"எங்கிருந்தும் ஒரு ரூபாய் கூட வரவில்லை. நாங்கள் எதை சாப்பிடுவது? எப்படி வாழ்வது?", என்று மும்பையில் சிக்கிக்கொண்ட பீகாரைச் சேர்ந்த 27 வயதான புலம்பெயர் தொழிலாளி கடந்த ஏப்ரல் மாதம் என்னிடம் கேட்டார். மார்ச் 24 2020 அன்று திடீரென்று அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது இது நிகழ்ந்தது. இது இவரைப் போன்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் தவிக்க விட்டுவிட்டது மேலும் பலர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நான் தன்னார்வலராக பணிபுரியும் ஹெல்ப்லைனை அவர் அழைத்த போது நான் முதலில் அவருடன் பேசினேன். அவர் தனது சிரமங்களைப் பற்றி என்னிடம் கூறினார் பின்னர் இந்த படத்திற்காக நேர்காணல் செய்ய அவர் ஒப்புக் கொண்டார் ஆனால் அவரது பெயர் மற்றும் பிற விவரங்கள் தெரியப்படுத்தப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்.
நாங்கள் மே மாதத்தில் படப்பிடிப்பை துவங்கியபோது அவர் தன்னால் இயன்ற வழியில் ஊருக்குத் திரும்ப முயன்றார். புலம்பெயர் தொழிலாளர்களை ஆதரிக்க மத்திய மாநில அரசுகள் அதிகம் செய்யவில்லை என்று அவர் கோபமாக இருந்தார். நாங்கள் ரயிலுக்கான படிவங்களை நிரப்புகிறோம் எங்களிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகிவிட்டது என்று அவர் கூறினார். வீட்டிற்கு செல்ல பயணச்சீட்டு பெறுவது என்பது குழப்பமான மற்றும் நிச்சயமற்ற படிவ செயல் முறையைக் கையாள்வது என்பது அவர்கள் கையிலிருந்த மீதி நிதியையும் தீர்த்துவிட்டது.


