குலாம் மொஹி-உத்-தின் மிர்ரின் 13 ஏக்கர் ஆப்பிள் தோட்டத்தில் 300 முதல் 400 ஆப்பிள் மரங்கள் உள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் 3,600 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டியிலும் 20 கிலோ ஆப்பிள்கள் வழக்கமான உற்பத்தியாக இருக்கும். “ஒரு பெட்டியை 1000 ரூபாய் விற்பனை செய்வோம். இப்போது ஒரு பெட்டிக்கு 500 முதல் 700 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது” என்று கூறுகிறார்.
பட்காம் மாவட்டத்தின் க்ரெம்ஷோரா கிராமத்தின் 65 வயது மிர்ரைப்போலவே, காஷ்மீரின் பல ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் கடுமையான வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். ஆப்பிள் வணிகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்ட பிறகு, மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியபிறகு இந்த நிலைதான் நிலவுகிறது.
காஷ்மீர் பொருளாதாரத்தில் இத்தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் 164,742 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. 2018 – 2019 ஆண்டில், 1.8 மில்லியன் (18,82,319) மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டது (காஷ்மீர், தோட்டவளத்துறை இயக்குநரகத்தின் தரவு ) ஜம்மு காஷ்மீர் அரசின் தோட்டவளத்துறை, தோட்டத்துறையில் 3.3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. 8000 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இத்தொழிலின் மதிப்பு இருப்பதாக தோட்டவளத்துறை இயக்குநர் அய்ஜாஸ் அஹ்மத் தெரிவிக்கிறார்.
கூடுதலாக, காஷ்மீர் முழுவதும் தோட்டவேலைக்காக பல பணியாளர்கள் இதை நம்பி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இங்கிருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக அவர்களும் சென்றுவிட்டார்கள். அக்டோபர் மாதத்தில், உள்ளூர் அல்லாத 11 பேர், பணியாளர்களாகவும், ட்ரக் ஓட்டுநர்களாகவும் இருந்தவர்கள், போராளிகள் என்று நம்பப்படுபவர்களால் கொல்லப்பட்டார்கள். நாட்டுக்குள் காஷ்மீரி ஆப்பிள்களின் போக்குவரத்தை இது மேலும் கடினமாக்கியது.
காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதை போக்குவரத்துக்கு உட்படுத்துவது அனைவருக்கும் கடினமானது. பொதுப் போக்குவரத்து, பேருந்துகள் மற்றும் பங்கு டாக்சிகள் எல்லாம் இன்னும் இயங்கவில்லை.
ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களிடம் நேரடி வணிகம் செய்யும் வணிகர்கள், ஒரு பெட்டிக்கு 1,400 முதல் 1,500 ரூபாய் விலை வைத்து டெல்லிக்கு அனுப்புகிறார்கள். அரசின் மூலமாக மண்டி மூலமாக வாங்கும் பிற வணிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், சிலர் அரசுக்கு ஆப்பிள்களை விற்பனை செய்யக்கூட்டது என்னும் போஸ்டர் ஒட்டப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். (இதைச் செய்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை)
தமிழில்: குணவதி