சில சமயங்களில் எங்காவது ஓடிவிடலாம் என்ற எண்ணம் கூட சிந்தம்பல்லி பரமேஸ்வரிக்கு வந்துவிடுகிறது. “என் குழந்தைகளுக்கு என்னைவிட்டால் யாருமில்லை என்பதால் அவர்களை விட்டுச் செல்ல முடியாது,” என்கிறார் அந்த 30 வயது தாய்.
2010 நவம்பரில் பரமேஸ்வரியின் கணவர் சிந்தம்பல்லி கமல் சந்திரா தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது 20 களில் இருக்கும். “அவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதவில்லை. அவருக்கு எழுத்தறிவு இல்லாதது கூட காரணமாக இருக்கலாம்,” என்று சிறு புன்முறுவலுடன் அவர் சொல்கிறார்.
இக்காரணத்தால் அவர் இரண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்த்து வருகிறார். 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விடுதியில் தங்கி சேஷாத்ரியும், அன்னப்பூர்ணாவும் அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். “அவர்கள் நினைவு வந்துகொண்டே இருக்கும்,” என்று தன்னைத் தானே ஆற்றுப்படுத்தியபடி சொல்லும் அவர், “அவர்களுக்கு நேரத்திற்கு உணவு கிடைக்குமா எனத் தெரியவில்லை,” என்கிறார்.
மாதத்திற்கு ஒருமுறை சென்று அவர்களை பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார். “என்னிடம் பணமிருந்தால், அவர்களுக்கு[பிள்ளைகளுக்கு] 500 [ரூபாய்] தருவேன், குறைவாக இருந்தால் 200 [ரூபாய்] தருவேன்,” என்கிறார் அவர்.
தெலங்கானாவில் பட்டியலினமான மதிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சில்தம்பல்லி கிராமத்தில் ஒற்றை அறை வீட்டில் பரமேஸ்வரி வசிக்கிறார். வீட்டின் கூரை தொய்வடைந்துள்ளது. வெளியே ஒரு திறந்த கொட்டகையும் உள்ளது. தெலங்கானாவின் விகராபாத் மாவட்டத்தில் உள்ள அந்த வீடு அவரது மறைந்த கணவர் கமல் சந்திரா குடும்பத்திற்கு சொந்தமானது. அவரை திருமணம் முடித்தவுடன் பரமேஸ்வரி அந்த வீட்டிற்கு வந்துவிட்டார்.
கணவரின் மரணத்திற்கு பிறகு பரமேஸ்வரியின் முதன்மை வருவாய் ஆதாரமாக ஆசாரா ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இருக்கிறது. “2019 வரை எனக்கு 1000[ரூபாய்] கிடைத்தது, இப்போது மாதம் 2016[ரூபாய்] கிடைக்கிறது.”
ஓய்வூதிய திட்டத்தை தாண்டி அவர் அதே கிராமத்தில் கணவரின் உறவினர்களுக்கு சொந்தமான சோளக்கொல்லைகளில் வேலை செய்து மாதம் ரூ.2500 சம்பாதிக்கிறார். மற்றவர்களுடைய வயல்களில் வேலை செய்தும் ஒருநாளுக்கு ரூ.150-200 வரை அவர் சம்பாதிக்கிறார். ஆனால் இவ்வேலைகள் அவ்வப்போதுதான் அவருக்கு கிடைக்கின்றன.
அவரது வருவாய் முழுவதும் குடும்பத்தின் மாத செலவிற்கு போய்விடுகிறது. “சில மாதங்களில் இந்த பணம் போதாது,” என்று கூறியபடியே அவர் தனது புடவையின் முனையை சுருட்டுகிறார்.
அவரது கணவர் 13 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற கடனை திருப்பி செலுத்த அவர் போராடி வருவதால் இந்த வருவாய் போதவில்லை. வட்டிக்கடைக்காரர்களிடம் (அப்புலோருஸ்) வாங்கிய பணத்தை மாதந்தோறும் செலுத்துவது அவரை நிரந்தர நெருக்கடிக்கு தள்ளுகிறது. “இன்னும் எவ்வளவு செலுத்த வேண்டும் எனத் தெரியாது,” என்கிறார் அவர் கவலையுடன்.
சில ஏக்கர் நிலங்களை அவரது மறைந்த கணவர் கமல் சந்திரா குத்தகைக்கு எடுத்திருந்தார். செலவுகளை சரிகட்ட அவர் தொடர்ந்து கடன் பெற்றார். அவர் இறப்பதற்கு முன் விகராபாத் மாவட்டத்தின் ஐந்து தனித்தனி அப்புலோருஸ்களிடம் ரூ.6 லட்சம் கடனை சேர்த்து வைத்திருந்தார். “எனக்கு [மொத்தம்] மூன்று லட்சம் [ரூபாய்] கடன் இருந்தது தான் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை இருக்கும் எனத் தெரியாது,” என்கிறார் அந்த கைம்பெண்.
இரண்டு வட்டிக்கடைக்காரர்களிடம் ரூ.1.5 லட்சமும், மேலும் மூவரிடம் தலா ஒரு லட்சமும் கடன் பெற்றது கமல் இறந்த சில வாரங்களில் அவருக்கு தெரிய வந்தது. அனைத்து கடனுக்கும் ஆண்டு வட்டி 36 சதவிகிதம். இதற்கு என எவ்வித பதிவேடுகளும் கிடையாது என்பதால் பரமேஸ்வரியிடம் கணவரின் கடன் குறித்த முறையான விவரங்கள் இல்லை.
“கடன் முடிந்ததும் தகவல் சொல்லுமாறு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து கூறுவதை தவிர வேறுவழியில்லை,” என்கிறார் அவர். கடந்த மாதம் வட்டிக்காரர்களில் ஒருவரிடமும் இன்னும் எவ்வளவு கடன் தொகை உள்ளது எனக் கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை.
ஒவ்வொரு அப்புலோருக்கும் மாதம் ரூ.2000 அவர் கொடுக்க வேண்டும். பாரத்தை குறைக்க அவர் மாதத்தில் வெவ்வேறு நேரங்களில் ஐந்து பேருக்கும் பணம் செலுத்தி வருகிறார். “ஒரே மாதத்தில் ஐந்து பேருக்கும் என்னால் பணத்தை திருப்பித் தர முடியாது,” எனும் அவர் சிலருக்கு மாதம் ரூ.500 கொடுத்து சமாளித்து வருகிறார்.
“இப்படி செய்ததற்கு [தற்கொலைக்கு] என் கணவரை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன். எனக்கு புரிகிறது,”எனும் பரமேஸ்வரி மேலும் சொல்கிறார், “சிலசமயங்களில் எனக்கும் அப்படி செய்ய தோன்றுகிறது. நான் தனியாக போராடி வருகிறேன்.”
சில சமயங்களில் கவலை அதிகமாகும்போது என் பிள்ளைகளை நினைத்துப் பார்ப்பேன். பிறகு இந்த அப்புலோருஸ் என் பிள்ளைகளிடம் [நான் இறந்துவிட்டால்] கடனை திருப்பி செலுத்த சொல்வார்கள் என்கிறார் அவர் துயரத்துடன். “அவர்கள் ஏன் செலுத்த வேண்டும்? அவர்கள் படித்துவிட்டு பெருநகரங்களில் பெரிய நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.”
*****
காலை 5 மணிக்கு பரமேஸ்வரியின் அன்றாட பணிகள் தொடங்குகின்றன. “வீட்டில் அரிசி இருந்தால் சமைப்பேன். இல்லாவிட்டால் கஞ்சி செய்துகொள்வேன்,” என்கிறார். வேலை நாட்களில் மதிய உணவுடன் காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து அவர் புறப்பட்டு விடுகிறார்.
மற்ற நாட்களில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மிச்ச நேரத்தில் சிறிய தொலைக்காட்சி பெட்டியில் கருப்பு வெள்ளை தெலுங்கு பாடல்கள், தொடர்கள் போன்றவற்றை அவர் பார்க்கிறார். “எனக்கு திரைப்படங்கள் பார்க்க பிடிக்கும். சிலசமயம் அதையும் [கேபிள் இணைப்பிற்கான சந்தாவை] நிறுத்திவிட நினைப்பேன்.” மனதளவில் உடையும் போதெல்லாம் ஆறுதலாக இருப்பதால் கேபிள் இணைப்பிற்கு ரூ.250 செலவிடுவதாக அவர் சொல்கிறார்.
2022 அக்டோபரில், கிராமப்புற நெருக்கடிகளுக்கான உதவி எண் கிசான் மித்ராவிற்கு அழைக்குமாறு உறவினர் ஒருவர் அவரிடம் பரிந்துரைத்தார். “ஒரு பெண்மணியிடம் தொலைபேசியில் பேசுவது நன்றாக இருந்தது. அவர் எல்லாம் சரியாகிவிடும் என்றார்,” என பரமேஸ்வரி நினைவுகூருகிறார். தெலங்கானா, ஆந்திரப்பிரதேசத்தில் கிராமப்புற வளர்ச்சி சேவை சமூகம் எனும் என்ஜிஓ இந்த உதவி எண் சேவையை நடத்தி வருகிறது. அழைப்பிற்கு பிறகு கிசான் மித்ராவின் கள ஒருங்கிணைப்பாளர் ஜே. நரசிம்மலு அவரது வீட்டிற்கு வந்தார். “அவர் [நரசிம்மலு] என் கணவர், குழந்தைகள், பொருளாதார நெருக்கடிகள் பற்றி விசாரித்தார். கேட்பதற்கு ஆறுதலாக இருந்து,” என்கிறார் அவர்.
கூடுதல் வருமானத்திற்கு பரமேஸ்வரி பசு வாங்குகிறார். “அவள் [பசு] என் தனிமை உணர்வை குறைப்பாள்,” இதற்காக அவர் ரூ.10,000 முன்தொகையும் செலுத்தியுள்ளார். “பசு இன்னும் வீட்டிற்கு வரவில்லை. ஆனால் விரைவில் அது நடக்கும்,” என்கிறார் அவர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது இருக்கும் யாரையேனும் நீங்கள் அறிந்திருந்தாலோ 1800-599-0019 (24/7 இலவச சேவை) என்ற தேசிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களுக்கு அருகே இருக்கும் எண்ணை இவற்றிலிருந்து தொடர்பு கொள்ளவும். உளவியல் சுகாதார வல்லுனர்கள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ள SPIF-ன் உளவியல் ஆரோக்கிய விவரப்புத்தகத்துக்கு செல்லவும்.
ரங் தே நிதியுதவியில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தமிழில் : சவிதா