சுரேஷ் மெகெந்தலே, அவருக்குப் பிடித்த பேருந்து நிலையம் குறித்தக் கவலையில் இருக்கிறார். அவரில்லாதபோது நிலையம் சுத்தப்படுத்தப்பட்டிருக்காது. அவர் அன்புடன் பிஸ்கட்டுகள் போடும் நாய்க்குட்டிகளும் பசியோடிருக்கும். புனேவின் மல்ஷி தாலுகாவில் இருக்கும் பாடிலுள்ள பேருந்து நிலையத்தில் அவர் இருக்கக்கூடிய விசாரணை பூத் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடியிருக்கிறது. அங்கிருந்துதான் அவர் பாடில் வந்துச் செல்லும் மாநில அரசுப் பேருந்துகளின் போக்குவரத்தை ஒருங்கிணைப்பார்.
”பாட் சென்று 28 நாட்களாகிறது. எல்லாமும் (அங்கு) சரியாக இருக்குமென நம்புகிறேன்,” என்கிறார் 54 வயது மெகெந்தலே. அவரை நான் சந்தித்த நவம்பர் 26ம் தேதி, அவரது பேருந்து நிலையத்திலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இருந்தார். நிலையத்தின் நுழைவாயிலில் இருந்த ஒரு கூடாரத்தில் மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்து வாரியத்தின் சக ஊழியர்களுடன் போராட்டத்தில் அவர் அமர்ந்திருந்தார். மாநிலம் முழுவதுமிருந்த போக்குவரத்து வாரிய ஊழியர்கள் இந்த வருட அக்டோபர் 27லிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலப் போக்குவரத்தின் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 250 நடத்துநர்களும் 200 ஓட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றிருக்கின்றனர். “போக்குவரத்து ஊழியர்களின் தற்கொலையிலிருந்து போராட்டம் தொடங்கியது. 31 ஊழியர்கள் கடந்த வருடத்தில் தற்கொலை செய்து கொண்டனர்,” என விளக்குகிறார் மெகெந்தலே. அவரைச் சந்தித்த மூன்று நாட்களுக்குள் மேலும் இரண்டு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தாமதமாகும் ஊதியங்கள் போக்குவரத்து ஊழியர்களுக்குக் கஷ்டத்தை வழங்குகிறது. கோவிட் 19 பரவலுக்குப் பிறகு சூழல் இன்னும் மோசமாகியிருக்கிறது. சரக்குப் போக்குவரத்தைத் தாண்டி போக்குவரத்து வாரியத்துக்கும் எந்த வருமானமும் இல்லை.








