“நாங்கள் ஒருபோதும் திரும்பிச் செல்ல மாட்டோம்,” என்கிறார் பீமா சோடி. “நாங்கள் அமைதியைத் தேடி வீட்டைவிட்டு வந்தோம், காட்டுவாசிகள் [நக்சலைட்], ஜூடும்வாலி [சல்வா ஜூடும் போராளிகள்] ஆகியோர் முன்னோர்கள் கிராமத்தில் எங்களை தொந்தரவு செய்தனர்.”
சோயம் லிங்கமாவும் சத்திஸ்கரின் தண்டேவாடா மாவட்டம் பந்தர்பதரில் உள்ள தனது கிராமத்திற்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்கிறார். “நாங்கள் அங்கிருந்து ஓடிவந்துவிட்டோம்...” அவரும் பீமாவும் அங்குள்ள 27 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அனைவருமே சத்திஸ்கரிலிருந்து வந்து இப்போது ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் புர்கம்பாடு மண்டலத்தில் உள்ள சிப்ருபாடுவில் வாழ்கின்றனர்.
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள், தெலங்கானாவின் கம்மம், வாராங்கல் மாவட்டங்களில் காணப்படும் உள் குடிபெயர்வோரின் பல குடியிருப்புகளில் இதுவும் ஒன்று.
பெரும்பாலானோருக்கு சொல்வதெற்கென பல வன்முறை கதைகள் உள்ளன. சுக்மா மாவட்டத்தின் கோன்டா மண்டலில் உள்ள தட்மேட்லா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ரவி சோடி பேசுகையில், “2005ஆம் ஆண்டு எங்கள் கிராமம் தாக்கப்பட்டபோது வீட்டைவிட்டு வெளியேறினோம்... கிராமத்தினர் அனைவரும் காட்டிற்குள் சென்றோம். ஆனால் எனது 30 வயது மாமா அங்கு சிக்கிக் கொண்டார். அவர் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார், ஒட்டுமொத்த கிராமமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அச்சத்தில் நாங்கள் அங்கிருந்து இங்கு வந்தோம்,” என்றார். சோடி தற்போது கம்மம் மாவட்டம் சிந்தலபாடுவில் வசிக்கிறார்.







