எழில் அண்ணனின் நினைவு என்னை இறுக்கமாக பற்றுகிறது. மாயவிசை கொண்டு ஒரு நனவோடையில் என்னை இழுத்துச் செல்கிறது. நடனமாடும் உயரமான மரங்களுக்கு மத்தியில் பாடும் நிழல்கள் நிறைந்த வண்ணமயமான காடுகளின் ஊடாக நாடோடி ராஜாக்களின் கதைகளுக்குள்ளும் மலை உச்சிக்கும் என்னை கொண்டு செல்கிறது. அங்கிருந்து பார்க்கையில் உலகம் கனவைப் போல் தெரிகிறது. பிறகு திடுமென அண்ணன் என்னை குளிரிரவுக் காற்றில் நட்சத்திரங்களின் குவியலுக்குள் எறிந்தார். நான் களிமண் ஆகும்வரை தரையை நோக்கி என்னை அழுத்திக் கொண்டே இருந்தார்.
அவர் களிமண்ணால் செய்யப்பட்டவர். அவரின் வாழ்க்கை அப்படிதான் இருந்தது. ஒரு கோமாளியாக ஓர் ஆசிரியராக, ஒரு குழந்தையாக, ஒரு நடிகராக எந்த பாத்திரமாகவும் வார்க்கப்படக் கூடிய களிமண்ணாக அவர் இருந்தார். எழிலண்ணன் என்னை களிமண்ணிலிருந்து வார்த்தெடுத்தார்.
குழந்தைகளுக்கு அவர் சொல்லிய ராஜா கதைகளினூடாக நான் வளர்ந்தேன். இப்போது நான் அவரின் கதையைச் சொல்லவிருக்கிறேன். எனக்கும் என் புகைப்படங்களுக்கும் பின்னால் காரணமாக இருந்தவர் அவர். என்னுள் ஐந்து வருடங்களாக அவரின் கதை குடி கொண்டிருக்கிறது.
*****
ஆர்.எழிலரசன் கோமாளிகளின் அரசன். குதித்து ஓடும் எலி. முகத்தில் வரிகள் கொண்ட வண்ணப்பறவை. சிங்கமாக பொல்லாத ஓநாயாக, அன்றாடம் சொல்லும் கதையைப் பொறுத்து அவரது பாத்திரம் மாறும். கதைகளை பெரிய பச்சைப் பையில் முப்பது வருடங்களாக சுமந்து தமிழ்நாட்டின் காடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்துக் கொண்டிருந்தவர்.
அது 2018ம் ஆண்டு. நாங்கள் நாகப்பட்டினத்தின் அரசுப் பள்ளி வளாகத்தில் இருந்தோம். கஜா புயலால் சாய்க்கப்பட்ட மரங்கள் வெட்டி குவிக்கப்பட்டிருந்து பள்ளி வளாகத்தின் சூழல், கைவிடப்பட்ட ஒரு அறுவை ஆலைக்கான தோற்றத்தைக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த மாவட்டத்தில் இருந்த வளாகத்தின் வெறிச்சோடியிருந்த தோற்றத்தை, ஒரு மூலையிலிருந்து வெளிவந்த குழந்தைகளின் உற்சாகமான சிரிப்பு சத்தங்கள் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
“வந்தானே தென்னப் பாருங்க கட்டியக்காரன் ஆமா கட்டியக்காரன். வாரானே தென்னப் பாருங்க.”
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களை முகத்தில் பூசிக் கொண்டு மூக்கில் ஒரு புள்ளியும் இரு கன்னங்களில் இரு புள்ளிகளையும் வைத்துக் கொண்டு ஒரு நீலப் பாலிதின் பையால் செய்த கோமாளித் தொப்பியை அணிந்து கொண்டு, வேடிக்கையான பாட்டொன்று பாடி, ஓர் இயல்பான தாளம் கையில் ஓட, பார்த்தாலே சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் இருந்தார். அங்கிருந்த ஆரவாரம் வழக்கமானதுதான். ஜவ்வாது மலைகளின் சிறிய அரசுப் பள்ளியோ சென்னையின் பெரிய தனியார் பள்ளியோ சத்தியமங்கலக் காடுகளுக்குள் பழங்குடி குழந்தைகளுக்கான பள்ளியோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியோ எங்கானாலும், எழில் அண்ணாவின் கலை முகாம்கள் இப்படிதான் தொடங்கும். ஒரு சிறு நகைச்சுவை நாடகம் கொண்ட பாடலுக்குள் அண்ணா சென்றுவிடுவார். குழந்தைகள் தங்களின் தயக்கங்களை கைவிட்டு ஓடி விளையாடி ஆடிப் பாடலுடன் பாட அது உதவுகிறது.
திறன் வாய்ந்த கலைஞரான அண்ணா, பள்ளிகளில் இருக்கும் வசதிகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். பதிலுக்கு அவர் எதுவும் எதிர்பார்க்கவும் மாட்டார். தனியாக வசிப்பதற்கோ ஹோட்டல் அறை ஏற்பாடுகளோ, சிறப்பான உபகரணமோ எதுவும் கேட்க மாட்டார். மின்சாரமும் நீரும் அலங்காரக் கைவினைப் பொருட்கள் இல்லையென்றாலும் அவர் இயங்குவார். குழந்தைகளைT சந்திப்பதுதான் அவரது பிரதானத் தேவை. அவர்களுடன் உரையாடி இயங்குவதில் மட்டும்தான் அவர் கவனம் செலுத்துவார். மற்ற எல்லாமுமே இரண்டாம் பட்சம்தான். அவரின் வாழ்க்கையிலிருந்து குழந்தைகளை பிரிக்க முடியாது. குழந்தைகள் என வந்துவிட்டால் செயல்பாடும் வசீகரமும் அவருக்கு வந்து விடும்.
ஒருமுறை சத்தியமங்கலத்தில், வண்ணங்களை பார்த்திராத குழந்தைகளுடன் அவர் இயங்கினார். வண்ணங்களைக் கொண்டு கற்பனையாக ஒன்றை உருவாக்கச் செய்து, அது கொடுக்கும் புதிய அனுபவத்தை அவர்கள் முதன்முறையாக அனுபவிக்க அவர் உதவினார். இத்தகைய அனுபவங்களை களிமண் விரல்கள் என்கிற தன் கலைப் பள்ளியைத் தொடங்கி கடந்த 22 வருடங்களாக ஓய்வின்றி குழந்தைகளுக்காக தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நோய் வந்து நான் பார்த்ததே இல்லை. அவருக்கான மருந்து குழந்தைகளுடன் இயங்குவதுதான். குழந்தைகளுடன் இயங்க அவர் எப்போதுமே தயாராக இருப்பார்.
30 வருடங்களுக்கு முன் 1992-ம் ஆண்டில் அண்ணா சென்னையின் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைப் பட்டப்படிப்பு முடித்தார். “எனக்கு மூத்தவர்களான ஓவியர் தமிழ்செல்வன், ஆடை வடிவமைப்பாளர் பிரபாகரன், கல்லூரி வாழ்வில் மிகப் பெரும் ஆதரவு வழங்கிய ஓவியர் ராஜ்மோகன் ஆகியோர்தான் பட்டப்படிப்பை நான் முடிக்க உதவினர்,” என நினைவுகூர்கிறார். மண்பாண்ட சிலை வடித்தலில் படிப்பை முடித்துவிட்டு, கலைவேலைச் செயல்பாடுகளில் ஈடுபட சென்னையின் லலித் கலா அகாதெமியில் சேர்ந்தேன்.” அவரின் சிலை வடிக்கும் ஸ்டுடியோவிலும் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்தார்.
“என்னுடைய படைப்புகள் விற்கப்படத் தொடங்கியதும் அவை சாமானியர்களைச் சென்றடையவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அதற்குப்பிறகுதான் நான் வெகுஜன மக்களுக்கான கலைச் செயல்பாடுகளில் பங்கெடுக்கத் தொடங்கினேன். கிராமப்புறங்களும் தமிழ்நாட்டின் ஐந்திணை நிலங்களும்தான் நான் இயங்க வேண்டிய இடங்களென முடிவெடுத்தேன். என்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து களிமண் பொம்மைகளும் கைவினைப் பொருட்களும் தயாரிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். காகித முகமூடிகள், களிமண் முகமூடிகள், களிமண் வார்ப்புகள், ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், ஓரிகாமி போன்றவற்றை செய்ய குழந்தைகளுக்கு அவர் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.
எப்போது பயணித்தாலும் பேருந்து, வேன் என எந்தப் போக்குவரத்தாக இருந்தாலும் எங்களின் உடைமைகளில் குழந்தைகளுக்கான பொருட்கள்தான் பெருமளவு இருக்கும். எழிலண்ணாவின் பெரிய பச்சைப் பை, ஓவியப் பலகை, பெயிண்ட் ப்ரஷ்கள், கலர்கள், ஃபெவிகால், பழுப்பு அட்டை, கண்ணாடி பெயிண்ட்கள், பேப்பர் என பல விஷயங்களால் நிரப்பப்பட்டிருக்கும். அவர் எங்களை கலைப் பொருட்கள் கிடைக்கும் எல்லிஸ் ரோடு தொடங்கி பாரிஸ் கார்னர், திருவல்லிக்கேணி, எழும்பூர் என சென்னையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வார். கால்களில் வலி எடுக்கும். 6-7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி விடும்.
அண்ணனிடம் போதுமான பணம் எப்போதும் இருந்ததில்லை. நண்பர்களிடம் நிதி பெற்று சிறு வேலைகள் மூலம் பணமீட்டி தனியார் பள்ளிகளில் நிகழ்ச்சி செய்து கிடைக்கும் நிதியைக் கொண்டுதான் மாற்றுத்திறனாளி மற்றும் பழங்குடி குழந்தைகளுக்கு இலவச முகாம்கள் நடத்துவார். எழில் அண்ணனுடன் நான் பயணித்த ஐந்து வருடங்களில் வாழ்க்கை மீதான அவரின் ஆர்வம் குறைந்து நான் பார்த்ததில்லை. அவருக்கென எதையும் சேமித்து வைத்துக் கொண்டதும் இல்லை. சேமிக்குமளவுக்கு அவரிடம் எதுவும் இருந்ததுமில்லை. அவர் சம்பாதித்தவற்றையும் என்னைப் போன்ற சகக் கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
சில நேரங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக அண்ணன் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பார். கல்விமுறை அத்தகைய சிந்தனையை குழந்தைகளுக்கு போதிக்க தவறிவிட்டன என்பதே அவரது எண்ணம். கலைப்படைப்புகள் உருவாக்க கைவசம் உள்ள பொருட்களையே குழந்தைகள் பயன்படுத்த அவர் செய்வார். களிமண் எளிதாகக் கிடைக்கும். அவரும் அதை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதை அவரே பக்குவப்படுத்துவார். கற்களையும் வண்டலையும் அகற்றுவார். மணற்கட்டிகளை உடைப்பார். நீரில் முக்குவார். சலித்து காய வைப்பார். களிமண் அவரையும் அவரது வாழ்க்கையையும் எனக்கு நினைவுபடுத்துகிறது. குழந்தைகளுடன் கலந்த, நெகிழ்வான வாழ்க்கை. முகமூடிகள் உருவாக்க குழந்தைகளுக்கு அவர் கற்றுக் கொடுப்பதை பார்ப்பது அலாதியான அனுபவம். ஒவ்வொரு முகமூடியும் ஒவ்வொரு தனித்தன்மையான உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும். ஆனால் குழந்தைகளின் முகங்கள் எல்லாமும் மகிழ்ச்சி உணர்வையே அணிந்திருக்கும்.
குழந்தைகள் களிமண்ணை எடுத்து முகமூடியாக மாற்றும்போது பெறும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது. வாழ்க்கைகளுடன் தொடர்பு கொண்ட கருத்துகளை அவர்கள் சிந்திக்கும்படி செய்வார் எழில் அண்ணன். அவர்களின் ஆர்வங்கள் என்னவென கேட்டுக் கொண்டே இருப்பார். அவற்றை பின்பற்றுமாறு வலியுறுத்துவார். தண்ணீர் இல்லாத அல்லது குறைவான தண்ணீர் மட்டுமே கிடைக்கும் வீட்டுக் குழந்தைகள் குடிநீர் தாங்கிகளை உருவாக்குவர். சில குழந்தைகள் யானைகள் உருவாக்குவார்கள். காடுகளிலிருந்து வரும் குழந்தைகள், யானைகளுடனான தங்களின் அழகான உறவை அடையாளப்படுத்தும் வகையில் உயர்ந்த துதிக்கைகளுடன் யானைகளை உருவாக்குவார்கள்.
கலைமுகாம்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை தீவிர சிந்தனைக்கு பிறகே அவர் தேர்ந்தெடுப்பார். நேர்த்திக்கான அவரது விருப்பமும் சரியான பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டுமென்கிற அக்கறையும்தான் அவரை எங்களது நாயகனாக ஆக்கியவை. முகாமின் ஒவ்வொரு இரவின்போதும் எழிலண்ணனும் பிறரும் அடுத்த நாளுக்கான பொருட்களை உருவாக்குவார்கள். பார்வைத் திறனற்ற குழந்தைகளுக்கு முகாம் நடத்துவதற்கு முன் அவர்களுடன் தொடர்பு கொள்வதெப்படி எனக் கற்றுக் கொள்ள கண்களை கட்டிக் கொள்வார். காது கேட்கும் திறனற்ற குழந்தைகளை பயிற்றுவிக்கும் முன் காதுகளை மூடிக் கொள்வார். மாணவர்களின் அனுபவங்களை புரிந்து கொள்ள அவர் செய்யும் முயற்சிகள்தாம் என் புகைப்படங்களின் மாந்தர்களுடன் பழக எனக்கு உத்வேகமளித்தவை. புகைப்படம் எடுப்பதற்கு முன் தொடர்பு கொள்வது முக்கியம்.
பலூன்களின் மாயத்தை எழிலண்ணன் புரிந்து கொண்டார். பலூன்களைக் கொண்டு அவர் விளையாடும் விளையாட்டுகள் எப்போதுமே சிறுவர்களுடனும் சிறுமிகளுடனும் இணக்கத்தை உருவாக்க உதவியிருக்கின்றன. எப்போதும் அவரது பையில் பல வகை பலூன்களை வைத்திருப்பார். பெரிய வட்டமான பலூன்கள், நீளமான பாம்பு வடிவ பலூன்கள், வளைந்த பலூன்கள், விசில் வரும் பலூன்கள், நீர் நிரம்பிய பலூன்கள் எனப் பலவகை. குழந்தைகள் மத்தியில் அவை பெரும் பரவசத்தை உருவாக்குகின்றன. பிறகு பாடல்களும் உண்டு.
“குழந்தைகள் தொடர்ந்து பாடல்களையும் விளையாட்டுகளையும் விரும்புவதை என்னுடையப் பணியினூடாக புரிந்து கொண்டேன். எனவே சமூகக் கருத்துகள் கொண்ட பாடல்களையும் விளையாட்டுகளையும் உருவாக்குகிறேன். அவர்களையும் உடன் பாடச் செய்கிறேன்,” என்கிறார் அண்ணா. அவர் மொத்த இடத்திலும் உற்சாகம் பற்ற வைத்துவிடுவார். பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முகாம் முடித்து அவரை அனுப்ப விரும்பவே மாட்டார்கள். பாடல்கள் பாடச் சொல்வார்கள். அவரும் தொடர்ந்து ஓய்வின்றி பாடுவார். குழந்தைகள் சுற்றி இருப்பார்கள். பாடல்களும் உடனிருக்கும்.
அவர் தொடர்பு கொள்ள முயன்ற விதமும், மாணவர்களின் அனுபவங்க்ளை புரிந்து கொள்ள முயன்ற விதமும் என் புகைப்பட மாந்தர்களுடன் தொடர்பை நான் ஏற்படுத்திக் கொள்ள ஊக்கமாக அமைந்தது. என்னுடைய புகைபப்டக் கலை வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் என் புகைப்படங்களை எழிலண்ணனிடம் காட்டினேன். புகைப்படங்களில் இருப்பவர்களிடம் சென்று புகைப்படங்களைக் காட்டச் சொன்னார். “உன் திறமையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல அவர்கள் (மக்கள்) கற்றுக் கொடுப்பார்கள்,” என்றார் அவர்.
முகாம்களில் குழந்தைகள் தங்களின் படைப்பாற்றலை எப்போதுமே வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களின் ஓவியங்கள், ஓரிகாமி, களிமண் பொம்மைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும். பெற்றோரையும் உடன் பிறந்தாரையும் தங்களின் திறமைகளை காட்ட குழந்தைகள் பெருமையாக அழைத்து வருவர். எழில் அண்ணன் அந்த நிகழ்வை அவர்களின் கொண்டாட்டமாக ஆக்குவார். மக்கள் கனவு காண அவர் உதவினார். என்னுடைய புகைப்படக் கண்காட்சியும் அவர் வளர்த்தெடுத்த அத்தகையவொரு கனவுதான். அதை ஒருங்கிணப்பதற்கான ஊக்கத்தை அவரின் முகாம்களிலிருந்துதான் நான் பெற்றேன். ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை.
பணம் என்னிடம் இருக்கும்போதெல்லாம் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு தயாராக வைத்திருக்கும்படி அண்ணா சொல்வார். நான் பெரிய ஆளாக வருவேன் என்பார். பலரிடம் என்னைப் பற்றி அவர் சொல்வார். என்னுடைய பணிகளை பற்றியும் சொல்வார். அதற்குப் பிறகுதான் பல விஷயங்கள் எனக்கு நடக்கத் தொடங்கியதாக நினைக்கிறேன். முதல் பணமாக 10,000 ரூபாயை எழில் அண்ணாவின் குழுவிலிருந்து நாடகக் கலைஞரும் செயற்பாட்டாளருமான க்ருணா பிரசாத் எனக்குக் கொடுத்தார். முதன்முறையாக என் புகைப்படங்களுக்கு பிரிண்ட் போட முடிந்தது. என் புகைப்படங்களுக்கான மரச் சட்டகங்களை எப்படி உருவாக்குவதென அண்ணா எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவரிடம் தெளிவான திட்டம் இருந்தது. அதில்லாமல் என்னுடைய முதல் கண்காட்சியை நான் நடத்தியிருக்க முடியாது.
புகைப்படங்கள் பிறகு ரஞ்சித் அண்ணனையும் அவரது நீலம் பண்பாட்டு மையத்தையும் எட்டியது. உலகின் பல்வேறு இடங்களையும் கூட எட்டியது. ஆனால் அதற்கான யோசனை முதலில் உருவானது எழில் அண்ணனின் முகாமில்தான். அவருடன் பயணிக்கத் தொடங்குகையில் பல விஷயங்களை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பயணத்தில் பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். ஆனால் விஷயங்கள் தெரிந்தோர், தெரியாதோர் என அவர் பாகுபாடு காட்ட மாட்டார். திறன் இருக்கிறதோ இல்லையோ பலரை அழைத்து வரும்படி எங்களை அவர் ஊக்குவிப்பார். “புதிய விஷயங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம், அவர்களுடன் பயணிப்போம்,” என்பார். மனிதரில் குறைகளை அவர் பார்ப்பதில்லை. அப்படித்தான் அவர் கலைஞர்களை உருவாக்கினார்.
குழந்தைகளிடமிருந்தும் அவர் கலைஞர்களையும் நடிகர்களையும் உருவாக்கினார். “கேட்கும் திறனற்ற குழந்தைகள் கலைப் படைப்புகளை உணர நாங்கள் கற்றுக் கொடுப்போம். பூச்சு ஓவியம் வரயவும் களிமண்ணிலிருந்து வாழ்க்கைகளை உருவாக்கவும் கற்றுக் கொடுப்போம். பார்வைத் திறனற்ற குழந்தைகளுக்கு இசையும் நாடகக் கலையும் கற்றுக் கொடுப்போம். முப்பரிமாண சிலைகளை களிமண்ணில் உருவாக்கவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம். பார்வையற்ற குழந்தைகள் கலையைப் புரிந்து கொள்ள இது உதவும். குழந்தைகள் இத்தகைய கலை வடிவங்களை கற்கும்போது, சமூகப்புரிதலின் ஒரு அங்கமாக அவர்கள் இருப்பதை கற்றுக் கொள்ள முடிகிற போது, அவர்கள் சுதந்திரமாக உணர்வதை நாங்கள் காண முடிகிறது,” என்கிறார் அண்ணா.
குழந்தைகளுடன் இயங்கியதில் அவர், “கிராமத்துக் குழந்தைகள் - குறிப்பாக பெண் குழந்தைகள் - பள்ளியிலும் கூட கூச்சத்துடன் இருப்பதை” உணர்ந்திருக்கிறார். “அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆசிரியர் முன் எந்த சந்தேகமும் கேட்க மாட்டார்கள்,” என்கிறார். மேலும், “நாடகத்தின் வழியாக பேச்சுக்கலையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிவெடுத்தேன். இதற்காக நாடகவியலாளர் கருணப் பிரசாத்திடம் நான் பயிற்சி பெற்றுக் கொண்டேன். புருஷோத்தமனின் வழிகாட்டலில், குழந்தைகளுக்கு நாடகக் கலைப் பயிற்சி அளித்தோம்,” என்கிறார் அவர்.
பிற நாட்டுக் கலைஞர்களிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட பல கலை வடிவங்களைக் கொண்டும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க அவர் முயலுவதுண்டு. சூழல் குறித்த உணர்தலை குழந்தைகள் பெறச் செய்ய அவர் முயற்சிப்பார். “எங்கள் முகாம்களின் ஒரு பகுதியாக சூழலியல் படங்களை திரையிடுவோம். பறவையோ பூச்சியோ எத்தனை சிறிய உயிராக இருந்தாலும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் கலையை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம். அவர்களின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் செடிகளை அடையாளங்காண கற்றுக் கொள்கிறார்கள். அவற்றின் முக்கியத்துவத்தையும் பூமியை மதித்துக் காப்பாற்றவும் கற்றுக் கொள்கின்றனர். சூழலியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாடகங்களை நான் எழுதியிருக்கிறேன். நம் செடிகள் மற்றும் விலங்குகள் பற்றிய வரலாறையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். உதாரணமாக, சங்க இலக்கியம் 99 பூக்களைக் குறிப்பிடுகிறது. குழந்தைகள் அவற்றை வரையவும் பூர்விக இசைக்கருவிகளை இசைத்தபடி அவற்றை பற்றிப் பாடவும் நாங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்,” என விளக்குகிறார் எழில் அண்ணன். நாடகங்களுக்கு புதிய பாடல்களை அவர் உருவாக்குவார். விலங்குகள் மற்றும் பூச்சிகள் பற்றி புதுக் கதைகளையும் உருவாக்குவார்.
பெரும்பாலும் பழங்குடி மற்றும் கடலோர கிராமத்துக் குழந்தைகளிடம்தான் எழில் அண்ணன் பணிபுரிந்திருக்கிறார். சில நேரங்களில் நகரத்துப் பகுதி குழந்தைகளுடன் இயங்கும்போது, நாட்டுப்புறக் கலை மற்றும் கிராம வாழ்க்கை பற்றிய அறிவு அவர்களிடம் குறைவாக இருப்பதை கண்டிருக்கிறார். பிறகு அவர் மேளங்கள் கொண்ட பறையாட்டம், கொலுசு போன்ற ஆபரணம் கொண்டு நிகழ்த்தப்படும் சிலம்பு மற்றும் புலி முகமூடி அணிந்து ஆடப்படும் ஆட்டம் போன்ற நாட்டுப்புறக் கலையின் நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கினார். “இந்தக் கலை வடிவங்களை குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பது முக்கியமென நான் உறுதியாக நம்புகிறேன். கலைவடிவங்கள் நம் குழந்தைகளை சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருக்க உதவுமெனவும் நான் நம்புகிறேன்,” என்கிறார் எழில் அண்ணன்.
ஐந்தாறு நாட்களுக்கு நீடிக்கும் முகாமுக்கான குழுவில் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இருப்பார்கள். பாடகர் தமிழரசன், ஓவியர் ராகேஷ் குமார், சிற்பி எழில் அண்ணன் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களான வேல்முருகன் மற்றும் ஆனந்த் ஆகியோர் ஒரு குழுவில் இருந்த காலங்களும் இருந்தன. “வாழ்க்கைகளை புகைப்படங்களில் ஆவணப்படுத்தக் கற்றுக் கொடுக்கவென எங்களின் குழுவில் புகைப்படக் கலைஞர்களும் கூட இருக்கின்றனர்,” என்கிறார் அண்ணா சூசகமாக என் பணிகளைக் குறிப்பிட்டு.
அற்புதமான தருணங்களை உருவாக்குவது எப்படியென அவருக்குத் தெரியும். குழந்தைகளும் வளர்ந்தோரும் புன்னகைக்கும் தருணங்கள் அவை. அத்தகைய தருணங்களை என் பெற்றோருடன் நான் திரும்ப உருவாக்க அவர் உதவியிருக்கிறார். பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இலக்கின்றி நான் சுற்றிக் கொண்டிருந்தபோது, புகைப்படக் கலை மீதான ஆர்வத்தை நான் வளர்த்துக் கொண்ட போதுதான் பெற்றொருடனும் இருக்கச் சொல்லி எழில் அண்ணா என்னிடம் கூறினார். அவருடைய தாயுடன் அவர் கொண்டிருந்த உறவு பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். அவரது அப்பா மரணமடைந்த பிறகு தன்னந்தனியாக அவரது தாய் எப்படி அவரையும் அவரது நான்கு சகோதரிகளையும் வளர்த்தார் எனவும் சொல்லியிருக்கிறார். அவரை வளர்க்க அவரது தாய் பட்ட பாடுகளை சொல்வதன் வழியாகத்தான் என் பெற்றோர் என்னை வளர்க்க எடுத்த முயற்சிகளைப் பற்றி என்னை யோசிக்க வைத்தார் எழில் அண்ணன். அப்படித்தான் நான் என் தாய்ஹின் அருமையை புரிந்து கொண்டு அவரை புகைப்படம் எடுத்து அவரைப் பற்றிக் கட்டுரையும் எழுதினேன்.
எழில் அண்ணனுடன் நான் பயணிக்கத் தொடங்கிய பிறகு, நாடகங்களை ஒருங்கிணைக்கவும் வரையவும் நிறங்களை உருவாக்கவும் நான் கற்றுக் கொண்டேன். குழந்தைகளுக்கு புகைப்படக் கலை கற்றுக் கொடுக்கவும் தொடங்கினேன். குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே ஓர் உரையாடல் உலகை அது திறந்து விட்டது. அவர்களின் கதைகளை நான் கேட்டேன். அவர்களின் வாழ்க்கைகளை புகைப்படங்களில் ஆவணப்படுத்தினேன். அவர்களிடம் பேசி, விளையாடி, ஆடிப் பாடி பிறகு அவர்களை புகைப்படம் எடுக்கும்போது அதொரு கொண்டாட்டமாக மாறி விடுகிறது. அவர்களது வீட்டுக்கு சென்று, அவர்களோடு உண்டு, அவர்களின் பெற்றோருடன் பேசியிருக்கிறேன். அவர்களுடன் உரையாடி, வாழ்வையும் நேரத்தையும் பகிர்ந்த பின் நான் எடுக்கும் புகைப்படங்களில் அந்த மாயம் உருவாவதை உணர்ந்தேன்.
எழில் அண்ணன் களிமண் விரல்கள் தொடங்கிய பிறகான 22 வருடங்களில் அவர் தொட்ட ஒவ்வொரு வாழ்க்கையிலும் வெளிச்சத்தையும் மாயத்தையும் கொண்டு வந்திருக்கிறார். “கல்விக்கான வழிகாட்டலை நாங்கள் பழங்குடி குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு தற்காப்பும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். தற்காப்பு பயிற்சி பெற்ற பிறகு குழந்தைகள் தன்னம்பிக்கை பெறுவதை நாங்கள் பார்க்க முடிகிறது,” என்கிறார் அவர். குழந்தைகளில் நம் நம்பிக்கையை விதைத்து பகுத்தறிவை ஊட்டுவதும் சுதந்திரச் சிந்தனை மற்றும் வெளிப்பாட்டை உருவாக்குவதும்தான் அவரது கருத்து.
“எல்லாரும் சமம் என நாம் நம்புகிறோம். அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்,” என்கிறார் அவர். “அவர்களின் சந்தோஷத்திலிருந்து நான் சந்தோஷமடைகிறேன்.”
இக்கட்டுரையின் மொழிபெயர்ப்பில் கவிதா முரளிதரன் செய்த அனைத்துப் பணிகளுக்காகவும் அபர்ணா கார்த்திகேயன் அளித்த முக்கிய பங்களிப்புகளுக்காகவும் இக்கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
பின்குறிப்பு: இக்கட்டுரை பிரசுரத்துக்காக தயாரிக்கப்படும் 2022, ஜூலை 23 அன்று ஆர்.எழிலரசனுக்கு கில்லென் பார் (Guillain-Barré)நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உடலின் எதிர்ப்பு சக்தி நரம்புகளைத் தாக்கும் தீவிர நரம்பு நோய் ஆகும். இந்த நோய் நரம்பு மண்டலத்தைப் பாதித்து தசை பலவீனத்துக்கும் பக்கவாதத்துக்கும் வழிவகுக்கும்
தமிழில் : ராஜசங்கீதன்