நோசுமுதீன் அழுது கொண்டிருந்தார். அவர் முதல்முறையாக தனது வீட்டிலிருந்து தொலைதூரம் - 10 முதல் 12 கிலோ மீட்டர்- அவரது பெற்றோரை விட்டுவிட்டு செல்கிறார். ஏழு வயதில் அது மிகவும் கடினமாக இருந்தது. "நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன், அழுகவும் செய்தேன். வீட்டையும் எனது குடும்பத்தினரையும் விட்டு பிரிகிறேன் என்ற எண்ணமே கண்ணீரை வரவழைத்தது", என்று அவர் நினைவு கூர்ந்தார்.
அவர் ஒரு ரக்கல் (கால்நடை பராமரிப்பாளர்) வேலைக்கு அனுப்பப்பட்டார். "எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது, எனது பெற்றோருக்கு வேறு வழியே இல்லை", என்று 41 வயதாகும் நோசுமுதீன் ஷேக் கூறுகிறார். "எங்களுக்கு உணவளிக்கப் போதுமான உணவு அவர்களிடம் இல்லை. நாங்கள் பல நாட்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்டோம் அதுவும் வயலில் என்ன விளைகிறதோ அதையே உண்டோம். அந்த காலத்தில் எங்களது கிராமத்தில் ஒரு சில குடும்பத்தாலேயே இரண்டு வேளை உணவைப் பெற முடிந்தது". இதில் கல்வி என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது : "அந்த நேரத்தில் நான் பள்ளிக்குச் செல்வதைப் பற்றி சிந்திக்கவே முடிந்ததில்லை. எங்களது குடும்பத்தின் நிலையே மிகவும் மோசமாக இருக்கும் போது, நான் எப்படி பள்ளிப்படிப்பை பற்றி சிந்திக்க முடியும்?"
அதனால் அவர் அசாமின் (அப்போதைய) துப்ரி மாவட்டத்தில் உள்ள உரார்புய் கிராமத்திலுள்ள தங்களது எளிமையான ஓலைக் குடிசையை விட்டுவிட்டு மனுல்லபரா கிராமத்திற்கு பேருந்தில் சென்றார், பேருந்தில் 7 பசு மாடுகள் மற்றும் 12 பைகா (4 ஏக்கர்) நிலம் வைத்திருப்பவர்களுக்கான மூன்று ரூபாய் டிக்கெட் எடுத்து பயணித்தார். "ரக்கலாக வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அந்த வயதிலேயே நான் நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. சில நேரங்களில் எனக்கு போதிய உணவும் வழங்கப்படவில்லை அல்லது மீதியிருந்த உணவே வழங்கப்பட்டது. நான் பசியால் அழுதிருக்கிறேன்", என்று நோசுமுதீன் நினைவு கூர்ந்தார். "ஆரம்பத்தில், எனக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை, சாப்பாடும், தூங்குவதற்கு இடமும் மட்டுமே கொடுக்கப்பட்டது. எனது முதலாளிக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 - 120 மோன் அரிசி கிடைக்கும். நான்கு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டு மோன் அரிசி வழங்க ஆரம்பித்தார்" - அதாவது சுமார் 80 கிலோ, மார்ச் முதல் நவம்பர் வரையிலான விவசாய பருவத்தின் முடிவில் அது வழங்கப்பட்டது.
அசாம் மற்றும் மேகாலயாவின் எல்லையில் உள்ள கிராமங்களில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை குடும்பத்தில் உள்ள சிறுவர்களை ரக்கலாக வேலைக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கால்நடை பராமரிப்பு 'பணியில் அமர்த்தப்படுவதற்கு' பணக்கார விவசாயிகளுக்கு அவர்களின் பெற்றோர்களால் 'கொடுக்கப்பட்டனர்'. இந்த வழக்கத்தினை உள்ளூரில் பெட்பாட்டி என்று அழைத்தனர் ('வயிற்றுக்கு உணவளித்தல்' என்பது இதன் பொருள்).











