கடந்த 2017 ஆம் ஆண்டு, உத்தண்டராயுனிபாலம் கிராமத்தைச் சார்ந்த கிஞ்சுபள்ளி சங்கர ராவ், அமராவதி நகரில் அமையவிருக்கும் புதிய தலைநகரில் அவருக்கு ஒதுக்கபட்ட 1,000 சதூர அடி குடியிருப்பு நிலத்தை விஜயவாடாவைச் சார்ந்தவர்களுக்கு விற்றுள்ளார். இத வழியாக அவருக்கு 2 கோடி ருபாய் கிடைத்துள்ளது. இந்தத தொகையின் வழியாக 90 ஆண்டுகள் பழமையான தனது நிலத்தை 80 லட்ச ரூபாய் செலவு செய்து இரண்டு அடுக்கு மாடி வீடாக மாற்றியுள்ளார். “நான் இந்த பணத்தை பயன்படுத்தி எனது வீட்டை மறுகட்டுமானம் செய்தேன். செவ்வுரோலேட் கார் மற்றும் மோட்டார் வாங்கினேன். எனது மகளை மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளேன். மேலும்,அவரது திருமணத்திற்க்காகவும் கூட கொஞ்சம் பணத்தை சேமித்துவைத்துள்ளேன்” மகிழ்ச்சியாக கூறினார்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள உத்தண்டராயுனிபாலம் கிராமம் கிருஷ்ணா ஆற்றின் வடகரையில் உள்ள 29 கிராமங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதியில் தான் அமராவதி புதிய தலைநகரின் பசுமைத்தலைநகர் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தலைநகரின் முதற் பகுதி கட்டுமானத்திற்காக மட்டும் அமராவதி நீடித்த தலைநகர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் நிலம் திரட்டும் (LPS)திட்டத்தின் கீழ் 33,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை அரசு கையகப்படுத்தவுள்ளது.
தற்போது இந்த 29 கிராமங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. சில கட்டி முடிக்கப்பட்டுள்ளன, இதர கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு, புதிய தலைநகருக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கிராமங்களில் நிலத்தரகு நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிக பயனடைந்தது ஆதிக்கச் சாதியைச் சார்ந்த நிலவுடமையாளர்களே. குறிப்பாக கம்மா சாதியைச் சார்ந்தவர்கள். “என்னைப் போன்ற 90 விழுக்காடு நிலவுடமையாளர்கள் அவர்களது பங்கு நிலத்தை(அரசால் ஒதுக்கப்பட்ட) விற்று விட்டு வீடு கட்டிவிட்டனர்” என்றார் சங்கர ராவ் ( கட்டுரையின் மேலுள்ள முகப்புப் படத்தின் வலது பக்கத்தில் சங்கர ராவ்வின் , அண்டைவீட்டார் நாரின சுப்பா ராவ் உள்ளார் )
சங்கர ராவ் சொந்தமாக வைத்திருந்த 20 ஏக்கர் நிலத்திற்காக, ஆந்திர பிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் நிலம் திரட்டும் திட்டத்தின் கீழ் 1,000 சதுரடி கொண்ட 20 குடியிருப்பு நிலமும், 450 கஜம் சதுரடி கொண்ட 20 வணிக நிலமும் புதிய தலைநகரில் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ‘மீள்கட்டமைப்பு செய்யப்பட்ட’ நிலங்கள் ஏறத்தாழ பத்து வருடங்களுக்குள் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த பத்து வருடங்கள் வரை ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆண்டுக்கு 30-50,000 ரூபாய் வரை வருடாந்திரத் தொகையாக அந்த நிலத்தின் தன்மையைப் பொறுத்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும்,மீதமுள்ள நிலங்களில் சாலைகள் அமைக்கவும், அரசு கட்டிடங்கள் கட்டவும், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கான பிற வசதிகள் கட்டவும் ஆந்திர பிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
சங்கர ராவ் போன்ற பிற விவசாயிகளும், அவர்களுக்கு ‘ஒதுக்கப்பட்ட’ நிலங்களை(உண்மையில் அந்த நிலம் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படவில்லை) விற்றுள்ளனர். இந்தப் பகுதியில் நிலத்தரகு(ரியல் எஸ்டேட்) சந்தையும் வலுவடைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, தலைநகர் பகுதிக்கான வேலை தொடங்கப்பட்டவுடன், இந்தப் பகுதியில் உள்ள நிலங்களின் விலை ஏக்கருக்கு ஏறத்தாழ 70 லட்ச ரூபாய் வரை (1996ல் இந்த நிலங்களின் மதிப்பு வெறும் 3 லட்ச ரூபாய் மட்டுமே) உயர்ந்துள்ளது. தற்போது இந்தப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், பத்திரத்தில் குறிப்பிடப்படாத வகையில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் இந்தப் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் கூறியுள்ளனர்.
இந்த பகுதியில் பெரும்பாலான தலித்துகள் சிறிய அளவிலான நிலங்களைக் கொண்டுள்ளனர். இந்த நிலங்களும் ஆந்திரப் பிரதேச மாநில நிலச் சீர்திருத்தங்கள் (வேளாண் நிலங்களை வரன்முறைப்படுத்துதல்) சட்டம், 1973 ன் கீழ் அரசால் ஒதுக்கப்பட ஒரு ஏக்கர் நிலங்களாகும். எனினும், நிலத்தரகர்கள் குறிப்பிட்ட நிலவுரிமையாளர்கள் மீது கவனம் கொண்டு இந்தப் பகுதியில் நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த புலி மத்தையா,”அரசு வழங்கிய ஒதுக்கப்பட நிலஉரிமையாளர்களை விட பட்டா நிலங்களின் (நிலங்களுக்கு பத்திரம் கொண்டுள்ள) உரிமையாளர்களுக்கு அதிக சலுகைகள் (‘மீள்கட்டமைப்பு செய்யப்பட்ட’நிலங்கள்) வழங்கப்பட்டுள்ளது. அவர்களைப் போன்று எங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார். புலி மத்தையா தலித் சமூகமான மாலா சாதியைச் சார்ந்த 38 வயதுடைய விவசாயி ஆவார். இவர் உத்தண்டராயுனிபாலம் கிராமத்தில் அரசு இவருக்கு வழங்கிய ஒதுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை தற்போது வரை அரசின் நிலம் திரட்டும் திட்டத்திற்கு வழங்கவில்லை.
இதேவேளையில் பட்டா நிலங்களுக்கும், அரசால் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கும் சம அளவிலான வருடாந்திரத் தொகையும், 800 சதுரடி குடியிருப்பு மனை மற்றும் 250 சதுரடி வணிக மனையும் வழங்க ஆந்திரப் பிரதேச தலைநகர் மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதேபோன்று கிருஷ்ணா ஆற்றுப்பகுதியில் உள்ள தீவுகளில் அரசால் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு இதைவிட குறைவாக 500 சதுர கஜம் குடியிருப்பு மனையும், 100 சதுர கஜம் வணிக மனையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
தலைநகர் பகுதி அமையவிருக்கிற கிராமங்களில் உள்ள பெரும்பான்மையான நிலவுரிமையாளர்கள் தங்களது நிலத்தை அரசுக்கு விட்டுக்கொடுத்திருந்தாலும், 4,060 விவசாயிகள் தற்போது வரை அரசின் நிலம் திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளனர். இவர்களில் 62 வயதான புலி யோனாவும் ஒருவர். இவர் உத்தண்டராயுனிபாலம் ஒருங்கிணைந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நில விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார். இந்த சங்கம் ஏறத்தாழ 600 ஏக்கர் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்யக்கூடிய சுமார் 500 தலித் விவசாயிகளைக் கொண்டது.
அதுமட்டுமல்லாது, இந்த 29 கிராமங்களும் வருடம் முழுதும் பல்விதமான பயிர்கள் விளையக்கூடிய மிகுந்த வளமுடைய கிருஷ்ணா-கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. மத்தையா கூறுகையில்,”இது [வெறும்] 15 முதல் 20 அடியிலேயே நிலத்தடிநீர் கிடைக்கக்கூடிய பகுதி, இங்கு கிட்டத்தட்ட 2௦ நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார். மேற்கொண்டு கூறுகையில்,”இது பல்விதமான பயிர்கள் விளையக்கூடிய பகுதி. ஒருவேளை சந்தை மட்டும் ஒத்துழைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால்,கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திரா பிரதேச தலைநகர் மேம்பாட்டு ஆணையம் வற்புறுத்தி இப்பகுதியில் உள்ள உரக்கடைகளை மூடச்செய்தது. தற்போது நாங்கள் உரமும் பூச்சுக்கொல்லி மருந்துகளும் வாங்க விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளுக்கு சென்று வருகிறோம். மேலும், மாநில அரசானது விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிராக வாழவியலாத சூழலை உருவாக்க கடுமையாக முயன்று வருகிறது. இதன் வழியாக, எங்களை இந்தப் பகுதியிலிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றிவிட முனைகிறது” என்றார் மத்தையா.
மேலும்,விவசாயக் கடன்தொகை பற்றாக்குறையின் காரணமாக சிறியளவிலான நிலம் வைத்துள்ள விவசாயிகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் அழிந்ததால், 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட வங்கி மற்றும் கடன்கொடுப்பவர்கள் வழியாக 6 லட்ச ரூபாய் திரட்டியுள்ளார். உத்தண்டராயுனிபாலம் கிராமத்தில் புயல் சமயத்தில் வீசிய பலத்தக் காற்றினால் சுமார் 300 ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்கள் அழிந்துள்ளதாகவும், இதனால் ஏறத்தாழ 1௦ குடும்பங்கள் இழப்பை சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் கணித்துள்ளனர். இதன் காரணமாக அந்தக் கிராமத்தில் உள்ள பல விவசாயிகளைப் போன்று யோனாவும் அந்த வருடம் ஜூலை முதல் அக்டோபர் வரை அவரது நிலத்தில் பயிரிடவில்லை. ”வங்கிகள் 2014ஆம் ஆண்டிலிருந்து கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டன. அதோடு அமராவதி தலைநகர் அமையவிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எந்த கடனும் வழங்கக்கூடாதென அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்” என்றார் யோனா.
இதேவேளையில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தீவிர ஆதரவாளரான சங்கர ராவ், தனது நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு விற்ற பிறகு விவசாயம் செய்வதை நிறுத்தியுள்ளார். சங்கர ராவ் கூறுகையில்,“நான் சேத்தின்[ஆதாமின் மூன்றாம் மகன்] வாழ்க்கையை வாழ்கிறேன். நான் இப்போது மகிழ்ந்து வருகிறேன். ஒரு அரசு அதிகாரி பணிபெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்திலிருந்து பணி ஓய்வு பெற்றிருக்கிறேன்” என்று கூறிவிட்டு சிரிக்கிறார். மேலும்,”இந்தப் பகுதியில் நடந்தேறி வரும் வளர்ச்சிப்பணிகள் என்பது வியக்கச் செய்கிறது” என்றார்.
ஆந்திர பிரதேச மாநிலத் தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையம் தலைநகர் பகுதிக்கு நிலம் அளித்த விவசாயிகளில் சிலரை ‘நில மேம்பாட்டை புரிந்துகொள்வதற்காக’ சிங்கபூருக்கு தொடர்ச் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி செய்தித்தாள்களும் குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் கம்மா சாதியைச் சார்ந்த உத்தண்டராயுனிபாலம் கிராமத்தில் 15 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள் 59 வயதான பட்டுல நாகமல்லேஸ்வர ராவ்வும் ஒருவர். இவர் கடந்த செப்டம்பர் 2017ல் 6 நாட்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார். “அமராவதி நகரின் வளர்ச்சி குறித்து நான் சந்தேகம் அடைந்திருந்தேன். ஆனால், சிங்கப்பூர் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்று பார்த்தபின்பு, அமராவதியும் சிங்கப்பூரைப் போன்று வளர்ச்சி அடையும் என நான் உறுதியாக உள்ளேன்” என்றார்.
அவரது மகன் 35 வயதான பட்டுல திருப்பதி ராவ், தகவல் தொழிநுட்ப துறையில் பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்து விட்டு திரும்பியவர். “நான் அமராவதியில் தொழில் தொடங்கலாம் என்று கடந்த மே 2017 திரும்பி வந்தேன். ஆனால்,நகரின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகள் கழித்தும் கூட இங்கு போதியக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்தப் பகுதியில் தரமற்ற சாலை, மின்வெட்டு, தரமற்ற தொலைபேசி அலைவரிசை ஆகியவற்றின் மத்தியில், ஏன் ஒரு நிறுவனம் அதன் கிளையை இங்கு தொடங்க வேண்டும்? என்று திருப்பதி ராவ் கேள்வியெழுப்பியுள்ளார். மேற்கொண்டு கூறுகையில்,” ‘ தற்போது ‘பெரும் உலகத்தரம் வாய்ந்த’ அமராவதி நகரம் என்பது காகிதத்திலும் பவர்-பாயிண்ட் விளக்கக்காட்சிகளில் மட்டுமே உள்ளது. நாங்கள் அமராவதிக்கு குடியேறுவதற்கு முன்னர் நிறைய செய்து தர வேண்டும். உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு அமராவதியை தகவமைக்காமல் நீங்கள் சிங்கபூராக மாற்ற விரும்பினால், அது முட்டாள்த் தனம்” என பட்டுல திருப்பதி ராவ் கூறினார்.
கடந்த டிசம்பர் 2014 ஆம் ஆண்டு, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் தலைநகர் பகுதியுள்ள கிராமங்களை பார்வையிட்டனர். 1960களில் சண்டிகர் தலைநகர் திட்டத்தின் நிர்வாகியாக இருந்த முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் எம்.ஜி.தேவசகாயம் இந்தக் குழுவை வழிநடத்தினர். அவர் கூறுகையில்,”இங்கு நிலத்தரகர்களின்[ரியல் எஸ்டேட்] பொருளாதாரத்திற்காக வேளாண் பொருளாதாரம் அழிக்கப்படுவது, 1770ல் வெளியான ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் இடையர்கள் வாழ்வு சார்ந்த கவிதையான,வெறிச்சோடிய கிராமம் கவிதையை நினைவு படுத்துகிறது. அந்த கவிதையில் இன்று அமராவதி நகரில் நடந்து கொண்டிருப்பதை அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் “ கட்டணம் விதிக்கப்படும் நிலம் நோய்களுக்கு இரையாகிறது/ அங்கு செல்வம் குவிந்து மனிதர்கள் சிதைந்து போகிறார்கள்” என்றுக் குறிப்பிட்டிருப்பார்.
புதிய தலைநகர், பழைய பிரிவினை உத்திகள்
வாக்களித்த படி அரசு வேலைகள் தரட்டும்
இழந்த விவசாய வேலையின் வீணான நிலம்
பெரிய தலைநகர், குறைவான சம்பளம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்கள்
தமிழில்: பிரதீப் இளங்கோவன்