மேற்சொன்ன ஆடைகள் தயாராகும் இடம் மதுரை புதுமண்டபம். அது பழமையானது, புதுமை மிக்கதும் கூட. அது பண்டைய சிறப்புடையது. தற்காலத்திலும் தனித்து நிற்பதும் கூட. பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பது மட்டுமல்லாமல், நவீனகாலத்திலும் அது மிகவும் தேவைப்படுகிறது. ஒரு குட்டி மதுரையையே புது மண்டபத்தில் கண்ணுறலாம். மதுரை என்கிற பண்டைய நகரத்தின் பண்பாட்டுச் சீர்மையினைக் கச்சிதமாகப் படம்பிடிக்கும் இம்மண்டபம் 384 ஆண்டுகாலப் பழமைமிக்கது. இந்த மண்டபத்தில் ஒரு விற்பனைக்கூடமும் இருக்கிறது. கண்ணைக்கூசும், மின்னுகிற ஆடைகளைப் படைக்கும் கலைஞர்கள், பாரம்பரியமான பாத்திரங்கள், சாமான்கள் விற்கும் கடைகள் என்று இந்த இடத்திற்குப் பல்வேறு முகங்கள்.
இங்குதான் தமிழகத்தின் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் அழகர் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆடைகள் தைத்துத் தருகிறார்கள். இத்தகைய ஆடைகளைத் தைத்து தரும் 150 கலைஞர்களில் மூன்றில் ஒருவர் இஸ்லாமியர் ஆவார். இந்த ஆடைகளைப் பக்தி பரவசத்தோடு உடுத்திக்கொள்பவர்கள் மதுரையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இந்துக்களே ஆவர்.
ஒரு இந்து பண்டிகைக்கு இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு ஆடை தைப்பது குறித்து ஆச்சரியத்தோடு கேட்டால், சீற்றத்தோடு, “இது ஒண்ணும் வட இந்தியா கெடையாது" என்கிறார் அமீர் ஜான். “நாங்க தாயாப் பிள்ளையா தலை தலைமுறையா பழகுறோம். உறவு முறை சொல்லி உரிமை கொண்டாடுவோம். முஸ்லிம் ஆண்களை மாமான்னும், பெண்களை மாமின்னும் கூப்பிடுவாங்க. நாங்க அவங்கள மாப்ளன்னு சொல்வோம். அப்படியிருக்கும்போது வடக்க மாதிரியான அசம்பாவிதம் எல்லாம் இங்க எப்டி நடக்கும்?” என எதிர்க்கேள்வி கேட்கிறார்.
புது மண்டபத்தில் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்றொரு கலைஞரான முபாரக் அலி (42), “இதுல அதிசயப்பட என்ன இருக்கு. காலங்காலமா இதை நாங்க பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்கிறார்.










