பள்ளி நுழைவாயில் மேலுள்ள பலகையில் ‘தலீம்’ (உருது மொழியில் கல்வி என்று அர்த்தம்) என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதனுள்ளே இருக்கும் பயில்வான்களின் கடவுளான அனுமனின் உருவம்தான் உங்களுக்கு முதலில் தெரிகிறது. இங்கு கலாச்சாரம் வண்ணமயமான கலவையாக உள்ளது. மேற்கு மகராஷ்டிராவில் உள்ள மல்யுத்த பள்ளிகள் அனைத்தும் தலீம் என்றே அழைக்கப்படுகின்றன, அகாரா என்று அல்ல. இந்த தலீம்களுக்கும் பிரிவினைக்கு முன்பான பஞ்சாபிற்கும் 100 வருடத்திற்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. குறிப்பாக, பிரபல சமூக சீர்திருத்தவாதியும் கோலாபூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளருமான சாகு மகராஜ் காலத்தில் நல்ல தொடர்பு இருந்துள்ளது. அவர் ஒரு மல்யுத்த ரசிகராகவும் இருந்ததால், பிரிக்கப்படாத இந்தியாவெங்கும் இருந்து வீரர்களை வரவழைத்தார். இதில் பெரும்பாலானோர் பஞ்சாபிலிருந்து கோலாபூர் வந்துள்ளார்கள்.
இன்று வரையில் மகராஷ்டிராவின் மேற்கு கிராமப்புறங்களில் நடைபெறும் மிகப்பெரிய போட்டிகளில் பாகிஸ்தான், ஈரான், துருக்கி மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். “வெளியூர் மல்யுத்த வீரர்கள் மீது மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்கிறார் கோலாப்பூர் தொகுதியின் எம்எல்ஏ வினய் கோரே. கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பால்பண்ணைக்கு தலைவராக இருக்கும் கோரே, மாநிலத்தின் தனித்துவமான போட்டியை நடத்துகிறார். மகராஷ்டிராவின் மிகப்பெரிய மல்யுத்த மைதானம் கோலாபூர் மாவட்டத்தில் உள்ள வரானாநகரில் உள்ளது. இங்கு வருடம்தோறும் டிசம்பர் 13-ம் தேதி மல்யுத்த போட்டிகள் நடைபெறும்.
“3 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள். சில சமயங்களில் விசா கிடைப்பதில் தான் பெரிய பிரச்சனை ஏற்படும். ஒருமுறை, பாகிஸ்தான் வீரர்களுக்கு மிக தாமதமாகவே விசா கிடைத்தது. அதன்பிறகு அவர்கள் இஸ்லாமாபாத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து புனே வந்தவர்களை வரானாவிற்கு நாங்கள் அழைத்து வந்தோம். இதற்கிடையில், பாகிஸ்தான் வீரர்கள் வருகைக்காக 12-13 மணி நேரம் வரை மக்கள் பொறுமையாக காத்திருந்தனர்”.
தலீம்களில், மகாராஷ்டிராவின் மல்யுத்த குருக்கள் ஆன்மீக மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்களை கலந்து ஒழுக்க நெறிமுறைகளை வலியுறுத்துகின்றனர். பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் புகழ்பெற்ற காமா பயில்வான் (தனது காலத்தில் யாருமே தோற்கடிக்க முடியாத உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்) பற்றி கூறுகிறார்கள். காமா என்றழைக்கப்படும் குலாம் முகமது, பஞ்சாப்பில் பிறந்தவர். இஸ்லாமியரான இவர் 1947-க்குப் பிறகு பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டார். பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் தன்னுடைய இந்து நண்பர்களை வன்முறைக் கும்பல் தாக்க முற்பட்டபோது அவர்களை காக்க மலைபோல் எதிர்த்து நின்றவர் என காமா பற்றி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் கூறுகிறார்கள். “மல்யுத்த வீரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்பது இங்கு பொதுவான பாடம்.




