிறுமி. (வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் புயலில் பிழைத்து கொண்டனர்)
“இந்த தடை தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் உள்ளது, இதன் அளவுகோல் வேண்டுமானால் ஊருக்கு ஊர் மாறலாம்” என்கிறார் ஆவணப்பட இயக்குனர் கீதா இளங்கோவன். 2012-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மாதவிடாய் ஆவணப்படம், மாதவிடாயை சுற்றியுள்ள தடை பற்றி பேசுகிறது. தனிமையப்படுத்தும் விதம் வேண்டுமானால் சில நகர்ப்புற பகுதிகளில் மாறியிருக்கலாம், ஆனால் இன்றும் அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கீதா கூறுகையில், “அந்த மூன்று நாட்கள் என் மகளை சமயலைறைக்குள் நுழைய விட மாட்டேன். அவள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது என அரசு அதிகாரியின் மனைவி ஒருவர் என்னிடம் முன்பு ஒருமுறை கூறியிருக்கிறார். நீங்கள் என்னதான் வேறு வேறு வார்த்தைகளில் கூறினாலும், இது பாகுபாடுதான்” என்கிறார்.
மாதவிடாயை அவமானமாக பார்ப்பது எல்லா மதங்கள் மற்றும் சமூக பொருளாதார பின்னனியில் காணப்பட்டாலும், அவை வேறு வேறு வடிவில் உள்ளதாக கூறுகிறார் இளங்கோவன். “எனது ஆவணப்படத்திற்காக, இங்கிருந்து அமெரிக்கா சென்ற பெண்ணிடம் பேசினேன். இன்றும் கூட மாதவிலக்கு சமயத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறார். இது என் தனிப்பட்ட விருப்பம் என அவர் கூறுகிறார். இவரைப் போன்ற ஆதிக்க சாதி பெண்களுக்கு தனிப்பட்ட விருப்பமாக இருப்பது, இறுக்கமான ஆணாதிக்க அமைப்பில் எந்த அதிகாரமும் இல்லாத குரலற்ற பெண்களுக்கு சமூக அழுத்தமாக மாறுகிறது”.
“இந்த தூய்மை கலாச்சாரம் ஆதிக்க சாதியினருக்கு உரியவை என்பதை நாம் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் இளங்கோவன். ஆனால் இது சமூகத்தில் உள்ள எல்லாரையும் பாதிக்கிறது. கூவலபுரத்தில் இதை பின்பற்றும் பெரும் பகுதியினர் தலித் மக்களே. மேலும் அவர் கூறுகையில், “எங்கள் ஆவணப்படத்தின் இலக்கு ஆண் பார்வையாளர்களே. இந்த பிரச்சனை குறித்து அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இதுகுறித்து நாம் பேசாதவரை, வீடுகளில் இதுகுறித்து உரையாடல்கள் தொடங்காத வரை, எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை”.
“முறையான தண்ணீர் வசதியின்றி பெண்களை தனிமைப்படுத்துவது பல சுகாதார இடையூறுகளுக்கு இட்டுச் செல்லும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல மருத்துவரான டாக்டர் சாரதா சக்திராஜன். மேலும் அவர் கூறுகையில், “ஈரமான பேடுகளை நீண்ட நேரமாக அப்படியே அணிந்திருப்பதாலும் தூய்மையான தண்ணீர் வசதி இல்லாததாலும் சிறுநீர் மற்றும் இனப்பெருக்க பாதையில் தொற்று ஏற்படக்கூடும். இந்த தொற்று எதிர்காலத்தில் மகப்பேறு அடைவதை தடுப்பதோடு நாள்பட்ட இடுப்பு வலியை உண்டாக்கும். மோசமான சுகாதாரம் (பழைய துணியை மறுபடியும் உபயோகித்தல்) மற்றும் தொடர்ந்து ஏற்படும் தொற்றுகளின் விளைவாக கர்ப்பபை புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் உள்ளது”.
பெண்களுக்கு, குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புற பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் புற்றுநோய்களில் இரண்டாமிடத்தில் கர்ப்பபை புற்றுநோய் உள்ளதாக சமூக மருத்துவம் மற்றும் பொது சுகாதார சர்வதேச இதழில் வெளியான 2018-ம் ஆண்டு
அறிக்கை
ஒன்று கூறுகிறது.
கூவலபுரத்தில் பானுவுக்கோ வேறு சில கவலைகள். அவர் என்னிடம் கூறியது இதுதான்: “நீங்கள் எவ்வுளவு முயற்சித்தாலும், இந்த வழக்கத்தை மாற்ற முடியாது. ஆனால், எங்களுக்கு ஏதாவது நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால், தயவுசெய்து முட்டுதுறையில் ஒரு கழிப்பறையை கட்டி தாருங்கள். எங்கள் வாழ்க்கையை அது கொஞ்சம் எளிமையாக்கும்”.
முகப்பு ஓவியம்:
ப்ரியங்கா போரர்
தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.
பாப்புலேஷன் ஃபுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் ஆதரவுடன் பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்ட்டின் இந்த தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பதின் வயது மற்றும் இளம் பெண்களின் வாழ்வியலை அவர்களது குரல்கள் மர்ற்றும் அனுபவங்களின் வாயிலாக பதிவு செய்வதே இதன் நோக்கம்.
இந்த கட்டுரையை மறுபதிப்பிக்க விரும்புகிறீர்களா? [email protected] , [email protected] ஆகிய இணைய முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்.
தமிழில்: கோபி மாவடிராஜா