அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வியாழக்கிழமை காலை 10 மணி இருக்கும். உத்திரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே லல்தி தேவி பஸ்வான் மற்றும் ஷோபா பாரதி ஆகியோர் பிளாஸ்டிக் பெஞ்சில் அமர்ந்தபடி காத்திருந்தனர். அந்த பெண்கள் அமைதியாக இருந்தனர். இதை அவர்கள் பலமுறை செய்திருக்கின்றனர்.
லல்தி தேவி மற்றும் அவரது கணவர் ஷியாம்லால் ஆகியோர் மீது 20 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமத்தில் சிலர் தன்னை பற்றி வதந்திகளை பரப்புகின்றனர் - அவரது நம்பகத் தன்மையையும் அவரது தொழிற்சங்கத்தின் பணியையும் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் - அவரை ஒரு தயான், சூனியக்காரி என்றும் அழைக்கிறார்கள். இவையெல்லாம் அவரது வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறது என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதற்காக வந்துள்ளார். "மாவட்ட ஆட்சியரை சந்திப்பது மிகவும் முக்கியம். அவர் எங்களது குரல்களைக் கேட்க வேண்டும் மற்றும் எங்களை பார்க்க வேண்டும், அப்போது தான் சில விஷயங்களை மாற்றுவதற்கு நாங்கள் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்", என்று தனது 60 களில் இருக்கும் லல்தி கூறுகிறார்.
"நான் நீதிக்காக காத்திருக்கிறேன்", என்று தனது 50 களில் இருக்கும் ஷோபா கூறுகிறார். "இழப்பீடு கோரி எனது விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வந்திருக்கிறேன். (பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு) உள்ளூர் அரசாங்கம் இந்த ஆதரவை வழங்க வேண்டும், ஆனால் மாவட்ட ஆட்சியர் எனது கோப்புகளை முன்னோக்கி நகரத்தாமல் வைத்திருக்கிறார்". ஷோபா மற்றும் அவரது கணவர் ஆகியோர் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதாக வனத் துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர் மற்றும் அவர்களின் பெயர்கள் பிற குழு நிகழ்வுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் செய்யாத குற்றத்திற்காகவே சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவ்விரு பெண்களும் மாவட்ட ஆட்சியர் பிரமோத் உபாத்யாயின் அலுவலகத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் காத்திருக்கின்றனர். அவர்களுடன் அகில இந்திய வன தொழிலாளர்கள் சங்கத்தின் (AIUFWP) பொதுச் செயலாளர் ரோமா மாலிக் மற்றும் ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். மாலிக் அவர்கள் சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். போலீஸ்காரர்களின் கொடுமைகளைப் பற்றிய பல வழக்குகளை நாங்கள் நிர்வாகத்தினருடன் விவாதிக்க விரும்புகிறோம்", என்று அவர் கூறுகிறார்.








