தொற்று துவங்குவதற்கு முன்னரே, அவர்கள் செய்த வேலை பிழைக்க போதியதாக இல்லை. அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். “முன்னர் எங்களின் மூதாதையர்கள் நோய்களை தீர்க்கவும், மக்களின் பாவங்களை போக்கவுமே இதை செய்து வந்தார்கள். ஆனால், நாங்கள் இப்போது எங்களின் வயிற்றை நிரப்புவதற்காக இதை செய்கிறோம்“ என்று லட்சுமணின் தாய் எல்லம்மா, நாம் ஊரடங்கிற்கு முன்னர் அவர்களை சந்தித்தபோது கூறினார். எனது கொள்ளு தாத்தா மற்றும் எனது தாத்தா இருவரும் இந்த நிகழ்ச்சியை செய்வதற்காக ஊர் ஊராக சுற்றினார்கள். மாரியம்மா எங்களை இவ்வாறு ஆடச்சொல்லியிருக்கிறார். அவர் எங்களை பார்த்துக்கொள்வார்“ என்று லட்சுமண் மேலும் கூறுகிறார்.
லட்சுமண், மும்பையில் வீதிகளில் தனது தந்தையுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் செய்ய துவங்கியபோது அவருக்கு 6 வயது. அவரது தாய் மாரியம்மன் சிலை மரச்சட்டத்தை தலையில் சுமந்து செல்வார். “நான் கசையை (சாட்டை) பயன்படுத்துவதற்கும், அதை வைத்து என்னை தாக்கிக்கொள்வதற்கும் முதலில் பயந்தேன். முதலில் தரையில் அடித்து சத்தத்தை ஏற்படுத்துவேன்“ என்று அவர் கூறுகிறார். “நாங்கள் முதுகுப்புறத்தில் எதுவும் தடவிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் அந்த வலி எங்கள் தெய்வத்திற்கானது. சில நேரங்களில் எனது முதுகு வீங்கிவிடும். ஆனால், மாரியம்மன் எங்களை காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். தினமும் அவ்வாறு செய்யும்போது அது குணமாக துவங்கியது. தற்போது எனக்கு வலி அவ்வளவாக தெரிவதில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஊரடங்குக்கு முன்னதாக, வட மும்பையில் பாண்ட்ரா ரயில் நிலையத்திற்கு எதிரில் அவர்கள் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதே கிராமத்தையும், அதே சமுதாயத்தையும் சார்ந்த கிட்டத்தட்ட 50 குடும்பத்தினர் அந்த குடியிருப்பில் வசித்தனர். அனைவரும் இதே வேலையை செய்பவர்கள். நகரின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்கள் 8 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர்.
அவர்களின் வீடுகள், (தொற்றைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது) தார்ப்பாய், பிளாஸ்டிக் அல்லது துணியால் மூங்கில்களின் துணையோடு நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டிற்குள் படுத்துக்கொள்வதற்கு ஒரு தரைவிரிப்பு, கொஞ்சம் பாத்திரங்கள் மற்றும் துணிகள் உள்ளன. கசை (சாட்டை) மற்றும் டோலக் ஆகியவை ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. லட்சுமண், ரேகா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் ஒரு டென்ட்டிலும், அருகில் உள்ள மற்றொரு டென்டில் அவரின் பெற்றோர், தம்பிகள் எல்லப்பா மற்றும் ஹனுமந்தாவுடன் வசிக்கின்றனர்.
ரேகாவை நாம் முதல்முறை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரால் வெறுங்காலுடன் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. அவர் சிறிது இடைவேளை எடுத்துக்கொண்டு, ஓய்வுக்காக ஆங்காங்கே அமர்ந்து கொண்டார். “நான் நன்றாக இருக்கிறேன். ஆனால், சில நேரங்களில் சோர்வாக உள்ளது. இது எனது மூன்றாவது குழந்தை. எனக்கு இந்த வேலை பழகிவிட்டது. நான் நிறுத்தினால், யார் எனது குழந்தைகளுக்கு உணவிடுவார்கள்?“ என்று அவர் கேட்கிறார்.