“இத்திருவிழா எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது,” என்கிறார் பாலாபதி மஜி. குடியா கோண்டு சமூகத்தைச் சேர்ந்த இவரும், இவரைப் போன்ற பிற பழங்குடியினப் பெண்களும் உள்ளூர் அளவில் நடைபெறும் நாட்டு விதைத் திருவிழாவில் பங்கேற்கத் தயாராகின்றனர். மலைக் குன்றுகளும், அடர்வனமும் சூழ்ந்த அவர்களின் புர்லுபாலு கிராமமே கொண்டாட்டத்திற்கு தயாராகிறது. பாரம்பரிய இசைக் கருவிகளான முரசுகள், தாப், தமுக்கு போன்றவை இசைக்கப்பட, சிறு சிறு மண் பானைகளில் விதைகளை நிரப்பி தலையில் சுமந்தபடி, பெண்கள் பாடிக்கொண்டே நடனமாடினர்.
கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள பூமித் தாய் கோயிலில் அவர்கள் திரண்டனர். கிராம பூசாரி பூஜை முடித்த பிறகு திருவிழா நடைபெறும் இடத்தை நோக்கி ஊர்வலம் தொடங்கியது. ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், துமுதிபந்தா தொகுதியில் உள்ள திறந்தவெளியில் அந்த இடம் அமைந்துள்ளது.
“நல்ல அறுவடைக்காக நாங்கள் பூஜை செய்கிறோம். சிலசமயம் எங்கள் தெய்வங்களுக்கு ஆடு, கோழியையும் பலி கொடுக்கிறோம். நல்ல விளைச்சல் இருந்தால் ஆண்டுமுழுவதும் உணவு கிடைக்கும். திருவிழாவின்போது நாங்கள் விதைகளை பரிமாற்றம் செய்து கொள்வோம், எங்களிடமிருந்து விதை பெறுபவர் நல்ல அறுவடை செய்ய வேண்டுவோம்,” என்கிறார் இரண்டு ஏக்கர் நிலத்தில் குடும்பத்துடன் தினை, சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்துவரும் 43 வயதாகும் பாலாபதி.
இந்தாண்டு நடைபெற்ற விதைத் திருவிழாவில் பாலாபதி உள்ளிட்ட சுமார் 700 பழங்குடியின பெண் விவசாயிகள் கோதாகர், ஃபிரிங்கியா, துமுதிபந்தா தொகுதிகளில் இருந்து பங்கேற்றனர். மார்ச் மாதத்தில் அறுவடையின்போது நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும். விதைகளை காட்சிப்படுத்தவும், மரபு விதைகளை பரிமாற்றம் செய்யவும், இழந்த வகையினங்களை மீட்டெடுக்கவும், வேளாண் முறைகள் குறித்து பேசவும் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்தாண்டு விதைத் திருவிழாவில் பங்கேற்ற பாலாபதி உள்ளிட்ட பழங்குடியின பெண் விவசாயிகள்.







