“கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்கு பதில் மொத்தமாக கடவுள் எங்களை கொன்றுவிடலாம்,” என்கிறார் அசார் கான். விவசாயியான அவரின் நிலத்தை, சுந்தர்பனில் இருக்கும் மவுசினி தீவை மே 26ம் தேதி விழுங்கிய கடலலைகளுக்கு இழந்திருந்தார்.
வங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த புயலால் முரிகங்கா ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக 1-2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. கரையை உடைத்து ஓடிய நீர், தீவின் தாழ்வுப்பகுதியில் வெள்ளச்சேதத்தை உருவாக்கியது. வீடுகளும் நிலங்களும் சேதமாயின.
யாஸ் புயலின் விளைவு மே 26ம் தேதி மதியத்துக்கும் சற்று முன்பு நேர்ந்தது. தென்மேற்கு மவுசுனியிலிருந்து 65 நாடிகல் மைல் தொலைவிலிருந்த ஒடிசாவின் பலாசோரில் கனமழை பெய்தது. அதிதீவிர புயலாக அது மாறியதும், காற்று 130-140 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.
“புயல் வருவதை நாங்கள் பார்த்தோம். எங்களின் உடைமைகளை எடுப்பதற்கு நேரமிருப்பதாக நினைத்தோம். ஆனால் வெள்ளம் எங்களின் கிராமத்துக்குள் புகுந்து விட்டது,” என்கிறார் பக்தங்கா கிராமத்தை சேர்ந்த மஜுரா பீவி. மவுசினியின் மேற்கிலுள்ள முரிகங்காவின் கரையில் அவர் வசிக்கிறார். “உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். உடைமைகளை காக்க முடியவில்லை. பலர் மரங்களில் ஏறி தங்களை காத்துக் கொண்டனர்.”
தீவின் நான்கு கிராமங்களான பக்தங்கா, பலியாரா, கசும்தலா மற்றும் மவுசுனி ஆகிய இடங்களுக்கு செல்லும் நீர்வழிப் போக்குவரத்து ஓயாத மழையால் மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. மே 29ம் தேதி நான் மவுசுனியை அடைந்தபோது பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன.
“என் நிலம் உப்புநீருக்கு அடியில் இருக்கிறது,” என்கிறார் பக்தங்கா முகாமில் நான் சந்தித்த அபிலாஷ் சர்தார். “விவசாயிகளான எங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம்,” என்கிறார் அவர். “அடுத்த மூன்று வருடங்களுக்கு என் நிலத்தில் விவசாயம் பார்க்க முடியாது. மீண்டும் மண் வளம் பெற ஏழு வருடங்கள் ஆகலாம்.”
மேற்கு வங்கத்தின் நம்கானா ஒன்றியத்தில் ஆறுகளாலும் கடலாலும் சூழப்பட்ட மவுசுனி சந்தித்த பல பேரிடர்களின் வரிசையில் தற்போது யாஸ் புயலும் இடம்பெற்றுவிட்டது.
ஒரு வருடத்துக்கு முன் - மே 20 2020-ல் - அம்பான் புயல் சுந்தர்பனில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. அதற்கும் முன் புல்புல் (2019) மற்றும் அய்லா (2009) ஆகிய புயல்கள் தீவுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. அய்லா, மவுசுனி நிலத்தின் 30-35 சதவிகித நிலத்தை நாசமாக்கியது. தெற்கு கடற்கரை மொத்தமும் உப்புத்தன்மை நிறைந்து விவசாயத்துக்கு லாயக்கற்ற பகுதியாக மாறிவிட்டது.
கடல் மட்டத்தின் வெப்ப உயர்வு மட்டுமின்றி, கடலோர வெப்பத்தின் உயர்வும் சேர்ந்துதான் வங்காள விரிகுடா புயல்களை மிக தீவிரமான புயல்களாக மாற்றுகின்றன என்கின்றனர் ஆய்வு வல்லுனர்கள். புயல்கள் அதி தீவிரமாகும் நிலை மே, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் அதிகரித்திருப்பதாக இந்திய வானில மையம் 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது .
யாஸ் புயலுக்கு முன்னால், தீவின் 70 சதவிகித நிலமான 6000 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு உகந்த நிலமாக இருந்தது என்கிறார் பக்தங்காவில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சரல் தாஸ். “தற்போது வெறும் 70-80 ஏக்கர் நிலம் மட்டும்தான் காய்ந்திருக்கிறது.”
தீவில் வசிக்கும் 22,000 பேரில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) கிட்டத்தட்ட அனைவருமே புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லும் தாஸ் பக்தங்காவின் கூட்டுறவு பள்ளியில் பணிபுரிகிறார். “கிட்டத்தட்ட தீவிலுள்ள 400 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன. 2000 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.” பெரும்பாலான கால்நடைகள், மீன், கோழிகள் அழிந்துவிட்டன என்கிறார்.
குடிநீருக்கான பிரதான வழியான ஆழ்துளைக் கிணறுகள் புயலுக்கு பிறகு பயன்படுத்த முடியாத தன்மையை அடைந்திருந்தன. “பல ஆழ்துளைக் கிணறுகள் நீரில் மூழ்கிவிட்டன. அருகே இருக்கும் ஆழ்துளைக் கிணறை அடைய இடுப்பளவு சேற்றில் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு நாங்கள் நடக்க வேண்டும்,” என்கிறார் ஜெய்னல் சர்தார்.
மவுசுனியின் மக்கள் இத்தகைய பேரிடர்களுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் இயற்கை பாதுகாவலரான ஜோதிரிந்திரநாராயண் லகிரி. சுந்தர்பன் மக்களை பற்றி வெளியாகும் காலாண்டு இதழான சுது சுந்தர்பன் சார்ச்சாவுக்கு ஆசிரியராக இருக்கிறார். “அவர்கள் உயிர் வாழ்வதற்கான புதிய உத்திகளுக்கு தயாராக வேண்டும். வெள்ளத்தை தாங்கும் வீடுகளை கட்டுவது போன்ற முயற்சிகளுக்கு நகர வேண்டும்.”
பேரிடர் அதிகம் நேரும் மவுசுனி போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள், அரசு நிவாரணத்தை சார்ந்திருப்பதில்லை என்கிறார் லகிரி. “வருமுன் தயாரித்தலின் வழிதான் அவர்கள் உயிர் வாழ முடியும்.”
விளைச்சலுக்கு காத்திருந்த 96,650 ஹெக்டேர் (238,830 ஏக்கர்) அளவுக்கான நிலம் மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கிவிட்டதாக மேற்கு வங்க அரசு கணித்திருக்கிறது . மவுசுனியில் விவசாயம்தான் வாழ்வாதாரம் என்கிற நிலையில், அதன் வளம் நிறைந்த நிலத்தின் பெரும்பகுதி உப்புநீருக்குள் மூழ்கியிருப்பது நிலையை மோசமாக்கியிருக்கிறது.
யாஸ் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவையே தீவின் மக்கள் ஜீரணிக்க முடியாத நிலையில் ஜூன் 11ம் தேதி வடக்கு வங்காள விரிகுடாவில் மேலும் ஒரு புயல் உருவாகுமென இந்திய வானிலை மையம் கணித்திருக்கிறது .
எனினும் பக்தங்காவில் பிபிஜான் பீவிக்கு இன்னொரு முக்கியமான கவலை இருக்கிறது. “தண்ணீர் வடிந்தபிறகு நாகப்பாம்பு வீடுகளுக்கு நுழையத் தொடங்கும். எங்களுக்கு பயமாக இருக்கிறது.”
தமிழில் : ராஜசங்கீதன்