இந்த வருட தொடக்கத்திலிருந்து ரேஷன் அட்டை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் தஸ்ரத் சிங். ஆனால் உமாரியா மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அவரது விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளதாக கூறி வருகின்றனர்.
“ரூ. 1500 கட்டணம் செலுத்தினால் என்னுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர்கள் பரிந்துரை செய்தனர்.
ஆனால் நான் கட்டவில்லை.......”
தஸ்ரத், மத்தியபிரதேச உம்ரியா மாவட்டத்தின் பந்தோகார் தாலுகாவிலுள்ள கடாரியா கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கு விவசாய நிலத்திலும் மாதத்தின் சில நாட்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 ரூபாய்க்கும் வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் பணத் தேவைக்கு கடன் வாங்குவார். இந்த ஊரடங்கு சமயத்தில் கூட 1,500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
வறுமை கோட்டிலுள்ள குடும்பங்களுக்கு சாதாரன சமயத்திலேயே ரேஷன் அட்டை அவசியமானதாக இருக்கும் போது, ஊரடங்கு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இவர்களிடம் ரேஷன் அட்டை இல்லாததால், வேறு வழியின்றி உணவுப் பொருட்களை சந்தை விலைக்கு கடையில் வாங்குகிறார்கள். “விவசாயமே எங்களை ஓரளவிற்கு காப்பாற்றுகிறது” என கூறுகிறார் தஸ்ரத்தின் மனைவியான 25 வயது சரிதா சிங். இவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கோதுமை, சோளம், சாமை, வரகு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.
இதற்கிடையில், 40 வயதாகும் தஸ்ரத், ரேஷன் அட்டையைஎப்படியாவது பெற்று விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி
செய்து வருகிறார்.அவர் கூறுகையில், “இந்த வருடம் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ரேஷன் அட்டை பெற வேண்டுமானால் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும் என என்னிடம் கூறினர்.”
கிராமத்திலிருந்து 70கிமீ தொலைவிலுள்ள மன்பூர் நகரத்தில் இருக்கும் லோக் சேவா கேந்த்ராவிற்கு தஸ்ரத் செல்ல வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார். அங்கு ஒருமுறை பேருந்தில் செல்லவே ரூ. 30 செலவாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று முறை என மொத்தம் நான்கு தடவை பேருந்தில் பயணம் செய்துள்ளார். மார்ச் 23ம் தேதி (மத்திய பிரதேசத்தில்) ஊரடங்கு தொடங்குவதற்கு முன், தனது கிராமத்திலிருந்து 30கிமீ தொலைவிலுள்ள பந்தோகார் நகரத்தில் இருக்கும் தாலுகா அலுவலகத்திற்கும் சென்று வந்துள்ளார். உங்கள் படிவத்தை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, தனியாக அடையாள அட்டை பெற்று வாருங்கள் என அங்கு அவரிடம் கூறி விட்டனர்.
தனியாக அடையாள அட்டை பெறுவதற்கு 40கிமீ தொலைவிலுள்ள கார்கெலி வட்டார அலுவலகத்திற்குச் செல்லுமாறு மன்பூர் கேந்திரா அதிகாரிகள் தஸ்ரத்திடம் கூறினர். “என்னுடைய பெயரில் தனியாக அடையாள அட்டை வேண்டும் என கூறினர். என்னுடைய அட்டையில் என் தம்பி உள்பட மற்ற குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். அதனால் தனியாக அடையாள அட்டை பெற கார்கெலி சென்றேன்” எனக் கூறும் தஸ்ரத், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.






