நன்றாக வாரி பின்னப்பட்டிருந்த அவரின் சடையில் கூட அவரின் கடுமையான உழைப்பு தெரிகிறது. அவரது முகத்தில் எண்ணிலடங்கா சுருக்கங்கள் உள்ளன. அவர் ஹவாய் செருப்பும், காதி புடவையும் அணிந்துள்ளார். அந்த புடவை அவரின் கால்களுக்கு மேலே படர்ந்திருக்கிறது. அது, அவர் அந்த நாளின் பணிக்காக தயாராக உள்ளார் என்பதை தெரிவிக்கிறது. பின்னத் பகுதியில் இருந்து குமாயான் மண்டலத்தில் உள்ள கோசி நதிக்கு நீர் வழங்கும் ருத்ரதாரி அருவி வரை உள்ள பகுதிகள் முழுவதும் நம்மை அழைத்துச் செல்லும் திட்டம் இருந்தது.
உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மற்றும் பாகேஸ்வர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள 2,400 பேர் வரை வசிக்கும் கவுசானி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்ச்-ஏப்ரல் விழாவில் நாம் பங்குகொள்கிறோம். பாசந்தி சமந்த் (60), பாசந்தி அக்கா என்றுதான் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். ஒரு நிகழ்ச்சிக்கு அவர்தான் பேச்சாளர். எங்கள் கூட்டத்திற்கு தலைமை ஏற்க அவரை தோராயமாக தேர்ந்தெடுக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் ஒரு இயக்கத்திற்கு தலைமை ஏற்கிறார். கவுசாணியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 15 முதல் 20 பெண்கள் அடங்கிய 200 குழுக்களை அமைக்கிறார். கோசி நதியை பாதுகாப்பதற்காக இந்த இயக்கம். 2002ம் ஆண்டில் நதியின் கோடைக்கால நீரளவு விநாடிக்கு 80 லிட்டராக குறைந்து விட்டது. 1992ம் ஆண்டில் இது 800 லிட்டராக இருந்தது. மெல்ல மெல்லக் குறைந்து இந்த அளவை எட்டியிருந்தது. அப்போது முதல், சமந்த் மற்றும் கவுசானியின் பெண்களும் நதியின் பாதுகாப்புக்காக கடுமையாக உழைத்தார்கள்.
2002ம் ஆண்டு சமந்த், மரங்கள் வெட்டுவதை நிறுத்திவிட்டு, அகல இலைகள் கொண்ட நாட்டு ஓக் மரங்கள் நடுவதை பெண்கள் மத்தியில் வலியுறுத்தினார். பெண்கள் தண்ணீரை கவனமுடன் பயன்படுத்துவது மற்றும் காட்டுத்தீயை தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமந்த் முதலில் அவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டினார். பல ஆண்டுகள் அந்தப் பெண்கள் ஒன்றாக இருந்து, ஒருவொருக்கொருவர் பலமாக இருந்து, வீடுகளில் உள்ளச் சண்டைகளைக் கூட எதிர்த்துப் போராடினர்.
ஆனால், முதலில் சமந்துக்கு தனது வாழ்க்கையே போராட்டமாக இருந்தது.
“என் வாழ்க்கை மலையைப் போன்று கடினமானதாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் இருந்தது“ என்று அவர் கூறுகிறார். 12 வயதில் அவர் 5ம் வகுப்பு நிறைவு செய்திருந்தபோது, அவருக்கு திருமணம் முடிந்தது. அவர் தனது கணவரின் கிராமமான பைத்தோராகார் மாவட்டத்தின் தார்கோட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது அவருக்கு 15 வயதாகியிருந்தது. பள்ளி ஆசிரியரான அவரது கணவர் இறந்துவிட்டார். “நான் அவரை தின்றுவிட்டதாக என் மாமியார் என்னைச் சாடினார்“ என்று அவர் கூறுகிறார்.





