இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இரவு 10:30 மணிக்கு ஹையுல் ரகுமான் அன்சாரி மும்பையில் உள்ள லோக்மானியா திலக் டெர்மினஸில் இருந்தார். ஜார்கண்டின் ராஞ்சி மாவட்டத்திலுள்ள ஹதியா ரயில் நிலையத்திற்குச் செல்ல நள்ளிரவு 12:30 மணிக்கு வர வேண்டிய ஹதியா எக்ஸ்பிரஸுக்காக காத்திருந்தார். அங்கிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு ரகுமான் ஆட்டோவில் செல்வார், அங்கிருந்து சத்ரா மாவட்டத்தில் இருக்கும் தனது கிராமத்திற்கு அண்டை கிரமமான அசர்ஹியாவிற்கு பேருந்தில் செல்வார்.
இந்த மொத்த பயணத்திற்கும் அவருக்கு ஒன்றரை நாள் தேவைப்படும்.
ஆனால் ரயில் ஏறுவதற்கு முன்பு ரயில் நிலையத்தில் அமைதியாக ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த 33 வயதாகும் ரகுமான் ஒரு வருட காலத்திற்குள் இரண்டாவது முறையாக தான் ஏன் மும்பையை விட்டு வெளியேறுகிறார் என்பதை எங்களிடம் கூறினார்.
அவர் தனது வீட்டிற்கு திரும்புவதற்கு ரயில் ஏறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது புதிய முதலாளி அவரிடம் வேலை குறைந்து வருவதாக கூறினார். "ரகுமான் மன்னிக்கவும், இப்போது உன்னை பணியில் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை, நீ பின்னர் மீண்டும் முயற்சி செய்", என்று அவர் கூறினார். அப்படித்தான் அவர் இன்னும் தொடங்கவேபடாத அவரது சமீபத்திய வேலையை இழந்தார்.
ஜாம்ஷெட்பூரின் கரீம் நகர் கல்லூரியில் மக்கள் தொடர்பு பிரிவில் பட்டம் பெற்ற பின்னர் ரகுமான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தார். அவர் காணொலி எடிட்டராக திட்ட அடிப்படையிலான பணிகளை மேற்கொண்டார், அதன் வருமானம் அவருக்கு நகரில் தங்கவும் , வீட்டிற்கு கொஞ்சம் பணம் அனுப்பவும் போதுமானதாக இருந்தது.




