ஷீலா வாக்மரே இரவில் நன்றாகத் தூங்கிப் பல காலமாகிறது.
"என்னால் இரவில் தூங்க முடியாது... பல வருடங்கள் ஆகிறது," என்கிறார் 33 வயது ஷீலா. 33, தரையில் விரிக்கப்பட்ட கோதாடியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, அவளது சிவந்த விளிம்பு கொண்ட கண்கள் ஆழ்ந்த வலியால் பளபளத்தன. அவள் நீண்ட இரவு நேரங்களை விவரிக்கையில், அவள் அடக்க முயற்சிக்கும் அழுகையால் அவளது உடல் சிதைந்துள்ளது. "நான் இரவு முழுவதும் அழுகிறேன். நான் உணர்கிறேன்...நான் மூச்சுத் திணறுவதைப் போல உணர்கிறேன்."
ஷீலா மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ராஜூரி கோட்கா கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் பீட் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். இரண்டு அறை வீட்டில் அவர் தூங்கும் போது, அவரது கணவர் மாணிக் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளான கார்த்திக், பாபு மற்றும் ருதுஜா ஆகியோர் பக்கத்தில் இருப்பார்கள் என்றும் அவரது விம்மல்கள் நிறைந்த அழுகை மற்றவர்களை எழுப்பி விடுவதாகவும் அவர் கூறுகிறார். “என் அழுகை அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது. பிறகு நான் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன்.”
ஆனால் தூக்கம் வரவில்லை. கண்ணீரும் நிற்கவில்லை.
"நான் எப்போதும் சோகமாகவும், கவலையாகவும் உணர்கிறேன்," என்று ஷீலா கூறுகிறார். சிறு அமைதிக்குப் பிறகு, எரிச்சலுடன் பேசுகிறார். “என் கருப்பை அகற்றப்பட்ட பிறகு இது தொடங்கியது. இது என் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றி விட்டது. 2008-ம் ஆண்டு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு 20 வயதுதான். அதன்பிறகு, அவர் சோகம், தூக்கமில்லாத இரவுகள், விவரிக்க முடியாத எரிச்சல் மற்றும் நீண்ட நேரத்துக்குத் தொடரும் உடல் வலிகள் ஆகியவற்றால் அவதிப்படுகிறார்.















