அவருடைய சமூகத்திற்காக அவர் போராடுகிறார், ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு எதிராகவே. அவர்களது சுயமரியாதைக்காக போரிடுகிறார், ஆனால் அவர்களது தினசரி வேலைகளை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வேலைகளை இல்லாமல் ஆக்க நினைக்கிறார் இவர். தங்கள் சமூகத்தைச் சார்ந்த மூத்தவர்களை விடுத்து இளைய தலைமுறையின் மீது கவனம் வைக்கிறார். கோமாஸ்பாளையத்தில் குழந்தைகளுக்காக இலவச ட்யூஷன் பயிற்சி மையம் நடத்திவரும் கல்பனாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 33 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரையின் இருக்கும் இந்த மிகப் பழமையான குடிசைப்பகுதியில் இருக்கும் 230 வீடுகளுக்குள் சுமார் 700 குடும்பங்கள் தங்களைத் திணித்துக்கொண்டு வாழ்கிறார்கள். சுற்றுலாவுக்குப் பெயர்போன மதுரை நகரின் மையத்தில்தான் இந்த குடிசைப் பகுதியும் அமைந்திருக்கிறது.
துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் மற்றும் பராமரிப்பு வேலை செய்பவர்களின் குடும்பங்கள்தான் இங்கு பெரும்பாலும் வசிக்கின்றன. சமூக அடுக்கின் அடியில் இருக்கும் தலித்துகளில் கடைசியில் இருப்பவர்களான அருந்ததியர்கள்தான் இங்கு அதிகம் வாழ்கிறார்கள். தங்கள் வாழ்விலிருந்து துப்புரவுத் தொழிலை அகற்ற முடியும் என்னும் நம்பிக்கை இங்கிருக்கும் பெரியவர்களுக்கு இல்லை. “இதை மாற்றவே முடியாது என்றுதான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள்” என்கிறார் கல்பனா. “இதைக் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு அது பிடிப்பதில்லை. தவறான பாதையில் நான் கொண்டு செல்வதாக அவர்கள் நினைக்கிறார்கள்.”
அதனால் இளையவர்களின் மூளைக்குள் எண்ணங்களை விதைக்க முயற்சி செய்கிறார் கல்பனா. தனது சொந்த செலவில், 40 குழந்தைகளுக்கு ட்யூஷன் மையம் அமைத்து கற்பிக்கிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கிறது இந்த ட்யூஷன் மையம். சில நேரங்களில் சனிக்கிழமைகளிலும் ட்யூஷன் உண்டு. கோமஸ்பாளையத்தில் இருக்கும் சமூகத் திடலில் அமைந்திருக்கும் ட்யூஷன் மையத்தில் தினமும் 5.30 முதல் 8.30 வரை ட்யூஷன் நடக்கிறது. ”உங்கள் பெற்றோர்கள் செய்யும் வேலையை நீங்கள் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்திக்கொண்டே” அவர்களுக்கு பாடம் கற்றுத் தருகிறார் கல்பனா. “மூன்று வருடமாக இந்த ட்யூஷன் மையத்தை நடத்துகிறேன்” என்று சொல்லும் கல்பனா, “நான் இருக்கும்வரை இதைச் செய்துகொண்டுதான் இருப்பேன் என்கிறார்”. 50 வருடங்களாக இருக்கும் இந்த குடிசைப்பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்புதான் கான்க்ரீட் கட்டிடங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. “புத்தாக்கம் என்னும் பெயரில் நடக்கும் இந்த குடியிருப்புகளில் ஒன்றான சமுதாயக் கூடத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.”



