உஷா தேவி, இறுதியாக தர்மேந்திர ராம்மைப் பார்த்த போது, இயல்பாகவே ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட அவரது உடலின் இன்னும் சுருங்கிய வடிவமாக அவர் இருந்துள்ளார். இதுகுறித்து கூறிய உமா, “அவர் துடித்தார், அழுகையை உதிர்த்தார். பின்னர் அமைதியாக அவரது உயிர் பிரிந்தது. கடைசியாக ஒரு கோப்பைத் தேநீர் கூட என்னால் அவருக்கு கொடுக்க முடியவில்லை” என்றார்.
இவ்வாறாக 28 வயதுடைய உஷாவின் கணவரது வாழ்வு முடிந்தது. ரேஷன் அட்டை இல்லாது , பசியாலும் நோயாலும் அவர் இறந்துள்ளார். நியாயவிலைக் (ரேஷன்) கடையில் அவரது அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு போதுமான ஆதார் அட்டை தர்மேந்திர ராமிடம் இருந்துள்ளது. எனினும், ரேஷன் கடைகளில் காண்பிக்கும் உண்மையான ரேஷன் அட்டை இல்லாததால் அது பயனற்றதாகவே இருந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த தர்மேந்திராவின் மரணத்தை தொடர்ந்து, அலகாபாத்தின் மௌய்மா பகுதியில் உள்ள அவரது கிராமமான தாரயுதா பலரது கவனத்தைத் ஈர்த்துள்ளது. பலர் வருகை புரிந்தனர். மேலும், இந்தப் பகுதியைச் சார்ந்த ஊடகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் வருகையையும் கோரியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கிராம மேம்பாட்டு அதிகாரியும், அந்த கிராமத்தின் லேக்பாலும் (கிராம கணக்கர்) பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டன. அவற்றில், தேசிய குடும்ப நலத் திட்டத்தின் கீழ் ரூ. 30,000 மற்றும் ஐந்து பிஸ்வா அல்லது 570 சதுர மீட்டர் விவசாய நிலம் ஆகியவையும் அடங்கும். மேலும், 500க்கும் குறைவாக குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்திற்கு, இப்பகுதியைச் சார்ந்த அரசியல்வாதிகள் விரைந்தனர். அதுமட்டுமின்றி, தர்மேந்திராவின் மனைவி மாநில அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூபாய்.500 பெற தகுதியுடையவராகவும் அறிவிக்கப்பட்டார்.
உஷா, செவித்திறன் குறைபாடுடையவர் மற்றும் போதிய விழித்திறன் அற்றவர். மேலும், அவரது இடது கை, வலது கையை விட குறிப்பிடத்தகுந்த அளவு சிறியது. இந்நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்தான மெல்லிய நினைவுகள் அவரிடம் இருந்தன. ஒரு அலுவலரின் (‘படா சாஹேப்”) காலில் அவர் விழுந்ததாகவும், “குச் தோ மடத் கரோ[குறைந்தபட்சம் ஏதாவது உதவி செய்யுங்கள்],” என்று அவரிடம் கூறியதாக நினைவுகூர்ந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த கிராமத்தில் இருந்த ஒன்றிரண்டு வீடுகளைப் பார்வையிட்ட அந்த அதிகாரி, தாசில்தார் ராம்குமார் வெர்மா ஆவார். அவர் அந்த வீட்டில் உணவிற்கான ஒரு தானியத்தையும் பார்க்கவில்லை என்று கூறியதாக பின்னர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில், உஷா உதவி கேட்ட போது, அவர் அவரது சட்டைப்பையில் இருந்து தேடி 1,000 ரூபாயை பசி மற்றும் களைப்பினால் அவர் மயக்கமடைவதற்கு முன்னதாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தாசில்தாரின் இந்த செய்கைக் குறித்து கூறிய, சோரன் தாலுக்காவின்(தாருதா கிராமம் இந்த தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் தான் அமைந்துள்ளது) தற்போதையை லேக்பால் பஞ்சம் லால், இது அரசு நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி என்று விளக்கம் அளித்தார். மேலும், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று கூறிய அவர், ரேஷன் அட்டை பெறுவதும், அதனை ஆதார் அட்டையோடு இணைப்பதும் சிரமம் இல்லாத நடவடிக்கை என்றே கருதுகிறார். “மக்கள் இதை இணையவழிலேயே செய்துவிட முடியும். இந்த கிராமத்தில் உள்ள தனியார் கடையொன்றில் இதை 50 ரூபாய்க்கு செய்து தருகிறார்கள். ஆனால் அப்படிச் செய்வதற்கான விருப்பம் இருக்க வேண்டும். வெறும் 15 நாட்களில் அவருடைய மனைவிக்கு நாங்கள் அந்த்யோதயா அட்டை வழங்கவில்லையா?” என்று அவர் கேட்டார்.
ஆதார் அட்டையின் வழியாக ரேஷன் அட்டையை சரிபார்ப்பது அடையாளத்தை உறுதிப்படுத்தும் மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளில் ஒவ்வொரு ஐந்து ரேஷன் அட்டைகளிலும் நான்கிற்கு மேல் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தர்மேந்திராவிடம் இருந்த ஆதார் அட்டை அவர் ரேஷன் அட்டை பெறுவதை எளிமையாக்கி இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில், இதுபோன்ற ஆவணங்களைப் பெறுவது, குறிப்பாக இணையவழிப் படிவங்களை நிரப்புவது என்பது இந்த உலகில் உள்ள தர்மேந்திர ராம் போன்றவர்களுக்கு மிகவும் சிக்கலான ஒன்று. பிறரிடம் உதவி பெறுவதும் எளிமையானதாக இல்லை. அதற்கு மாற்றாக, ”இது என்னுடைய துறை இல்லை” என்ற அரசு அதிகாரிகளின் நிலையான பதில்களையே அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
தாருதா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் தீஜா தேவி, “எனது கணவர் அவரது ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றார். ரேஷன் அட்டைக்கு பஞ்சாயத்து செயலாளர்தான் பொறுப்பே அன்றி, பஞ்சாயத்துத் தலைவர் அல்ல.” என்று குறிப்பிட்டார்.
பொறுப்பற்ற, சோம்பேறியாக அண்டைவீட்டாரால் குறிப்பிடப்படும் கல்வியறிவற்ற தர்மேந்திராவுக்கு, இந்தப் பிரச்னையில் உள்ள சிக்கல்களை புரிந்துகொள்ளும் வாய்ப்பே இல்லை. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கூட புரிந்து கொள்வதற்கு கடினமான விவரங்களை உள்ளடக்கியவை அவை. கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அரசின் ஏராளமான நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது கட்டாயமானது.
தர்மேந்திராவின் அண்ணனின் மனைவி பூதானி (அவரது மூத்த சகோதரர் நன்ஹியின் மனைவி) கூறுகையில், “அரசின் அட்டை என்பது நல்ல விஷயம் தான். நானும் வைத்திருக்கிறேன். ஆனால் அதை பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. அதற்கு, நிறைய ஆவணங்களும் தேவைப்படுகிறது. எங்களால் முடிந்தவரை தர்மேந்திராவுக்கு உதவினோம். எனினும், குறிப்பிட்ட அளவுக்கு தான் எங்களாலும் அவருக்கு உதவ முடிந்தது,” என்றார்.
தர்மேந்திராவின் ஒரே வருமானம் திருமணங்களில் நடனம் புரிவதன் வழியாக மட்டுமே கிடைத்துள்ளது .இந்த வேலையும் அவ்வப்போது மட்டுமே கிடைத்துள்ளது. ஒரு இரவு நடனம் ஆடினால் அதிகபட்சமாக 500 ரூபாயை தாண்டி அவர் சம்பாதித்ததில்லை. அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சிறிய நிலத்தை அவருக்கும், அவரது சகோதரர் நன்ஹிவுக்கும் அவரது தந்தை பிரித்து வழங்கியுள்ளார். எனினும், தர்மேந்திராவுக்கு பிரித்து வழங்கப்பட்ட பகுதி பாறை என்பதால் குறைந்தளவே விளைந்துள்ளது. இதன் காரணமாக, தர்மேந்திரா சாலையில் செல்லும் வழிப்போக்கர்களிடம் அடிக்கடி உதவி கேட்கத் தொடங்கியுள்ளார். உஷாவும் உணவுக்காக கெஞ்சியுள்ளார். சில சமயம் உணவு மிச்சம் இருக்கும் போது மக்கள் உஷாவை அழைத்து வழங்கியுள்ளார்கள். "நான் எந்த அவமானத்தையும் உணரவில்லை," என்று கூறிய அவர், தனது 12 வருட திருமண வாழ்வில் உணவு ஏராளமாக இருந்த எந்த நேரமும் நினைவுக்கு வரவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், "சில சமயங்களில் அவரிடம் பணம் இருக்கும் போது, நாங்கள் தக்காளி மற்றும் பருப்பினை வாங்குவோம்," என்றும் தெரிவித்தார்.
தாருதாவில் உள்ள மக்கள் மத்தியில் அவர்களுடன் வாழ்ந்த ஒரு மனிதன் பட்டினியால் இறந்தது, தற்போதும் பலதரபட்ட உணர்வுகளை எழச்செய்துள்ளது. உஷாவிற்கு அவ்வப்போது உணவு வழங்கியவர்களில் ஒருவரான 50 வயதுடைய சுனிதா ராஜ், உஷாவிற்கு முழுமையாக உதவுவது இயலாதது என குறிப்பிட்டார். அவரது வீடு தர்மேந்திராவின் வீட்டிற்கு எதிரே உள்ள சாலையை அடுத்து உள்ள பொலிவான தோற்றமுடைய இளஞ்சிவப்பு நிற வீடாகும். அவர் கூறுகையில், “எங்கள் வீட்டை நீங்கள் பார்வையிட்ட போது, அங்கு ஒன்றுமே இல்லை. வெறும் சுவர்கள் மட்டும் தான் இருக்கின்றன. எனது கணவரின்(அமரர்) உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஐந்து வருடத்தில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். உங்களுக்கே எல்லாம் தெரியும். ஏன்… நான் கூட பட்டினியால் இறக்கக் கூடும்,” என்று குறிப்பிட்டார். சொந்த ஊரில் (முகவரியில்) சுனிதாவுக்கு ஆதார் அட்டை இல்லை. இதனால் ரேஷன் அட்டையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு இந்த பயம் எழுந்துள்ளது. “எனது கணவர் தொழிலாளராக பணிபுரிந்த புனே முகவரியில் எனக்கு ஆதார் அட்டை உள்ளது. மருந்துகளை பெற இது உதவும் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை” என்று தோள்களைக் குலுக்கியவாறு தெரிவித்தார்.
தர்மேந்திராவின் மற்றொரு அண்டைவீட்டாரான ராம் ஆஸ்ரே கவுதம் 66 வயதானவர். தர்மேந்திராவின் மரணம் நடக்காத ஒன்றை நடத்திக் காட்டியதாக கூறினார். “எந்த அதிகாரியும் எங்கள் கிராமத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு துணை நீதிபதி, வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் என எல்லாரும் திடீரென எங்கள் கிராமத்திற்கு வருகை தந்தனர். அதன் வழியாக எங்கள் கிராமம் ஆசிர்வதிக்கப்பட்டது,” என்றார்.
தர்மேந்திராவின் இறப்புக்குப் பின்னர், உஷா தனது பெரும்பான்மையான நேரத்தை தாந்தோபூர்(தாருதாவில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) கிராமத்தில் உள்ள அவரது சகோதரர் லால்ஜி ராமின் வீட்டிலயே கழித்துள்ளார். “தர்மேந்திரா உயிரோடு இருந்த வரை கிராமத்தார்கள் யாரும் அவர்களுக்கு உதவவில்லை. தற்போது அவளிடம்(570 சதுர மீட்டர்) செழிப்பான நிலம் உள்ளது என்று பொறாமை ஏற்பட்டுள்ளது. அவள் மனநிலை சரியில்லாததால் நானே அவளை கவனித்துக்கொள்கிறேன்,” என நான்கு பிள்ளைகளின் தந்தையான உஷாவின் தந்தை கூறினார்.
உஷாவைப் பொறுத்த வரை, நிலம், நிதியுதவி எல்லாம் வெறும் தகவல்கள் மட்டுமே. “எனது கணவர் ஒரு சிறிய அட்டைக்காக இறந்தார். அது அந்த அளவுக்கு மதிப்புமிக்கதல்ல,” என்றார் அவர்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்