கேரள மாநிலத்தின் பரப்பா கிராமத்தில், சுமார் 15 பேர் கொண்ட குழு புல்லால் செய்த முழம் செண்டா என்ற மூங்கில் பறையைை இசைக்கின்றனர். இவர்கள் மாவிலன் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பாரம்பரிய இசைக் கலைஞர்கள். பெரும்பாலானோர் காசர்கோட்டிலும், கண்ணூர் மாவட்டத்திலுமே வசிக்கின்றனர்.
"பழங்காலத்தில் இருந்தே எங்கள் முன்னோர்கள், இந்த மூங்கில் பறைகளை பயன்படுத்தி இசையை உருவாக்கினார்கள்" என்கிறார் கே பி பாஸ்கரன், அவரது குழுவினர் இசைக்கும் காணொளியானது இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காசர்கோட்டின் வெள்ளரிக்குந்து தாலுகாவின் பரப்பா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். "இன்றைக்கும் கூட கேரளாவின் பிற பகுதியில் மாட்டின் தோலை பயன்படுத்தி பறைகளை செய்கின்றனர். “பாரம்பரியமாகவே நாங்கள் மாட்டின் இறைச்சியையோ, தோலையோ எங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது இல்லை. அதனால் எங்கள் முன்னோர்கள் மூங்கிலிலிருந்து இந்தப் பறையை தயார் செய்து தீய்யம் போன்ற சடங்குகளில் இசைத்து வந்தனர்.”
சில காலங்களுக்கு முன்பு வரை இந்த சமூகத்தினருக்கு காட்டின் விளை பொருட்களை எளிதில் பெற முடிந்தது, ஆனால் அரசாங்கம் இப்போது அதை தடை செய்திருப்பதால் மூங்கில் பறைகளின் விலை சற்று அதிகம் ஆகிவிட்டது. இப்பொழுது மாவிலன்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பதியத்கா நகரின் சந்தையிலிருந்து மூங்கில்களை வாங்கி வருகின்றனர். ஒரு மூங்கில் தண்டு ரூபாய் 2500 முதல் 3000 ஆக உள்ளது இதைக்கொண்டு மூன்று முதல் நான்கு மூங்கில் பறைகளை செய்யலாம். ஒரு மூங்கில் பறையை அதிகபட்சமாக இரண்டு முறை இசைப்பதற்கு பயன்படுத்தலாம், அதன் பின்னர் அது உடைய ஆரம்பித்துவிடும். ஒரு மூங்கில் பறையை செதுக்கி, வெயிலில் காய வைத்து தயார் செய்வதற்கு பறை இசை கலைஞருக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் தேவைப்படும். "ஒரு மூங்கில் பறையை உருவாக்குவதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும்" என்கிறார் பறை இசை கலைஞருள் ஒருவரான சுனில் வெட்டியோடி.




