“எல்லா போடோ பெண்களைப் போல, நானும் என் அம்மா நெசவு செய்வதைப் பார்த்தே வளர்ந்தேன்” என சாமா பிரம்மா நினைவுகூர்கிறார். குஜ்ரகுரி நெ.2 கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் மூங்கில் கைத்தறியில் அவர் அமர்ந்திருக்கிறார். பச்சை பசேலன வயல்வெளிகள் சூழ, லோயர் அசாம், போடாலேண்டின் சிராங் மாவட்டத்தில் பாயும் அய் ஆற்றங்கரையில் இந்தச் சின்னஞ்ச்சிறிய கிராமம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரமான போங்கையான் இங்கிருந்து 20கிமீ தொலைவில் உள்ளது. 87 வீடுகளைக் கொண்ட அவரது கிராமத்திற்குச் செல்லும் பாதைகளில் சில, மணற்பாங்கான ஆற்றங்கரையே சாலையாக இருக்கின்றன; ஒரு இடத்தில், உடைந்த மூங்கில் பாலத்தை கவனமாக நடந்து கடக்க வேண்டியிருந்தது.
அசாம் கிராமங்களில், போடோ சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் தறி இருக்கும். இச்சமூகம் (அசாமில் ‘போரோ’) பழங்குடி இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. துணி நெய்வது மதிப்பிற்குரிய திறனாகவும் நல்ல வாருங்கால மணமகளாகவும் பெண்களிடம் பார்க்கப்படுகிறது. சாமா போன்ற சில பெண்களே இந்தப் பாரம்பர்ய திறமையை பயன்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள்.
“15 வயதிற்கு முன்பே நான் துணி நெய்ய ஆரம்பித்து விட்டேன். சாலா மடா கப்டா (எளிமையான துணி) போன்றவற்றை நெய்து இந்த நுட்பத்தில் தேர்ச்சி பெற்றேன். எனக்கு நம்பிக்கை அதிகமானதும் கோமோசா (சால்வை போன்ற ஆடை) போன்ற பாரம்பர்ய துணிகளையும் போர்வைகளையும் நெய்ய ஆரம்பித்தேன். ஆனால் சிக்கலான மலர் வேலைப்பாடுகளைக் கொண்ட டோக்னாவை (சேலையை போன்றது) மிகவும் ரசித்து நெய்வேன்” என அவர் கூறுகிறார்.







