“அவர்கள் யானைகளை கொண்டு வந்து எங்கள் வீடுகளை நாசம் செய்ய வந்தால், நாங்கள் எங்கள் குழந்தைகளையும் எங்கள் உடைமைகளையும் குளத்தில் வீசி எறிந்துவிட்டு, ஒரு வட்டமாக நின்று எங்களை சுட்டுத்தள்ளும்படி கேட்போம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை இங்கிருந்து போக மாட்டோம்”, என்கிறார் தன் வீட்டையும் நிலத்தையும் இழக்கும் தருவாயில் இருக்கும் ரூப் ராணி. அதே நிலையில்தான் ராம்புரா கிராமத்தில் வாழும் மற்ற அனைத்து கிராமவாசிகளும் உள்ளனர்.
பன்னா புலிகள் சரணாலயத்தை சுற்றியுள்ள 49 கிராமங்களில் அவர்களின் கிராமமும் ஒன்று. சரணாலயத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சரணாலயத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வனத்துறை அவர்களிடம் கூறியதாக கிராம மக்கள் சொல்கின்றனர். புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதியில் மனிதர்கள் வாழ அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் நடமாடுவதற்கு அதிகமான இடம் இருக்கும். அங்கே மனிதர்களும் வன விலங்களும் இணைந்து வாழும் சூழல் உள்ளது. ராம்புரா கிராமம், பன்னா சரணாலயத்தின் சுற்றுப்புற பகுதியாக 2012 ஆகஸ்ட் முதல் மாற்றப்பட்டது.
ஆனால் கடந்த நான்கு வருடமாக புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதியை விரிவாக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், ரூப் ராணி மற்றும் அவரது அக்கம்பக்கத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


