22 பேரும், ஏற்கனவே மூன்று அல்லது நான்கு வருடங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் சோர்வடைந்துள்ளனர். 2021-ம் ஆண்டின் கோடையில் தண்ணீர் எடுக்க மீனு சர்தார் வெளியேறியபோது, மோசமான நிலை வரப்போகிறது என அவளை எச்சரித்திருக்க முடியாது. தயாபூர் கிராமத்தில் குளத்துக்கு செல்லும் படித்துறை ஆங்காங்கே உடைந்திருந்தது. மீனு வழுக்கிப் படிக்கட்டில் இருந்து கீழே தலை குப்புற விழுந்தார்.
"எனக்கு மார்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி இருந்தது," என்று அவர் பெங்காலியில் கூறுகிறார். “எனக்கு யோனியில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. நான் குளியலறைக்கு சென்றபோது, என்னிடமிருந்து ஏதோ நழுவி தரையில் விழுந்தது. உள்ளே இருந்து சதை போன்ற பொருள் வெளிவருவதைக் கவனித்தேன். நான் அதை வெளியே எடுக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் முழுமையாகப் பிரித்தெடுக்க முடியவில்லை.”
அருகில் உள்ள கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது கருச்சிதைவு உறுதி செய்யப்பட்டது. உயரமாக, ஒல்லியாக இருக்கும் மீனு, கவலைகள் இருந்தபோதிலும் புன்னகைத்தார். சமபவம் நடந்த அன்றிலிருந்து கடுமையான உடல் வலி மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றுடன் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் இருக்கின்றன.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கோசாபா தொகுதியில் உள்ள அவரது கிராமத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். பரந்து விரிந்த நெல் வயல்கள் மற்றும் சுந்தரவனத்தின் சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்ட கோசாபாவின் உள் கிராமங்களில் அது மட்டும்தான் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
மீனு விழுந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நிற்காமல் ரத்தம் கசிந்தது. அவரின் தவிப்பு அதோடு முடிந்துவிடவில்லை. "உடலுறவு மிகவும் வேதனையானது," என்று அவர் கூறுகிறார். "நான் கிழிக்கப்படுவது போல் உணர்கிறேன். நான் மலம் கழிக்கும்போதும் அழுத்தம் கொடுக்கும்போதும் கனமான பொருட்களை தூக்கும்போதும், என் கருப்பை கீழே வருவதை உணர முடியும்.”











