32 வயதாகும், போசானி அஸ்வின் நண்பகலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறும் முன், 76 வயதாகும் தனது பாட்டி போசானி லக்ஷ்மி அம்மாவின் கால்களை ஆசீர்வாதங்களை பெறுவதற்காக தொட்டார். மூன்று மணி நேரம் கழித்து அவர் வீடு திரும்பிய போது, தற்காலிக மாற்றம் தான் என்றாலும், பாட்டி அவரது காலைத் தொட்டு வணங்கினார். இந்த இரண்டு பயபக்தியான செயல்களுக்கும் இடையில் ஒரு முழு சமூகத்தின் நம்பிக்கையை உள்ளடக்கிய, ஒரு நூற்றாண்டு பழமையான சடங்கு இருக்கிறது - அதுவே போதுராஜுவின் மரபு.
அஸ்வின், பயமுறுத்தும் போதுராஜுவாக வீட்டிற்கு திரும்பிய போது நடை பாதையிலும், வீடுகளிலும், பால்கனியிலும் நின்ற பக்தர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர், அவரது உடல் முழுவதும் மஞ்சளும், குங்குமமும் பூசப்பட்டு இருந்தது, அவர் ஆவேசமாகவும் தனது கையில் ஒரு சட்டையையும் வைத்திருந்தார். தென் கிழக்கு ஹைதராபாத்தில் உள்ள மேக்கல் பண்டா வட்டாரத்தில் உள்ள லக்ஷ்மி நிலையத்தின் வாயிற்கதவில் நுழைந்த போது வீட்டிற்கு உள்ளே சென்று, அவரது பாட்டியை நேருக்கு நேர் பார்த்தார். பாட்டி, கண்களில் நீருடன் குனிந்து அவரது கால்களை தொட்டு வணங்கினார். பயந்து போயிருக்கும் அஸ்வினின் எட்டு வயது மகள் ஷாஸ்ரா, இன்னும் தன் தந்தையை இப்படிப் பார்க்கப் பழகவில்லை, அவள் போய் தன் தாய் கவிதாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். ஷாஸ்ராவின் மூத்த சகோதரரான 10 வயதாகும் ரித்விக்கும், பயமுறுத்தும் அவதாரத்தில் இருக்கும் தனது தந்தையிடம் இருந்து விலகியே இருந்தார்.
"போதுராஜுவாக ஆன பிறகு நான் முற்றிலும் பரவச நிலையிலேயே இருக்கிறேன்", என்று அஸ்வின் கூறுகிறார். "என் உடலின் மீது எனக்கு கட்டுப்பாடு இல்லை. நான் தேவியின் விருப்பப்படியே செயல்படுகிறேன். நான் எனது சொந்த வீட்டிற்கு செல்லும் போது கூட, நான் அதை உணரவில்லை. தேவியே என்னை வழி நடத்துகிறார்", என்று கூறுகிறார்.
இப்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக அஸ்வின் போனாலு திருநாளன்று போதுராஜுவாக மாறுகிறார் - தெலுங்கானா மாநிலத்தில் ஆஷதா மாதத்தில் (ஜூன் - ஜூலை) நடைபெறும் வருடாந்திர திருவிழாவான போனாலு, மகான்காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. திருவிழாக்கள் மேக்கல் பண்டாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் துவங்கி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் கொண்டாடப்படுகிறது.







