முன்பொரு காலத்தில் கேதரின் கவுர், போதி முர்மு மற்றும் முகமது துளசிராம் என மூன்று அண்டைவீட்டார் இருந்தனர். கேத்தி ஒரு விவசாயி. போதி, சணல் ஆலையில் வேலை பார்த்தார். முகமது, மாடு மேய்க்கும் வேலை செய்தார். நகரத்தில் பலரும் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்த அரசியல் சாசனம் என்கிற கனமான புத்தகத்தை கொண்டு என்ன செய்வதென அவர்களில் எவருக்கும் தெரியவில்லை. அதில் பயனில்லை என்றார் கேத்தி. ஒருவேளை அது புனிதமாக இருக்கலாம் என நினைத்தார் போதி. “அது நம் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுமா?” என்று கூட முகமது கேட்டார்.
தாடி வைத்த அரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதை கூட மூவரும் கவனிக்கவில்லை, “அவ்வளவு நேரம் யாருக்கு இருக்கிறது?” பிறகு மழை பொய்த்தது. கடன்கள் அதிகரித்தன. தன் பெயரை முணுமுணுத்த பூச்சிக்கொல்லி மருந்தை கேதரின் கண்டறிந்தார். சணல் ஆலை திவாலானது. போராடிய தொழிலாளர்கள் மீது காவல்துறை கண்ணீர் குண்டு வீசியது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய போதி முர்மு மீது தீவிரவாத வழக்குகள் போடப்பட்டன. இறுதியாக முகமது துளசிராமுக்கான நேரம் வந்தது. ஒரு மங்களகரமான மாலையில் அவரது பசுக்கள் வீட்டுக்கு வந்தன. பின்னாடியே கத்திகளுடன் இரண்டு கால் கன்றுகள் வந்தன. “கோமாதா வாழ்க! கோமாதா வாழ்க!”
அசுரத்தனமான கோஷத்துக்கு நடுவே எங்கோ சில பக்கங்கள் படபடத்தன. நீல சூரியன் உதித்தது. தயக்கத்துடன் ஒரு முணுமுணுப்பு கேட்டது:
“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை…


