மே மாத இறுதியில் ஹவேரி தாலுக்காவிலிருந்து ராமநகராவில் உள்ள பட்டுக்கூடு சந்தைக்கு தனது பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயி நிகிரப்பா கடியப்பா பயணம் செய்தார். டெம்போ வேனில் 370 கிலோமீட்டர் தொலைவிலான 11 மணி நேர இடைவிடாத பயணம், ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு உணவு கிடைக்காத தவிப்பு ஒருபக்கம், இதில் சரியான விலை கிடைக்குமா என்ற அச்சம் இன்னொரு பக்கம். பட்டுக்கூடுகளுக்கு குறைந்த விலை கிடைத்தால் அவர் என்ன செய்வார்?
ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹண்டிகனுர் கிராமத்திற்கு அவர் திரும்பியபோது நம்பிக்கை இழந்திருந்தார். அவர் பயந்தது போலவே நடந்துவிட்டது. அவர், தான் கொண்டு சென்ற 250 கிலோ அளவிலான வெண்பட்டுக்கூடுகளை வெறும் ரூ. 65,000க்கு விற்றுள்ளார். அதாவது கிலோ ரூ.270க்கு விற்றுள்ளார்.
மார்ச் தொடக்கத்தில் வெண்பட்டுக்கூட்டுக்கு கிலோ ரூ. 550 வரை கிடைத்தது. கலப்பின பட்டுக்கூடு கிலோ ரூ. 480க்கு சராசரியாக விற்பனையானது. மற்ற காலங்களில் வெண்பட்டுக்கூடுகளுக்கு சராசரியாக கிலோ ரூ. 450-500 வரையிலும், கலப்பின பட்டுக்கூடுகளுக்கு ரூ.380-420 வரை கிடைக்கும். (பைவோல்டைன் என்பது வெண்மை நிற தரமான பட்டுக்கூடு. கலப்பின பட்டுக்கூடு என்றால் பைவோல்டைன் கழிவுகளுடன், குறைந்த தரத்திலான கலப்பினத்தை சேர்த்து வளர்க்கும் மஞ்சள் நிற பட்டுக்கூடுகளாகும்.)
“எனது பூர்வீக நிலத்தில் [2014ஆம் ஆண்டு] பட்டுப்புழுக்களுக்குத் தேவைப்படும் முசுக்கட்டை செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என் கடன்களை எப்படித் தீர்க்க போகிறேன் என்றே தெரியவில்லை,” என்கிறார் 42 வயதாகும் கடியப்பா.
2014 வரை ஹவேரி மாவட்டத்தில் உள்ள வயல்களில் வேலை செய்து அவர் தினக்கூலியாக ரூ.150-170 வரை வருவாய் ஈட்டி வந்தார். தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் சேர்ந்து வீட்டுத் தேவைக்காகவும், சந்தையில் விற்பதற்கும் சோளம், நிலக்கடலை பயிரிடத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு மேலும் ஐந்து ஏக்கர் நிலத்தை கடியப்பா குத்தகைக்கு எடுத்து சோளம், நிலக்கடலையுடன் முசுக்கட்டை செடி வளர்ப்பையும் சேர்த்து செய்தார். இதனால் வருவாய் அதிகரிக்கும் என அவர் நம்பினார்.
ஆண்டிற்கு சுமார் 10 முறை அல்லது 35-45 நாட்களுக்கு ஒருமுறை என கடியப்பாவும், பிற விவசாயிகளும் பட்டுக்கூடுகளை விற்று வந்தனர். சிறு பட்டுப்புழுக்கள் பட்டுக்கூடுகளாக மாறுவதற்கு சுமார் 23 நாட்கள் ஆகும். இதற்கு மே முதல் வாரமே புழு வளர்ப்பை கடியப்பா தொடங்க வேண்டும். வெப்பநிலை, ஈரப்பதங்களினால் தொற்று, தாக்கம் ஏற்படாமல் பட்டுப்புழுக்களை வளர்க்க அவர் தினமும் 10 மணி நேரம் உழைக்கிறார். மே மாத இறுதியில் ராமநகரா சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்து இழப்புகளை தோளில் சுமந்தார்.
“கூலி, உரங்கள், பராமரிப்பு, போக்குவரத்து என சுமார் ரூ.48,000 செலவிட்டால் எனக்கு லாபமாக ரூ. 20,000 கிடைக்கும்,” என்று சொல்லும் கடியப்பாவின் குங்குமம் தோய்ந்த முன்நெற்றி மடிப்புகள் கவலை வரிகளை காட்டுகின்றன.
கோவிட்-19 ஊரடங்கு பட்டுத் தொழிலை மோசமாக பாதித்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரும் சந்தை யான ராமநகரா அரசு பட்டுக்கூடு சந்தைக்கு நம்பிக்கையுடன் வந்த கடியப்பா போன்ற பல விவசாயிகளின் நம்பிக்கைகள் நொறுங்கின. இங்கு தினமும் சராசரியாக 35-40 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் விற்பனையாகும் என்கிறார் சந்தையின் துணை இயக்குநர் முன்ஷி பசையா. 2018-19 இந்தியாவில் உற்பத்தியான 35,261 மெட்ரிக் டன் பட்டு உற்பத்தியில் கர்நாடகாவின் பங்களிப்பு 32 சதவீதமாகும். (உலகிலேயே சீனாவிற்கு பிறகு இரண்டாவது பட்டு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது).
பரந்து விரிந்த சந்தை கொண்ட ராமநகரா நகரம் சுமார் 10.1 கோடி மக்கள் தொகை கொண்டது. பெரிய உலோக தட்டுகள் நிறைந்த நெடிய அரங்குகளில் கர்நாடாகாவின் பல்வேறு பகுதி விவசாயிகள் கொண்டு வரும் பட்டுக்கூடுகளால் நிரம்பி வழிகின்றன. மறுநாள் நடைபெறும் ஏலத்திற்காக விவசாயிகள் இரவில் வருவதால் சந்தை 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.
வணிக நேரத்தின்போது பெரும்பாலும் கர்நாடகாவிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான பட்டுநூல் திரிப்பவர்கள் மின்னணு ஏலத்தில் பெற்ற பட்டுக்கூடுகளின் தரத்தை ஆய்வு செய்கின்றனர். அவர்கள் தானியங்கி நூல் திரிக்கும் கருவிகள், ராட்டை கொண்டு நூல் நூற்று நெசவாளர்களுக்கு பட்டு நூலாக விற்கின்றனர்.
மின்னணு ஏலத்திற்கு பிறகு, விவசாயிகள் பரிமாற்ற ரசீதை கணக்காளரிடம் பெறுகின்றனர். மார்ச் மாதம் முதலே ராமசகரா சந்தையில் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. விவசாயிகளுக்கு சில நாட்களில் சிறிது லாபமும், பல நேரங்களில் பெரும் இழப்பும் ஏற்படுகிறது.
தோட்டாபல்லப்பூர் தாலுக்காவைச் சேர்ந்த சந்திரஷேகர் சித்தலிங்கையா அவநம்பிக்கையுடன் தனது ரசீதைப் பார்க்கிறார். கிலோ ரூ. 320 என 166 கிலோ பட்டுக்கூடுகளை அவர் விற்றுள்ளார். “இவற்றை உற்பத்தி செய்ய ரூ. 1,30,000 செலவிட்டேன்,” என்கிறார் அவர். “சிறந்த பட்டுக்கூடுகளைப் பெறுவதற்காக தரமான முட்டைகளை என் சகோதரர் வாங்கி வந்தார்.” நான்கு ஏக்கர் நிலத்தில் பட்டுக்கூடு வளர்க்கும் என் சகோதரர்களுக்கு அதிக உற்பத்தி செலவைத்தான் ஏற்படுத்தியுள்ளது. “அவர்கள் கொள்முதல் செய்பவர்கள் கிடையாது, குறைந்த விலைக்கு விற்பதற்கு எங்களை தள்ளியவர்கள். எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இது பேரிழப்புதான்,” என்கிறார் சித்தலிங்கையா.
“நாங்கள் நேற்றிரவுதான் இங்கு வந்தோம். எங்களுக்கு முறையான உணவுகூட கிடைக்கவில்லை. பட்டுச் சந்தையின் அருகே இருந்த பெரும்பாலான தேநீர் கடைகளும் மூடப்பட்டுள்ளன,” என்கிறார் சோர்வுடன் காணப்படும் 50 வயதாகும் விவசாயி ஒருவர். பட்டுக்கூடுகளை விற்பதற்கு 90 கிலோமீட்டர் பயணம் செய்து ராமநகரா வந்ததன் காரணத்தை அவர் சொல்கிறார், “என் கிராமத்தில் அல்லது உள்ளூர் சந்தைகளில் கிலோவிற்கு ரூ.200 தான் தருகின்றனர். என்னைப் போன்ற விவசாயிகள் இதுபோன்று எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்?”
சந்தையின் கவுன்டரை நோக்கி சித்தலிங்கையா நடக்கத் தொடங்கியபோது அவர் விற்ற பட்டுக்கூடுகளை தொழிலாளர்கள் நெகிழிப் பைகளில் அள்ளிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு அள்ளிய அவர்: “என் பட்டுக்கூடுகள் எவ்வளவு தரமாக உள்ளன என்று பாருங்கள். இது தரமான தயாரிப்பு. இதே தயாரிப்புகளை டிசம்பர் மாதம் ரூ.600க்கு விற்றேன்.” ஆறு பேர் கொண்ட சித்தலிங்கையாவின் குடும்பம் பட்டுக்கூடுகளில் இருந்து வரும் வருமானத்தையே நம்பியுள்ளது. “என் மனைவியும், சகோதரரும் என்னுடன் வயலில் வேலை செய்கின்றனர். எங்களிடம் 5 தொழிலாளர்கள் உள்ளனர். எங்கள் அனைவரின் கடின உழைப்பும் வீணாய்போனது,” என்றார் அவர்.
விநியோக சங்கிலி உடைந்து போனதும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம். பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, துணிக் கடைகளும் மூடப்பட்டுள்ளன - இதனால் பட்டுக்கான தேவை வேகமாக சரிந்துள்ளது, இது ராமநாகராவையும் தாண்டி உள்ள பட்டு நூற்பாளர்களையும் பாதித்துள்ளதாக சந்தை அதிகாரிகள் மற்றும் பலர் தெரிவிக்கின்றனர்.
நூற்பாளர்களும், நெசவாளர்களும் பட்டை தேக்கி வைத்து காத்திருக்க முடியும். ஆனால் விவசாயிகளால் அப்படி முடியாது - சரியான நேரத்திற்கு பட்டுக்கூடுகளை விற்றிட வேண்டும்.
பட்டுப்புழு அந்துப்பூச்சிகள் இனச் சேர்க்கையில் தொடங்குகிறது பட்டுத் தொழிலின் செயல்முறை. பட்டுப்புழு இடும் முட்டைகள் பொறிகின்றன. அடுத்த எட்டு நாட்களில் பட்டுப்புழுக்கள், கோகோன் எனப்படும் பட்டுக்கூடு உற்பத்திக்காக விவசாயிகளிடம் விற்கப்படும். உற்பத்தி மையங்களுக்கு சென்று அல்லது முகவர்களிடம் இருந்து விவசாயிகள் அவற்றின் வகைக்கு ஏற்ப 75,000-90,000 சிறு புழுக்களை சுமார் ரூ. 1800-5000 வரை கொடுத்து 23 நாள் கோகோன் சுழற்சிக்காக வாங்குகின்றனர். (வெண்பட்டுப்புழு வாங்குவதற்கு அரசின் சார்பில் விவசாயிகளுக்கு ரூ. 1000 மானியமாக அளிக்கப்படுகிறது.)
குறிப்பிட்ட இடைவேளையில் விவசாயிகள் அப்புழுக்களுக்கு முசுக்கட்டை செடி இலைகளை உணவாக கொடுக்கின்றனர். போதிய வெப்பநிலை (24-28 டிகிரி செல்சியஸ்), ஈரப்பதம் (65-75 சதவீதம் வரை) நிலவ தெளிப்பான்கள், ஈரமூட்கைளை கொண்டு கட்டமைக்கப்பட்ட வீடுகளை அமைத்து பாதுகாக்கின்றனர். இதனால் மூங்கில் தட்டுகளில் வைக்கப்படும் புழுக்கள் செய்தித்தாள்களில் மூடப்பட்டு 20-23 நாட்களுக்கு நோய்களின்றி இருக்கின்றன. அவற்றிலிருந்து உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் நூற்பாளர்களிடம் சந்தையில் விற்கப்படுகிறது. அவர்கள் அதிலிருந்து பட்டு நூல் எடுத்து நெசவாளர்கள், வணிகர்களிடம் விற்கின்றனர். பட்டுப்புழு வளர்ப்பு வீடுகளை கட்டுவதற்கு விவசாயிகள் (பலரும் கடன் வாங்கி) ஈரப்பதமூட்டிகள், தெளிப்பான்கள், மூங்கில் தட்டுகள் வாங்குகின்றனர்.
ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25 முதல் பட்டு நூற்பாலை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பல மையங்கள் உற்பத்தியைக் குறைத்தன, சிறு புழுக்கள், முட்டைகளை ஒதுக்கிவிட்டன. பட்டுப்புழு வளர்ப்பு என்பது காலத்திற்கு உட்பட்டவை. ஊரடங்கு நேரத்தில் உற்பத்தி தொடங்கியதும் விவசாயிகள் வளர்ப்பு மையங்களில் பட்டுப்புழுக்களை வாங்க முடியும்.
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக ராமநகரா சந்தை மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மூடப்பட்டதாக அதிகாரிகள் சொல்கின்றனர். சந்தை மீண்டும் திறந்த பிறகு வெண் பட்டின் விலை கிலோவிற்கு ரூ. 330 எனவும், கலப்பின பட்டுக்கூடுகள் கிலோ ரூ. 310க்கும் விற்கின்றன. கடந்த காலங்களில் ராமநகரா பட்டுச் சந்தை ஆண்டு முழுவதும் குடியரசு தினம், சுதந்திர தினம் என இரு நாட்களில் மட்டுமே மூடப்படும்.
நாடெங்கும் ஊரடங்கு தளர்வுகள் மெல்ல அறிவிக்கப்பட்டதும், மீண்டும் நல்ல விலை கிடைக்கும் என பட்டுக்கூடு விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் விலை இன்னும் சரிந்துவிட்டது. மே மாதம் கடைசி வாரத்தில் வெண்பட்டுக்கூட்டின் சராசரி விலை ரூ.250 எனவும், கலப்பின பட்டுக்கூடுகள் வெறும் ரூ. 200க்கு விற்கப்பட்டன.
“கர்நாடக பட்டு நூற்பாளர்கள் பட்டு நூலை நாடெங்கும் உள்ள நெசவாளர்கள், வணிகர்களிடம் விற்கின்றனர். எனினும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம்தான் அவர்களின் முதன்மைச் சந்தை” என்கிறார் துணை இயக்குநர் முன்ஷி பசையா. “ஊரடங்கு தொடங்கியதும், போக்குவரத்து தடைபட்டது. இப்போது நூற்பாளர்களிடம் அளவற்ற பட்டு உள்ளது. ஆனால் வாங்குவதற்கு ஆளில்லை.”
ராமநகரா பட்டுத்துறையின் துணை இயக்குநர் ஜி.எம். மகேந்திரா குமார் விளக்குகையில், “கோவிட்-19 நோய்தொற்று அச்சத்திற்கு முன்பு, தினமும் பட்டுச் சந்தையில் 850-900 நூற்பாளர்கள் வந்து ஏலத்தில் பங்கெடுப்பார்கள். ஏப்ரல் 2ஆம் தேதி சந்தை மீண்டும் திறந்தபோது, சந்தைக்கு 450-500 பேர்தான் வாங்க வந்தனர். மே இறுதியில் வெறும் 250-300 நூற்பாளர்கள் தான் பட்டுக்கூடுகள் வாங்க வந்தனர். இதேநேரத்தில் ஏப்ரலின் தொடக்க காலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இல்லாவிட்டால் இத்தகைய வேறுபாடு இருக்காது.”
விலை வீழ்ச்சிக்கு “விநியோகச் சங்கிலி“ உடைந்தது ஒரு காரணம் என்றால், “மற்றொரு காரணமும் இருக்கிறது,” என்கிறார் குமார். பட்டு நூற்பாளர்களிடம் பட்டுக்கூடுகள் வாங்கும் அளவிற்கு போதிய பணமில்லை. சந்தையில் விற்கப்படும் பட்டுக்கூடுகளின் தரமும் குறைவாக உள்ளது. ஐந்து சதவீத பட்டுக்கூடுகள் தான் நன்றாக உள்ளன. பட்டுக்கூடுகளுக்கு ஈரப்பதம் ஆகாது. மழைக்காலத்தில், [தெற்கு கர்நாடகாவில் மழை பெய்வதால் வெப்பநிலை சரிந்துள்ளது], உற்பத்தி தரம் சரிகிறது. இதனால்தான் இப்போது வெகு சில நூற்பாளர்களே சந்தைக்கு பட்டுக்கூடு வாங்க வருகின்றனர்.”
விவசாயிகளுக்கு எப்போது நல்ல விலை கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கின்றனர் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள்.
நிச்சயமற்ற நிலைக்கு நடுவே, செலவீனத்தை தாக்குபிடிப்பது என்பதும் பல பட்டுக்கூடு விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவேதான் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்டனா தாலுக்காவில் உள்ள அங்குஷனஹல்லி கிராமத்தில் போராலிங்கையா போரிகவுடாவும், ராமகிருஷ்ணா போரிகவுடாவும் தங்களது நான்கு ஏக்கர் நிலத்தில் பரவியுள்ள முசுக்கட்டை செடிகளை அழித்து வருகின்றனர். விலையில் நிலைத்தன்மை வரும் வரை பட்டுக்கூடு உற்பத்தியிலிருந்து விலகி இருக்கப் போவதாக அவர்கள் சபதம் எடுத்துள்ளனர்.
“ஆண்டு முழுவதும் பொறுத்துக் கொண்டோம்,” என்கிறார் 60 வயதாகும் ராமகிருஷ்ணா. “பட்டுக்கூடு உற்பத்திக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு சில சமயம் வாழைப்பழம், தக்காளி போன்றவற்றை நாங்கள் விற்பனை செய்தோம். பிற சாகுபடியை பாதுகாக்க பட்டுக்கூடுகளை விற்றோம். இப்போது சந்தையில் எங்களால் விற்க முடியவில்லை. வயல்களில் வாழைப்பழங்களும், தக்காளியும் அழுகி வருகின்றன. எங்கள் தேங்காய்களை வாங்கவும் யாரும் முன்வரவில்லை. என் வாழ்க்கை முழுவதும் போராடிவிட்டேன். ஏதோ ஒன்றுதான் எப்போதும் நகர்த்துகிறது. இப்போது விற்பதற்கு என்று எங்களிடம் எதுவுமில்லை.”
சகோதரர்களான போராலிங்கையா, ராமகிருஷ்ணாவிற்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டுகளில், அவர்கள் விவசாய செலவிற்காக ரூ.17 லட்சம் வரை வங்கி கடன் பெற்றுவிட்டனர். கடன் இன்னும் அடையவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் இரண்டு பட்டுப்புழு வளர்ப்பு ஆலைகளை ரூ. 8 லட்சத்திற்கு கட்டினர். மாநில அரசு அவர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கியது. இப்போது ஒரு ஆலையில் மட்டும் புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. “இந்த முறை பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டதும், பணிகளை நிறுத்திவிடுவோம். சந்தையில் சரியான லாபம் கிடைக்காமல் எப்படி கடினமான உழைப்பை செலுத்துவது, தண்ணீர் தெளிப்பது, மின்சார செலவை சுமப்பது, தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பது? மேற்கொண்டு பட்டுக்கூடு உற்பத்தியில் கவனம் செலுத்தப் போவதில்லை,” என்கிறார் ராமகிருஷ்ணா.
அவர்களின் நிலத்தில் உள்ள பாதி முசுக்கட்டை செடிகள் வெட்டப்படவில்லை. “மிச்சமுள்ள இலைகளை நாங்கள் எங்களுக்கு பசுக்களுக்கு கொடுத்து விடுவோம். நிலத்தை சுத்தப்படுத்திவிட்டு தென்னை பயிரிடுவோம். தேங்காய் விற்றால்கூட கொஞ்சம் பணம் கிடைக்கும்,” என்கிறார் பற்களின்றி சிரிக்கும் 70 வயதாகும் போராலிங்கையா. அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கான குடும்ப அட்டையில் பெறும் ரேஷன் பொருட்களைக் கொண்டும், நிலத்தில் விளையும் கேழ்வரகு, காய்கறிகளைக் கொண்டும் குடும்பத்தை ஓரளவு சமாளிக்கின்றனர்.
பட்டுக்கூடு உற்பத்தியிலிருந்து விலகுவது என்பது பல விவசாயிகளுக்கு சரியான தேர்வு கிடையாது. தற்காலிகமாக நிவாரணம் அளிப்பதற்கு பட்டுக்கூடு உற்பத்தியைத் தவிர வேறு வாய்ப்பு இல்லாத காரணத்தால் பலரும் அதையே தொடர்கின்றனர்.
“விலை குறைந்துவிட்டது என்பதற்காக என்னால் ஒருநாள் கூட வேலை செய்யாமல் இருக்க முடியாது. என் குடும்பத்திற்கு எப்படி உணவளிக்க முடியும்?“ என கேட்கிறார் கடியப்பா. இப்போது அடுத்த கட்ட பட்டுக்கூடு உற்பத்திக்குத் தேவையான பணத்தைக் கடனாக பெற உள்ளார். அவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு 12 சதவீத வட்டியில் கூட்டுறவு வங்கியின் மூலம் பெற்ற ரூ. 3.5 லட்சமும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயா வங்கியில் 7 சதவீத வட்டியில் வாங்கிய ரூ.1.5 லட்சம் கடனும் உள்ளன. இரு கடன்களுக்கும் இன்னும் அவர் அசல் தொகையை கட்டவில்லை.
“இப்போதைய நிலையில் மீண்டும் கடன் வாங்காமல் என்னால் சமாளிக்க முடியாது. யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை,” என்கிறார் கடியப்பா. “ரூ.10,000 ஈட்டினால் கூட [ஒருமுறை பட்டுக்கூடு உற்பத்தி சுழற்சியில்] உணவிற்கு சமாளித்துவிடலாம். இல்லாவிட்டால் குடும்பமே பசியால் வாடும். இது மிகவும் கடினமானது. ஆனால் வழி கிடைக்கும். கரோனா போனதும், எல்லாம் இயல்பாகும்.”
கவர் புகைப்படம்: மண்டியா மாவட்டம் மட்டூர் தாலுக்காவில் உள்ள மாரசிங்கனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கூடு விவசாயி எம்.எஸ். ருத்ர குமாரா.
தமிழில்: சவிதா