கோதி குக்கிராமத்தில் முக்கிய குறுகலான பாதையில் கிட்டத்தட்ட அனைத்து வீட்டின் முன்புறமும் உடைக்கப்பட்ட கற்கள் குவிந்து கிடக்கிறது - பல மூட்டைகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றது. அனைத்து வயது பெண்களும், பள்ளி மாணவிகளும் கூட இந்த கற்களின் மேல் அமர்ந்து சுத்தியல் மற்றும் கவ்வியால் கற்களை உடைக்கின்றனர். மலைகள் மற்றும் ஆற்றுப்படுகையில் இருந்து கற்களை வெட்டி எடுத்து வந்த பின்னர் வீட்டிற்கு வெளியே தெருவில் அமர்ந்து ஆண்கள் கேரம் மற்றும் சீட்டு விளையாடுகின்றனர்.
கோதி, காளிகா பஞ்சாயத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம், உத்திரகாண்ட் மாநிலத்தின் கிழக்கு பித்தோரகர் மாவட்டத்திலுள்ள ஜௌல்ஜிபி சந்தைப் பகுதியில் இருந்து தார்சுலா நகரத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. இரண்டு ஆறுகள் - காளி மற்றும் கோரி - ஜௌல்ஜிபியில் சந்திக்கின்றன, மேலும் நீரின் சலசலப்பு அங்கு ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நேபாளம் சில மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது, இரு நாடுகளையும் குறுகிய பாலம் ஒன்று இணைக்கிறது. பாலத்தின் இருபுறமும் இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் போலவே அந்தப் பாலமும் ஊசலாடுகிறது.










