தாய் மதம் திரும்புவதற்கான வேண்டுகோள்
ஓ தீர்மானகரமான தேசியவாதியே!
என்னுடைய வீட்டுக்கு திரும்ப தயவுசெய்து ஏற்பாடு செய்!
வீடோ பூர்வீகமோ
பூர்விக மதமோ பூர்வீக நாடோ
பூர்வீக பண்பாடோ மூலமோ கருப்பையோ
என்ன பெயர் சொல்லி அழைப்பீர்களோ தெரியாது
எங்களின் வேர்களுக்கு திரும்பும் உரிமை எங்களுக்கு உண்டு
மக்களும் அவர்தம் வேர்களுக்கு திரும்ப உதவ
வேண்டுகிறோம்
ஓ விஷ்ணு! ஓ பிரம்மா
ஓளிரும் ஜோதிலிங்கத்தின்
பூர்வீகத்தை நீங்கள் தேடி
அதன் முடிவை கண்டடைய வேண்டும்
என்னுடைய வீட்டுக்கும் திரும்பும் வழி காட்டு
பிடிவாதமான தேசியவாதியே!
‘வசுதேவ குடும்பகம்’ என்ற பெயரில்
மியான்மரை விட்டு நீங்கள் ரோகிங்கியாக்களை விரட்டியது போல்
பங்களாதேஷிகளும் பங்களாதேஷுக்கு அனுப்பப்படுவார்கள்
இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள்
அல்ஜீரியர்கள் பிரான்ஸை விட்டு வெளியேற வேண்டியிருப்பதைப் போல்
ரோமாக்களும் ஜெர்மனிக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்
வெள்ளை அமெரிக்கர்கள் அமெரிக்காவிலுருந்து
ஐரோப்பாவுக்கு அனுப்ப வேண்டியது போல்
மொரீஷியஸ், சுரினாம் போன்ற எல்லா பகுதிகளின்
இந்துக்களும் புனித பூமிக்கு திரும்புவார்கள்.
பூர்விகத் தாயைத் தேடி
நாமும் ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டியது போல்
மும்பையிலிருந்தும் அகமதாபாத்திலிருந்தும்
பையாக்கள் திரும்ப வேண்டியது போல்
குஜராத்திகள் தில்லியிலிருந்து திரும்ப வேண்டியது போல்
பழங்குடிகள் காடுகளுக்கு திரும்புவது போல் (அடடா!
மன்னிக்கவும். அரசுக்கு காடுகள் தேவையென நினைக்கிறேன்!)
தயவுசெய்து எனக்கு என் வீட்டை திரும்பக் கொடுங்கள்
நான் மட்டும் ஏன்
நீங்களும் கூட வர வேண்டு - நாம் அனைவரும் செல்ல வேண்டும்
திரும்பிப் போ.. திரும்பு…
நம் வீடுகளைத் தேடி
நான்கு கால்களில் நடந்து
மரங்களில் ஏறி, சேற்றில் மூழ்கி,
இலைகளில் மறைந்து
புழுக்களைப் போல் சுயமாய் உறவு கொண்டு
செவுள்கள் கொண்டு சுவாசிக்கும் மீன்களைப் போல்
அனைவரும் திரும்புவோம்
ஒரு செல் புழுக்களாகி
பூர்விகக் கடலுக்குள் சென்று
ஆதி மனநிலையில்
மேய்ந்து திரிவோம்…
ஆனந்தமான கடவுளின் இருப்பில்
உடலை மூடும் திரையைக் கைவிடுவோம் - அனைவரும் ஒன்றாவோம்
யதார்த்தத்திலில்லா மரபணுவைத் தேடி
பூர்விகத்துக்கும் வரலாற்றுக்கு முந்தைய வீட்டுக்கும் மெய்யான மூலத்துக்கும்
திரும்பும் இந்த பெரும் ஊர்வலத்தில்
இந்த ஆன்மிக பெரும் பரிசோதனையில்
படபடக்கும் மதக்கொடிகளுடன், போர் முரசுகளுடன்
ஆரவாரமாக, கிளர்ச்சியாக
நாம் கருந்துளைக்கு திரும்புவோம்.
மனித குலம் அதன் முடிவுக்கு பெருவெடிப்புடன் சேரட்டும்
மூலத்துடன் மீண்டும் இணையட்டும்.
உண்மையான கூட்டுத் தற்கொலைக்கு
நாம் முன்னேறிச் செல்வோம்
ஓ யதார்த்தத்தை மீறிய தேசியவாதியே!



