வெண்புருவக் குரங்குகள் குறித்த கதைகளையும், அவற்றின் அசைவுகளையும் குறித்து ரூபேஸ்வர் போரோ ஆச்சரியத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். விலங்குகளின் குரல்களையும், அசைவுகளையும், மரத்திற்கு மரம் அவை எப்படித் தாவும் என்பதையும் அவர் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.
நாங்கள் போரோவை லோஹர்காட் சரக அலுவலகத்தில்தான் சந்தித்தோம்; அவர் அந்த வன அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். வெண்புருவக் குரங்கு எதையும் பார்க்கவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். ”நான் வீட்டிலிருக்கும்போது பெரிய குரங்குகளின் குரல்களை அடிக்கடி கேட்க முடியும். ஆனால், அவை ஒருபோதும் எங்கள் கிராமத்திற்கு அருகில் வந்ததில்லை. தொலைவிலிருக்கும் மலைகளில் இருந்து அவை அலறுவதைக் கேட்டிருக்கிறோம்” என்கிறார் அவர். அசாமின் காமரூப் மாவட்டத்தில் ராணி வனச் சரகத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது அவரது முடுக்கி கிராமம். அசாமின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகளில் வரும் குரங்குகளைப் பார்த்துவிட்டுத்தான் அவர் அவற்றைப் போல செய்து காட்டுகிறார்.
இதற்கிடையே, (ராணி வனச் சரகத்தின் தொடர்ச்சியான) பர்தார் காப்புக் காட்டில், மலையேற்றத்தில் ஈடுபட்ட கோல்பாரா ஒளிப்பட சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரண்டு மேற்கத்திய வெண்புருவக் குரங்குகளை பார்த்திருக்கின்றனர். ‘காட்டுப்பயல்’ என்று உள்ளூரில் அழைக்கப்படும், வெண்புருவக் குரங்குகள் அசாம்-மேகாலயா எல்லைப் பகுதியில் அரிதாக காணப்படுபவை.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வனப் பகுதிகளிலும், கிழக்கு வங்காள தேசம் மற்றும் வடமேற்கு மியான்மரிலும் வாழும் இந்த வெண்புருவக் குரங்குகளை, இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) ஆபத்தான விலங்கினங்களின் பட்டியலில் சிவப்புக் குறியிட்டு வைத்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், சீனா, வடகிழக்கு மியான்மர் ஆகிய பகுதிகளில் வாழும் கிழக்கத்திய வெண்புருவக் குரங்குகளை IUCN எளிதில் பாதிக்கப்படக்கூடிய விலங்கினங்களின் பட்டியலில் வைத்திருக்கிறது.
“நீளமான, மெல்லிய கைகளைக் கொண்ட வெண்புருவக் குரங்குகள், மரங்களில் தாவிச் செல்லக் கூடியவை, அவை தரையில் நிற்பதற்கான தேவை அரிதாகவே ஏற்படுகிறது” என்கிறது இயற்கை-இந்தியாவிற்கான உலகளாவிய நிதியம். “மணிக்கு 55 கிமீ வேகத்தில், ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவும் திறன் படைத்த இந்த வகை குரங்குகள், ஒரு பாய்ச்சலில் ஆறு மீட்டர்களைத் தாண்டும்!”







