“நட்சத்திரங்களுக்கு ரபாரிகளான நாங்கள் வைத்திருக்கும் பெயர்கள் நீங்கள் வைத்திருக்கும் பெயர்களிலிருந்து வேறுபட்டவை,” என்று மஷ்ருபாய் சொல்கிறார். "தும்ஹாரா துருவ் தாரா, ஹமாரா பரோடியா [உங்கள் துருவ நட்சத்திரம் தான் எங்கள் பரோடியா]."
வர்தா மாவட்டம் தேனோடா கிராமத்தில் தற்காலிக குடியிருப்பான டேராவில் அவரை நாங்கள் சந்தித்தோம். அவர் தனது சொந்த நிலம் என்று கூறும் கச்ச்சிலிருந்து 1,300 கிலோமீட்டர் தொலைவில், நாக்பூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
ரபாரிகளின் குடியிருப்பில் மாலை வெயில் மங்கத் தொடங்கியது. குளிர் காலம் விடைபெற்று கோடை காலம் தொடங்கும் மார்ச் மாத காலத்தில் மாலை நேர வானில் ஆரஞ்சு நிற மேகங்கள் அதிக நேரம் காணப்படுகின்றன. காட்டுத் தீயில் உமிழும் நெருப்பைப் போல பலாசு பூக்கள் குங்குமப்பூவின் நிழலில் பூமியை அலங்கரிக்கின்றன. அச்சமயத்தில் தான் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாடப்படுகிறது.
மக்களால் அன்போடு அழைக்கப்படும் மஷ்ரு மாமாவும், நானும் சேர்ந்து விதர்பா பகுதியின் மாலை நேர தெளிந்த வானை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பருத்தி வயலுக்கு நடுவே போடப்பட்ட அவரது கட்டிலில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். சூரியன், நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டம், மாறும் பருவநிலை, சூழலியல், தனது கால்நடைகள் மற்றும் மக்களின் மனநிலைகள், எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிகளின் கடினமான வாழ்க்கை குறித்த நாட்டுப்புற கதைகள் என இன்னும் பலவற்றை நாங்கள் பேசினோம்.
இரவு நேரங்களில் வழிகாட்டுவதற்கு நட்சத்திரங்களை ரபாரிகள் அதிகம் சார்ந்துள்ளதால் அதற்கு முக்கிய இடமுண்டு. “ ஏழு நட்சத்திரங்களின் தொகுப்பான சப்தரிஷி மண்டலத்தை நாங்கள் ஹரன் [மான்] என்போம்,” என்று அவர் விளக்குகிறார். “பகல் பொழுதில் ஏழு நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன. இரவில் அவை புதிய உதயத்தை, சவால்களை, பற்பல சாத்தியங்களின் வருகையை அறிவிக்கிறது,” என்கிறார் அவர் தத்துவார்த்தமாக.











