ஒருநாள் காலையில், ஒரு மரத்தடியில் பாதி கிழிந்த பிளாஸ்டிக் பாயின் மீது அனு அமர்ந்திருந்தார். தலை கலைந்திருந்தது. முகம் வெளுத்திருந்தது. கடந்து செல்லும் மக்கள் தூர இருந்து அவருடன் பேசுகின்றனர். மாடுகள் அருகே ஓய்வெடுக்கின்றன. தீவனம் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.
“மழை பெய்தாலும் குடையோடு நான் மரத்தடியில்தான் அமர வேண்டும். என் வீட்டுக்குள் போக முடியாது. என்னுடைய நிழல் கூட யார் மீதும் பட்டுவிடக் கூடாது. கடவுளின் கோபத்துக்கு நாங்கள் ஆளாக முடியாது,” என்கிறார் அனு.
அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் திறந்தவெளியில் இருக்கும் மரம்தான் ‘மூன்று’ நாட்களுக்கு அவரது வீடு. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கும்போது இங்கு வந்துவிடுவார்.
“என்னுடைய மகள் ஒரு தட்டில் உணவு வைத்து சென்றுவிடுவாள்,” என்கிறார் அனு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவருக்கென தனியாக பாத்திரங்களை இந்த ஒதுக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்துகிறார். “சந்தோஷத்துக்காக இங்கு ஓய்வெடுக்க நான் வரவில்லை. வேலை (வீட்டில்) பார்க்க விரும்புகிறேன். எனினும் நம் கலாசாரத்துக்கு மதிப்பு கொடுத்து இங்கு தங்குகிறேன். எங்கள் நிலத்தில் அதிகமாக வேலை இருக்கும்போது நானும் சென்று வேலை பார்க்கிறேன்.” அனுவின் குடும்பம் அவர்களின் 1.5 ஏக்கர் நிலத்தில் ராகி விளைவிக்கிறார்கள்.
இத்தகைய தனிமை நாட்களில் அனுவே அவரின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கத்தை அவர் மட்டும் பின்பற்றவில்லை. அவரின் 19 மற்றும் 17 வயது மகள்களும் (இன்னொரு 21 வயது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது) இதையேதான் செய்கிறார்கள். அவரின் கிராமத்தில் இருக்கும் 25 காடுகொல்லா சமூக குடும்பங்களின் பெண்களும் இதே போல்தான் தனிமைப்பட வேண்டும்.
குழந்தை பெற்ற பெண்களும் கூட கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அனு இருக்கும் மரத்தடிக்கு அருகே ஆறு குடிசைகள் சற்று விலகி அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில்தான் பிரசவமான பெண்களும் அவர்தம் குழந்தைகளும் இருக்கின்றனர். பிற நேரங்களில் அவை காலியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மரத்தடிகளில்தான் தனித்திருக்க வேண்டும்.















