பெரிய மரங்கள் உடைந்து கீழே விழுவதை பார்த்த எனக்கு, என் குழந்தையை இழந்த உணர்வு ஏற்பட்டது என கூறும் தோட்டக்காரரான மதன் பைதியாவிற்கு 40 வயதாகிறது. தன்னைச் சுற்றி ஏற்பட்டுள்ள பேரழிவைப் பார்த்து அவர் பதற்றமடைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. “என் வாழ்நாள் முழுதும் இந்த மரங்களோடும் செடிகளோடும்தான் வாழ்ந்து வருகிறேன். இவை வெறும் மரங்கள் மட்டுமல்ல, பல பறவைகளுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வீடாக இருந்தது. வெயில்காலத்தில் நமக்கு நிழலாகவும் மழைகாலத்தில் குடையாகவும் இருக்கிறது” என விளக்கம் தருகிறார். கொல்கத்தாவின் கிழக்கு பைபாஸ் அருகிலுள்ள ஷாகித் ஸ்மிருதி காலனியில் – இங்குதான் அவர் வசிக்கிறார் - இருக்கும் பைதியாவிற்குச் சொந்தமான நர்சரி கடுமையாக சேதமடைந்துள்ளது.
மே 20 அன்று அம்பல் புயல் காரணமாக நகரில் 5000 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது கொல்கத்தா மாநகராட்சி. மிக தீவிர சூறாவளிப் புயல் என வகைப்படுத்தப்பட்ட அம்பன், 140-150கிமீ வேக காற்றுடன் மேற்கு வங்காள கடற்கரைப் பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலால் 24 மணி நேரத்தில் 236மிமீ மழை பெய்துள்ளதாக அலிபோரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிராமப்புறங்களில் அம்பன் ஏற்படுத்திய சேதாரம், குறிப்பாக சுந்தரவனப் பகுதிகளில் கணக்கிட முடியாத அளவிற்கு உள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு மற்றும் தெற்கு 24 பராக்னாஸ் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள்ன. கொல்கத்தாவில் 19 பேர் உள்பட மாநிலம் முழுவ்டஹும் இதுவரை 80 பேர் வரை இறந்துள்ளனர்.
பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன, கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகளோடு சேர்ந்து போக்குவரத்து வசதிகளும் சாலை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளுக்குச் செல்வது முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கினால் ஏற்படும் சிக்கல்கள் அதைவிட அதிகமாக உள்ளது. வழக்கமாக இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தங்கள் கிராமங்களுக்கு சென்றுவிட்டதால், மீட்பு நடவடிக்கைகள் கடினமாக மாறியுள்ளது.













