“குடும்ப அட்டையில் முத்திரை இல்லை என முதலில் சொன்னார்கள். முத்திரை பெறுவதற்கான எல்லா ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்தேன். ஆனாலும் அவர்கள் எனக்கான உணவுப் பொருட்களை கொடுக்கவில்லை,” என்கிறார் கயாபாய் சவான்.
புனே நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கயாபாய்யை ஏப்ரல் 12ம் தேதி நான் சந்தித்தேன். ஊரடங்கு காலத்தில் குடும்பத்துக்கு எப்படி உணவு வாங்குவது என்கிற கவலையில் இருந்தார். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கென கொடுக்கப்பட்டு, அவரிடம் இருக்கும் மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. புனேவின் கொத்ருட் பகுதியில் அவர் இருக்கும் ஷாஸ்திரி நகர் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்றிருக்கிறார். அவரின் குடும்ப அட்டை செல்லாது என கடைக்காரர் கூறியிருக்கிறார். “உணவுப்பொருட்கள் பெறுவோருக்கான பெயர்ப்பட்டியலில் என் பெயர் இல்லையென சொன்னார்.”
கயாபாய்க்கு வயது 45. அவருடைய கணவர் பிக்கா, ஆலையில் வேலை பார்க்கையில் நேர்ந்த விபத்தில் ஊனமடைந்த ஒரு வருடத்துக்கு பிறகு புனே நகராட்சியில் வேலைக்கு சேர்ந்தார். 14 வருடங்களாக புனே நகராட்சியில் கூட்டிப் பெருக்கும் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் அவர்தான். அவருடைய மூத்த மகளுக்கு மணம் முடிந்துவிட்டது. இளைய மகளும் மகனும் படிப்பை நிறுத்திவிட்டார்கள். இருவரும் சம்பாதிக்கவில்லை. மாத வருமானமான 8500 ரூபாயை கொண்டு குடும்பச் செலவை கயாபாய் கவனித்துக் கொள்கிறார். ஷாஸ்திரி நகரின் தொழிலாளர் குப்பத்தில் தகரக்கூரைக்கு கீழ் வசிக்கும் அவரின் குடும்பம் விரக்தியில் இருக்கிறது. “இதுதான் என் சூழல்” என சொல்லும் அவர், “எனக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை” என்கிறார்.
நியாயவிலைக்கடைக்கு செல்லும் அவரின் பயனில்லா பயணங்கள் ஊரடங்கு காலத்தில் தொடங்கவில்லை. “எங்களுக்கான உணவுப்பொருட்களை ஆறு வருடங்களாக அவர்கள் (கடைக்காரர்கள்) கொடுக்காமல் இருக்கிறார்கள்,” என்கிறார் அவர். ஊரடங்கு நேரத்திலாவது மனமிரங்குவார்கள் என நம்பியிருந்தார் அவர்.
கயாபாய் வாழும் பகுதியில் இருக்கும் பல குடும்பங்கள் மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்குக்கு பிறகு இரண்டு வாரங்கள் வரை நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் பெற முடியாமல் தவித்தனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி (2013) நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்தும், கடைக்காரர்கள் வெவ்வேறு காரணங்கள் சொல்லி மக்களை திரும்ப அனுப்பினர்.



