"நீங்கள் அந்த பண்டிகையை நிச்சயம் கொண்டாடி இருப்பீர்கள். எங்களுக்கு என்ன? எந்த வேலையும் இல்லை பணம் எங்கிருந்து வரும்?", என்று தனது வீட்டின் வாசல் படியில் அமர்ந்தபடி 60 வயதாகும் சோனி வாக், தீர்க்கமாக என்னைப் பார்த்து, வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். சுற்றி இருந்த மக்கள் அவரை அமைதியாக இருக்கும் படி சமிக்ஞைகள் செய்ய முயன்றனர். ஆனால் சோனியின் வார்த்தை அவருக்கானது மட்டுமல்ல - அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவரது குக்கிராமத்தில் இருக்கும் அனைவரின் யதார்த்த வாழ்வையும் படம் பிடித்து காட்டியது. அதை யாராலும் மறைக்க முடியாது. அது ஒரு நவம்பர் மாத துவக்க காலம், தீபாவளி அப்போது தான் முடிந்திருந்தது. ஆனால் இந்தப் பதாவில் இருந்த எந்த வீட்டிலும் விளக்குகளே இல்லை. எந்த அலங்கார விளக்குகளும் இல்லை. போடியாச்சி வாடியில் இருக்கும் ஒரு வீட்டில் கூட தீபாவளியின் போது, சில நகர வீடுகளில் பூக்களால் அலங்கரிக்கப்படுவதை போன்ற அலங்காரம் செய்யப்படவில்லை.
வாடியே அமைதியாக இருந்தது. திண்ணை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களது கால்கள் புழுதி படிந்து இருந்தன. அவர்களது துணிகள் கந்தலாகவோ அல்லது கிழிந்தோ இருந்தது. உடைந்த பொத்தான்களைக் கொண்ட ஆடைகள் அவர்களில் சிலரை கொஞ்சமாகத் தான் மூடியிருந்தது. திண்ணை முற்றத்தில் ஒரு மூலையில் 8 முதல் 9 வயது வரை இருக்கும் 5 அல்லது 6 பெண் குழந்தைகள் 'வீடு கட்டி' விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் முன் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈயம் மற்றும் ஸ்டீல் சமையலறை பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான்கு குச்சிகளில் கட்டப்பட்டிருந்த கிழிந்த துணி ஒரு குழந்தைக்கு தொட்டிலாகி இருந்தது.
அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் குழந்தை, பிறந்து ஒரு சில மாதங்களே ஆன குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். நான் அவர்களை அணுகிய போது, அவர்கள் வெளியேறுவதற்காக எழுந்து விட்டனர். நான் அவளிடம் ஏதோ ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் என்பதை உணர்ந்த போது அந்தப் பெண் குழந்தை நின்றுவிட்டாள். "நீ பள்ளிக்குச் செல்கிறாயா?" இல்லை என்பதே பதிலாக இருந்தது. ஒன்பது வயதாகும் அனிதா திவே ஒன்றாம் வகுப்புக்கு பிறகு பள்ளியிலிருந்து நின்றுவிட்டாள். ஏன் செல்லவில்லை? "நான் தான் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும். நான் எப்படி பள்ளிக்குச் செல்ல முடியும்? எனது குடும்பத்தினர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு சென்றுவிட்டனர்", என்று கூறினாள்.






