“எங்களில் பணக்காரர் ராம் ஸ்வரூப், ஏனெனில், அவரிடம் மட்டும்தான் கொஞ்சம் நிலம் இருக்கிறது.” என்று உடனிருக்கும் பெண்கள் அவரை வம்புக்கு இழுத்து, சிரிக்கிறார்கள். இந்த விவசாயத் தொழிலாளர்களில் ராம் ஸ்வரூப்பை தவிர மற்ற எல்லாரும் பெண்கள். ராம் ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அவரின் தந்தைக்கு இரண்டு ஏக்கர் நிலமிருந்தது, அதை ராம், அவரின் சகோதரருக்கு சரி பாதியாகச் சொத்தைப் பிரித்ததன் மூலம் அந்த மதிப்புமிகுந்த நிலத்துக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.
இந்தத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக 15௦ பேர். இவர்கள் ஹரியானாவின் பாதேஹ்பாத் மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து தொழிலாளர் ஒப்பந்தக்காரர் ஒருவரால் குர்கான் நகரின் எல்லைக்கு வெளியே உள்ள நிலத்திட்டம் ஒன்றில் வேலை பார்க்க அழைத்து வரப்பட்டுள்ளார்கள். அந்த நிலத்தை நோக்கி நடக்கையில் வாசிர், “இவர்கள் என்னுடைய பதேஹ்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அப்படித்தான் இவர்களை எனக்குத் தெரியும். இவர்களைப் போலதான் நான் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்தேன். என்னுடைய கிராமமான பட்டுவில் இருந்து வேலை தேடி பெருநகரத்துக்கு வந்து சேர்ந்தேன்.” என்று அவர் சொல்கிறார். அந்த நிலத்தை அடைவதற்கு முன்பே இரு பெண் தொழிலாளர்கள் என் கண்களில் படுகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் அவர்களுடன் உரையாட நின்றோம். அவர்கள் எங்கே போகிறார்கள்?
“நாங்கள் கட்டிடம் கட்டும் இடத்தில் வேலை பார்க்கிறோம். செங்கல் தூக்குவது, மணல் மூட்டை சுமப்பது முதலிய வேலைகளைச் செய்வோம். என்னுடைய சொந்த ஊர் ராஜஸ்தானில் தவ்சா. இரண்டு மாதங்களாகக் குர்கானில் வேலை பார்க்கிறேன். என் குடும்பம் என் ஊரில் இருக்கிறது. மூன்று மாதங்கள் கழித்துத் தீபாவளிக்கு ஊருக்கு செல்வேன். இப்பொழுது நான் வேலைக்குப் போகவேண்டும். நேரமாகி விடும்.” என்று கட்டிடப்பணி நடக்கும் இடத்தை நோக்கி விரையும் சீதாதேவி படபடக்கிறார்.
குர்கானில் தற்போது காரோட்டியாக இருக்கும் வாசிர் எண்களைக் காட்டா கான் என்கிற மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நில மேம்படுத்தல் பணி நடைபெறும் இடத்துக்கு அழைத்துப் போகிறார். நாங்கள் அந்த இடத்தை நோக்கி பயணிக்கையில் ட்ராக்டர்கள் நெடுஞ்சாலையைக் கடக்கின்றன. அவற்றில் ஆண்கள், பெண்கள் நெருக்கிக்கொண்டு பயணிக்கிறார்கள். சில குழந்தைகளும் அந்த வண்டிகளில் கண்ணுக்குத் தென்படுகிறார்கள். வெப்பமும், புழுக்கமும் மிகுந்த காலை வேளையை எதிர்கொண்டபடி கட்டா கான் விழிக்கிறது. அந்நகரின் குறுகலான சாலைகள் ஒருமாடி, இருமாடி கட்டிடங்களால் நிரம்பி நிற்கின்றன. தூரத்தில் குர்கானின் அடுக்குமாடி கட்டிடங்கள் எழுந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. அது சீதாதேவி போன்ற எண்ணற்ற உழைப்பாளர்களின் கடும் உழைப்பின் கனிகள்.













