“குறைந்தபட்ச ஆதரவு விலை கிடையாது, வேளாண் விளைபொருள் சந்தை அங்காடிகளும் படிப்படியாக மூடப்படும்“ என்று கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த விவசாயி டி.மல்லிகார்ஜீனப்பா கலக்கத்துடன் கூறினார்.
மல்லிகார்ஜீனப்பா (61), அவரது கிராமமான ஹீலுங்கினகொப்பா கிராமத்தில் இருந்து விவசாயிகளின் குடியரசு தினவிழா டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக ஜனவரி 25ம் தேதி பெங்களூருவுக்கு வந்திருந்தார். அவர், ஷிகார்பூர் தாலுகாவில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து வந்திருந்தார். “மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதை விட, வேளாண் விளைபொருள் சந்தை கமிஷன்களை சீரமைத்தாலே விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கும்“ என்று அவர் கூறினார்.
புதிய வேளாண் சட்டங்கள் அவரது கவலைகளை மேலும் கூட்டிவிட்டன. அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைத்து, வேளாண் விளைபொருள் சந்தை கமிஷனை மூடிவிடுவார்கள். அதுதான் வேளாண் விளைபொருள்களின் முதலுக்கு உறுதியளித்து வந்தது.
தனது 12 ஏக்கர் நிலத்தில், 3 முதல் 4 ஏக்கரில் மல்லிகார்ஜீனப்பா, நெல் பயிரிடுவார். எஞ்சிய நிலத்தில் பாக்கு சாகுபடி செய்வார். “பாக்கு சாகுபடி கடந்தாண்டு மிகவும் மோசமாக இருந்தது. அதிகளவில் நெல்லும் கிடைக்கவில்லை“ என்று அவர் கூறினார். “ நான் ரூ.12 லட்சம் கடனை திருப்பிச்செலுத்த வேண்டும். மாநில அரசு கடன் தள்ளுபடி செய்வதாக கூறியது. ஆனால், வங்கியிலிருந்து எனக்கு இன்னும் கடனை திருப்பி செலுத்தக்கூறும் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அவை அபராதம் குறித்து எச்சரிக்கின்றன. இதையெல்லாம் எண்ணி எனக்கு வருத்தமாக உள்ளது“ என்று குரலில் கோபம் கூட சொல்கிறார்.
மல்லிகார்ஜீனப்பா போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகள், பெங்களுருவு பேரணிக்கு முதல் நாளே வந்திருந்தனர். ஆனால், மண்டியா, ராம்நகரா, டும்கூர் போன்ற மற்ற அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெங்களூர் நகரை, டிராக்டர், கார் மற்றும் பஸ்களில் ஜனவரி 26ம் தேதி காலை 9 மணிக்கு வந்தடைந்தனர். டெல்லியின் எல்லைகளில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள் மத்திய பெங்களுருவின் காந்தி நகரில் உள்ள சுதந்திர பூங்காவை மதியவேளையில் அடைந்தார்கள். தலைநகரில் நடைபெறும் குடியரசு தின விழா பேரணிக்கு, மூன்று வேளாண் புதிய சட்டங்களையும் எதிர்த்து, நவம்பர் 26ம் தேதி முதல் போராடி வரும் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விவசாயிகள் எதிர்த்து வரும் அந்த மூன்று சட்டங்கள், விவசாயப் பொருட்களுக்கான சந்தை கமிட்டிக்கு தொடர்பான சட்டம் , விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் . மசோதாக்களாக ஜூன் 5, 2020ல் கொண்டு வரப்பட்டன. பின்னர் சட்ட வரைவுகளாக செப்டம்பர் 14ல் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போதிருக்கும் அரசால் அதே மாதம் 20ந் தேதி அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டன.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள். இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்து இந்தியரையும் பாதிக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும் இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 32 ஆன சட்ட உதவிபெறும் உரிமையை முடக்கி முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறது.
டி.சி.வசந்தா, பெங்களுருவுக்கு அருகில் உள்ள பிடாடி நகரில் போராட்டக்ககாரர்களுடன் கலந்துகொண்டார். அவரும், அவரது சகோதரி புட்டா சன்னம்மா, இருவருமே விவசாயிகள், மண்டியா மாவட்டம் மடூர் தாலுகாவில் இருந்து வந்திருந்தனர். அவர்களின் கிராமமான கே.எம்.டோடியில், அவரும் அவரது கணவர் கே.பி.நிங்கேகவுடாவும் சேர்ந்து நெல், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை சாகுபடி செய்திருந்து வருகிறார்கள். அவர்களின் 4 பேர் கொண்ட குடும்பத்தில் 23 வயதான அவரது மகன் செவிலியர் படிப்பு படிக்கிறார். 19 வயதான மகள் சமூக சேவை படிப்பு படிக்கிறார். அவர்களின் வருமானம் விவசாயத்தில் இருந்தே கிடைத்தது. வசந்தா மற்றும் அவரது கணவர் இருவருமே ஊரக வேலை திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை செய்து வருகிறார்கள்.
“கர்நாடக வேளாண் சீர்திருத்தச்சட்டம் 2020ஐ மேற்கோள் காட்டி, நிலச்சட்டம் போல், புதிய வேளாண் சட்டங்கள், பெரு வணிக நிறுவனங்களுக்கே நன்மை அளிப்பதாக இருக்கும்” என்று வசந்தா கூறினார். அச்சட்டம் விவசாயிகள் அல்லாதோர், விவசாய நிலங்களை விற்பதையோ, வாங்குவதையோ தடுக்கவில்லை. பெரு வணிக நிறுவனங்கள் விவசாய நிலங்களை எடுத்துக்கொள்வது குறித்து அச்சமடைந்துள்ள நிலையில் கர்நாடக விவசாயிகள், மாநில அரசு அச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அரசு விவசாயிகளை, உணவு விளைவிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆனால், தொடர்ந்து எங்களைத்தான் வஞ்சித்து வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் எடியூரப்பா இருவரும் விவசாயிகளை துன்புறுத்துகிறார்கள். நிலச்சட்டத்தை எடியூரப்பா இங்கு கொண்டு வந்துள்ளார். அதை அவர் திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளுக்கு உறுதியளிக்க வேண்டும். நூற்றக்கும் மேற்பட்டவர்கள் டிராக்டர்களில் இங்கு வந்துள்ளார்கள். எங்களுக்கு அச்சமில்லை“ என்று வசந்தா மேலும் கூறினார்.
“பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளைவிட, கர்நாடக விவசாயிகள் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று படகல்புரா நாகேந்திரா கூறினார். கர்நாடகாவின் விவசாயிகள் சங்கமான கர்நாடக ராஜ்ய ரைத்தா சங்காவின் தலைவர். “நாங்கள் முதலில் மே 2020ல் நிலச்சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை துவக்கினோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். பெங்களுருவில், குடியரசு தின பேரணியை ஒருங்கிணைத்ததில் எங்கள் சங்கம் முக்கியமானது. நாங்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரம் டிராக்டர்களை கொண்டுவர திட்டமிட்டிருந்தோம். ஆனால், காவல்துறையினர் 125 டிராக்டர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தனர்“ என்று அவர் மேலும் கூறினார்.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் வருமானம் ஈட்டுவதை கடினமாக்கும் என்று ஆர்.எஸ். அமரேஷ் கூறினார். சித்ரதுர்கா மாவட்டம் செல்லகேரா தாலுகா ரேணுகாபுரா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது விவசாயி ஆவார். “விவசாயிகளாக இருப்பது மிகக்கடினமான ஒன்று. எங்கள் பயிருக்கு மதிப்பு கிடையாது. விவசாயத்தின் மீதான எங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டோம். இது இப்படியே தொடர்ந்தால், ஒரு விவசாயி கூட இல்லாத நிலை ஏற்படும்“ என்கிறார் அவர்.
அமரேசுக்கு தனது பிள்ளைகள் விவசாயி ஆவதில் விருப்பமில்லை. அதனால், அவர்கள் வேறு வேலைகளுக்குச் செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். “நான் எனது இரண்டு பிள்ளைகளையும் படிக்கவைத்துவிட்டேன். அதனால், அவர்கள் விவசாயத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு சாகுபடிக்கான செலவு அதிகம். 3 தொழிலாளர்கள் என் வயலில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு, ரூ.500 ஊதியமாக வழங்குகிறேன். எனக்கு வருமானம் பத்தவில்லை“ என்று அவர் மேலும் கூறினார். அவரது 28 வயது மகன் பட்டய கணக்கறிஞராக படித்துக்கொண்டிருக்கிறார்.. அவரது 20 வயது மகள் எம்எஸ்சி மாணவி.
பிடாடி பியாரமங்களா குறுக்குசாலைக்கு, ஜனவரி 26ம் தேதி முதலில் வந்த போராட்டக்காரர்களுள் ஒருவர் கஜேந்திரா ராவ், கஜேந்திரா விவசாயி கிடையாது. அவர் ஒரு கார் ஒட்டுனர். கர்நாடகா ஜனசக்தி எனும் மாநிலத்தின் உரிமை குழுவுடன் தொடர்புடைய செயற்பாட்டாளர், “நான் எனது உணவுக்காக இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்“ என்று அவர் கூறினார். அரசு தற்போது இந்திய உணவுக்கழகத்தில் உணவை சேமிக்கிறது. இந்த முறை மெதுவாக மாற்றமடையும். நாம் அந்த மாற்றத்தின் திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். அரசிடமின்றி, பெருவணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், உணவுப்பொருட்களின் விலை நிச்சயம் உயரும். எனக்கு போராடுவதற்கான அனைத்து உரிமையும் உள்ளது“ என்று அவர் மேலும் கூறினார்.
கஜேந்திராவின் தாத்தாவுகக்கு உடுப்பி மாவட்டத்தில் விவசாய நிலம் உள்ளது. “குடும்பத்தகராறில் அதை இழந்துவிட்டோம். எனது தந்தை 40 ஆண்டுகளுக்கு முன் பெங்களுருக்கு வந்து உணவகம் ஒன்றை துவக்கினார். நான் நகரில் தற்போது கார் ஓட்டுகிறேன்” என்று கஜேந்திரா கூறினார்.
மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை பாதிக்கும் என்று கேஆர்ஆர்எஸ் தலைவர் நாகேந்திரா கூறினார். “கர்நாடகாவிலும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பாதிப்பு இருக்கும். கர்நாடகாவில் வேளாண் விளைபொருள் சந்தை கமிஷன் 1996 சட்டத்தின் கீழ் கொள்முதலில் சில கட்டுப்பாடுகள் இருந்தது. புதிய சட்டம் தனியார் சந்தை மற்றும் நிறுவனங்களையே முன்னிறுத்தும். உண்மையில் வேளாண் சட்டங்கள் கிராமப்புற இந்தியாவிற்கு எதிரானவையே“ என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சட்டங்கள் விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்று அமரேஷ் நம்புகிறார். “அரசு எங்களின் சாகுபடி செலவை கருத்தில்கொண்டு, ஒரு சிறிய லாபம் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இந்த சட்டங்களை கொண்டுவருவதன் மூலம் அவர்கள் விவசாயிகளை துன்புறுத்துகிறார்கள். பெருநிறுவனங்கள் அவர்களின் தந்திரம் மூலம் எங்களுக்கு குறைவாக வழங்குவார்கள்“ என்று அவர் கூறினார்.
ஆனால், வசந்தா அது நடக்கவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். “நமது கடின உழைப்பிற்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை நாம் பெறவேண்டும்“ என்று அவர் கூறினார். “ஒரு மாதம் மட்டுமல்ல தேவைப்பட்டால், ஒரு ஆண்டு கூட நாங்கள் போராடுவோம்“ என்று மேலும் அவர் கூறினார்.
தமிழில்: பிரியதர்சினி. R.