“நீர்க்குடம் உடைந்த அந்த மாலையில், கடுமையான வலியில் நான் இருந்தேன். அதற்கு முந்தைய மூன்று நாட்களும் பனி பொழிந்து கொண்டிருந்தது. அப்படி நேர்ந்து சூரியவெளிச்சம் பல நாட்களாக இல்லாமல் இருக்கும்போது எங்களின் சூரியத் தகடுகளில் மின்சாரம் வருவதில்லை.” 22 வயது ஷமீனா பேகம், ஜம்மு காஷ்மீரின் வசிரிதல் கிராமத்தில் இரண்டாம் குழந்தை பெற்ற நேரம் குறித்து பேசுகிறார். அந்த கிராமத்தில் சூரியன் அதிக நேரம் காயாது. தொடர்ச்சியாகவும் இருக்காது. ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கான ஒரே மின்சார ஆதாரம் சூரிய ஆற்றல்தான்.
“எங்களின் வீட்டில் லாந்தர் விளக்கு மட்டும்தான்,” என்கிறார் ஷமீனா. “அண்டை வீட்டார் அந்த மாலை ஒன்றாகி அவரவர் லாந்தர் விளக்கை எடுத்து வந்தனர். ஐந்து பிரகாசமான மஞ்சள் ஜுவாலைகள், ரஷிதாவை நான் பெறுவதற்கு என் தாய் உதவிக் கொண்டிருந்த அறைக்கு ஒளி கொடுத்தன.” ஏப்ரல் 2022-ன் ஓரிரவு அது.
படுகாம் கிராமப் பஞ்சாயத்தின் கீழ் உள்ள கிராமங்களில் வசிரிதல் அழகான கிராமம் ஆகும். ஸ்ரீநகரிலிருந்து 10 மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கும் பகுதி. அதில் நான்கரை மணி நேரம் ரஸ்தான் சாலையிலிருந்து விலகி குரெஸ் பள்ளத்தாக்கின் வழியாக அரை டஜன் செக்போஸ்டுகளைத் தாண்டி, இறுதியாக 10 நிமிட தூரம் நடந்து ஷமீனாவின் வீட்டை அடைய வேண்டும். அது ஒன்றுதான் வழி.
இக்கிராமத்தில் வசிக்கும் 24 குடும்பங்களின் வீடுகள் இருக்கும் குரெஸ் பள்ளத்தாக்கும் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து சில மைல் தூரத்தில்தான் இருக்கிறது. வீடுகள் தேவதாரு மரத்தால் கட்டப்பட்டு, வெப்பம் தடுக்க உள்ளே களிமண்ணால் பூசப்பட்டிருக்கின்றன. பழைய கவரிமாக்களின் அசலான கொம்புகள் அல்லது அவற்றைப் போல் மரத்தில் செய்த பச்சை பூச்சு கொண்ட கொம்புகள் வீட்டுக் கதவுகளை அலங்கரிக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் ஜன்னல்களும் எல்லையின் மறுபக்கத்தை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு வயது ஃபர்ஹாஸ் மற்றும் நான்கு மாதக் குழந்தை ரஷிதா (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) ஆகியோருடன் வீட்டுக்கு வெளியே ஷமீனா விறகுக் குவியலின் மீது அமர்ந்து மாலை நேரச் சூரியனின் இறுதிக் கதிர்களை ரசித்துக் கொண்டிருக்கிறார். “என்னை போன்ற புதிய தாய்கள் காலை, மாலை வெயிலில் கைக்குழந்தைகளுடன் அமர்ந்திருக்க வேண்டும் என என் தாய் சொல்வார்,” என்கிறார் அவர். அது ஆகஸ்டு மாதம்தான். பனி இன்னும் பள்ளத்தாககை முழுவதுமாக மூடியிருக்கவில்லை. இன்னும் மேகம் நிறைந்த நாட்களும் அவ்வப்போது பொழியும் மழையும் இருந்தது. சூரிய வெளிச்சமற்ற நாட்களும் மின்சாரமின்றி இருக்கிறது.
“ஒன்றிய அலுவலகத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன் 2020ம் ஆண்டில் சூரியத் தகடுகளைப் பெற்றோம். அது வரை பேட்டரி லைட்டுகளும் லாந்தர் விளக்குகளும் மட்டும்தான். ஆனால் இவை (சூரியத் தகடுகள்) எங்கள் பிரச்சனையைத் தீர்க்கவில்லை,” என்கிறார் 29 வயது முகமது அமின்.
“படுகம் ஒன்றியத்தின் பிற கிராமங்கள் ஏழு மணி நேரங்களுக்கு ஜெனரேட்டர்களின் வழியாக மின்சாரம் பெறுகின்றன.இங்கோ சூரியத் தகடுகளால் மின்னேற்றப்படும் 12 வோல்ட் பேட்டரி இருக்கிறது. இரு குழல் விளக்குகள் இயங்கவும் ஒன்றிரண்டு செல்பேசிகளுக்கு மின்னேற்றவும் அது பயன்படுகிறது. இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை பெய்தாலோ பழி பொழிந்தாலோ சூரிய வெளிச்சம் இருக்காது. மின்சார வெளிச்சமும் எங்களுக்கு இருக்காது,” என்கிறார் அமின்.
ஆறு மாத கால குளிர்காலத்தில் பொழியும் பனி இங்கு தீவிரமாக இருக்கும். அக்டோபரிலிருந்து ஏப்ரல் வரை இங்குள்ள குடும்பங்கள் 123 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தெர்பால் மாவட்டத்திற்கோ 108 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீநகருக்கோ இடம்பெயர வேண்டியிருக்கும். ஷமீனாவின் பக்கத்து வீட்டுக்காரரான அஃப்ரீன் பேகம் தெளிவாக சொல்கிறார்: “அக்டோபர் மாதத்தின் நடுவிலோ இறுதியிலோ நாங்கள் கிராமத்திலிருந்து கிளம்பத் தொடங்குவோம். நவம்பருக்கு பிறகு இங்கு பிழைப்பது கஷ்டமாகிவிடும். நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து இது வரை பனி இருக்கும்,” என சொல்லும் அவர் என் தலையை நோக்கி சுட்டிக் காட்டுகிறார்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய இடத்துக்கு சென்று தங்கி விட்டு, குளிர்காலம் முடிந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும். சிலருக்கு அங்கு (கந்தெர்பால் அல்லது ஸ்ரீநகர்) உறவினர்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் ஆறு மாதங்கள் தங்க வாடகைக்கு இடம் பிடிக்க வேண்டும்,” என்கிறார் பழுப்பு சிவப்பு நிற ஃபெரான் ஆடை அணிந்திருக்கும் ஷமீனா. உடலுக்கு பெப்பம் கொடுக்கவென காஷ்மீரிகள் பயன்படுத்தும் நீண்ட கம்பளி ஆடை அது. “10 அடி பனியைத் தவிர எதுவும் இங்கு தெரியாது. வருடத்தின் அந்த கட்டம் வரும் வரையில் நாங்கள் கிராமத்திலிருந்து நகர மாட்டோம்.”
ஷமீனாவின் 25 வயது கணவரான குலாம் முசா கான் ஒரு தினக்கூலி ஊழியர். குளிர்காலங்களில் அவருக்கு பெரும்பாலும் வேலை இருக்காது. “வசிரிதலில் நாங்கள் இருக்கும்போது அவர் படுகம் அருகே பணிபுரிவார். சில நேரங்களில் பந்திப்போரா டவுனில் பணி செய்வார். சாலை கட்டுமான வேலைகளில்தான் பெரும்பாலும் அவர் பணிபுரிவார். சிஅல் நேரங்களில் கட்டுமான தளங்களிலும் அவருக்கு வேலை கிடைப்பதுண்டு. வேலை கிடைத்தால் நாளொன்றுக்கு 500 ரூபாய் வருமானம் ஈட்டுவார். ஆனால் சராசரியாக மாதத்துக்கு ஐந்தாறு நாட்கள் மழை வந்து அவர் வீட்டிலேயே அமர்ந்திருக்க நேரிடும்,” என்கிறார் ஷமீனா. வேலையைப் பொறுத்து குலாம் முசா மாதம் 10,000 ரூபாய் வருமானம் ஈட்டுவாரென சொல்கிறார் அவர்.
“கந்தெர்பாலுக்கு நாங்கள் செல்லும்போது அவர் ஆட்டோ ஓட்டுவார். வாடகைக்கு அவர் ஆட்டோ எடுத்து, குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் ஸ்ரீநகரில் ஓட்டுவார். அதுவும் கிட்டத்தட்ட அதே அளவு வருமானத்தைதான் (10,000 ரூபாய் மாதத்துக்கு) பெற்றுத் தருகிறது. எங்களால் அங்கு ஒன்றும் சேமிக்க முடியவில்லை,” என்கிறார் அவர். கந்தெர்பாலில் இருக்கும் போக்குவரத்து வசதிகள் வசிரிதலில் இருப்பதை விட நன்றாக இருக்கிறது.
“எங்களின் குழந்தைகள் அங்கேயே (கந்தெர்பாலில்) வசிக்க வேண்டுமென விரும்புகின்றனர்,” என்கிறார் ஷமீனா. “அங்கு பலவித உணவுகள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. மின்சாரத்துக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அங்கு நாங்கள் வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறது. வசிரிதலில் நாங்கள் வசிக்கும் மாதங்களில் பணம் சேர்க்கிறோம்.” மளிகைக்கு அவர்கள் கந்தெர்பாலில் செலவழிப்பதும் கூடுதல் செலவு. வசிரிதலில் ஷமீனா குடும்பத்துக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கவென சிறு தோட்டத்தையேனும் வைத்திருப்பார். அவர்கள் அங்கு வசிக்கும் வீடும் அவர்களுக்கு சொந்தமானது. கந்தெர்பாலில் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு மாதத்துக்கு 3,000 -லிருந்து 3,500 ரூபாய் வரை வாடகை ஆகும்.
“இங்கிருக்குமளவுக்கு அங்குள்ள வீடுகள் நிச்சயமாக பெரிது இல்லை. ஆனால் மருத்துவமனைகள் நன்றாக இருக்கின்றன. சாலைகள் நன்றாக உள்ளன. எல்லாமே அங்கு கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கு விலை இருக்கிறது. ஆனால் எப்படி இருந்தாலும் அது எங்களின் சொந்த ஊர் கிடையாது,” என பாரியிடம் கூறுகிறார் ஷமீனா. செலவுகளின் காரணமாகத்தான் ஷமீனா கர்ப்பம் தரித்த ஆறு மாதங்களிலேயே தேசிய ஊரடங்கினூடாக அவர்கள் வசிரிதலுக்கு போக வேண்டியிருந்தது.
“ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தேன். மார்ச் 2020-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஃபர்ஹாஸை கருவில் சுமந்திருந்தேன். அவன் தொற்றுக்காலத்தில் பிறந்தவன்,” எனப் புன்னகைக்கிறார் ஷமீனா. “ஏப்ரலின் இரண்டாம் வாரத்தில் ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி ஊருக்கு வந்தோம். ஏனெனில் காந்தெர்பாலில் உணவுக்கும் வாடகைக்கும் வருமானம் ஈட்டாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது,” என அவர் நினைவுகூருகிறார்.
“சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை. என் கணவர் வருமானம் ஏதும் ஈட்ட முடியவில்லை. எனக்கான மருந்துகள் மற்றும் மளிகைக்காக உறவினர்களிடம் சில கடன்கள் வாங்க வேண்டியிருந்தது. நாங்கள் கடனை அடைத்துவிட்டோம். எங்களின் நிலவுரிமையாளரிடம் சொந்தமாக வாகனம் இருக்கிறது. எங்களின் நிலை கண்டு 1,000 ரூபாய்க்கு அதை பயன்படுத்த அனுமதியளித்தார். எரிபொருள் செலவு நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் நாங்கள் வீடு திரும்ப முடிந்தது.”
வசிரிதலில் நிலையற்ற மின்சாரம் மட்டும் பிரச்சனையில்லை. ஊருக்குள்ளும் வெளியேயும் செல்லும் சாலைகளும் சுகாதார வசதி பற்றாக்குறையும் பிரச்சினைகளாக இருக்கின்றன. வசிரிதலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் போதுமான மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், சுகப்பிரசவனங்களை கையாளுவதற்கான ஆட்களும் வசதிகளும் கூட அங்கு இல்லை.
“படுகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு செவிலியர்தான் இருக்கிறார். எங்கிருந்து அவர்கள் பிரசவம் பார்க்க முடியும்?.” எனக் கேட்கிறார் வசிரிதலில் அங்கன்வாடி ஊழியராக இருக்கும் 54 வயது ராஜா பேகம். “நெருக்கடியாக இருந்தாலும் கருக்கலைப்பாக இருந்தாலும் கருச்சிதைவாக இருந்தாலும் அனைவரும் குரெஸ்ஸுக்குதான் செல்ல வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் ஸ்ரீநகரின் லால் தெத் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குரேஸ்ஸிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவு. சிக்கலான வானிலை எனில் அங்கு சென்றடைவதற்கு ஒன்பது மணி நேரங்கள் பிடிக்கும்,” என்கிறார் அவர்.
குரேஸ் மருத்துவமனைக்கு செல்லும் சாலைகள் மோசமாக இருக்கும் என்கிறார் ஷமீனா. “போகவும் வரவும் தலா இரு மணி நேரம் ஆகும்,” என்கிறார் ஷமீனா, 2020ம் ஆண்டில் தன் கர்ப்பகால அனுபவத்தை விளக்குகையில். “மேலும் மருத்துவமனையில் நான் கையாளப்பட்ட விதம் மோசம்! குப்பை பெருக்குபவர்தான் நான் குழந்தைப் பெற உதவினார். ஒருமுறை கூட என்னைப் பரிசோதிக்க மருத்துவர் வரவில்லை. பிரசவத்துக்கும் முன்னும் பின்னும் கூட வரவில்லை.”
ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சரி குரேஸ்ஸின் மருத்துவமனையிலும் சரி மருத்துவ அலுவலர்களுக்கு கடும் பற்றாக்குறை இருக்கிறது. குறிப்பாக மகளிர் நோய் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் இல்லை. ஊடகத்தில் இது அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையம் முதலுதவி மற்றும் எக்ஸ்ரே வசதிகளை மட்டுமே கொண்டிருப்பதாக ராஜா பேகம் குறிப்பிடுகிறார். அதைத் தாண்டிய விஷயங்களுக்கு நோயாளியை 32 கிலோமீட்டர் தொலைவில் குரேஸில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல சொல்கின்றனர்.
குரேஸ் மருத்துவமனை இருக்கும் நிலை இன்னும் கொடுமை. 11 மருத்துவ அலுவலர்கள் 3 பல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 3 திறன் மருத்துவர்கள் ஆகியோருக்கான இடம் ஒன்றியத்தில் நிரப்பப்படாமல் இருப்பதாக (சமூகதளத்தில் செப்டம்பர் 2022-ல் பரவிய) ஒன்றிய மருத்துவ அலுவலரின் அறிக்கை குறிப்பிடுகிறது. இடங்கள் நிரப்பப்படுவதில் முன்னேற்றம் இருப்பதாகக் குறிப்பிடும் நிதி அயோக்கின் சுகாதார அறிக்கையுடன் இந்த தகவல் முரண்படுகிறது.
ஷமீனாவின் வீட்டிலிருந்து 5-6 வீடுகள் தள்ளி வசிக்கும் 48 வயது அஃப்ரீனுக்கு என சொல்ல ஒரு கதை இருக்கிறது. “குரேஸ் மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு மே 2016-ல் சென்றபோது என் கணவர் வாகனம் வரை முதுகில் என்னை தூக்கிச் சென்றார். எதிர்திசையில்தான் நான் இருந்தேன். இல்லையெனில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் நின்றிருந்து 300 மீட்டர் தொலைவை என்னால் கடந்திருக்கவே முடியாது,” என்கிறார் அவர் இந்தி கலந்த காஷ்மீரி மொழியில். “அது நடந்தது ஐந்து வருடங்களுக்கு முன் என்றாலும் இப்போதும் அதே நிலைமைதான் நிலவுகிறது. எங்களின் மருத்துவச்சிக்கு வயதாகிறது. பல நேரங்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது.”
அஃப்ரீன் மருத்துவச்சி எனக் குறிப்பிடுவது ஷமீனாவின் தாயைத்தான். “என் முதல் பிரசவத்துக்குப் பிறகு எதிர்காலத்தில் வீட்டில்தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன்,” என்கிறார் ஷமீனா. “என் தாய் இல்லையெனில் இரண்டாம் கர்ப்பத்தின் போது நீர்க்குடம் உடைந்த பிறகு நான் பிழைத்திருக்க முடியாது. அவர்தான் மருத்துவச்சி. கிராமப் பெண்கள் பலருக்கு உதவியிருக்கிறார்.” நாங்கள் இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு குழந்தையை மடியில் வைத்து பாடல்கள் பாடிக் கொண்டிருந்த முதியப் பெண்ணை சுட்டிக் காட்டினார்.
ஷமீனாவின் தாயான 71 வயது ஜானி பேகம், பழுப்பு நிற ஃபெரான் அணிந்து வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். கிராமத்தின் எல்லா பெண்களையும் போல அவரும் முக்காடிட்டிருக்கிறார். அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் அவருக்கிருக்கும் அனுபவத்தை பறைசாற்றுகின்றன. “35 வருடங்களாக இப்பணி செய்து வருகிறேன். பல வருடங்களுக்கு முன், பிரசவங்களுக்கு செல்லும்போது என் தாய்க்கு உதவ அவர் என்னை அனுமதித்திருக்கிறார். எனவே நான் பார்த்து செய்து கற்றுக் கொண்டேன். உதவ முடிவது ஓர் ஆசிர்வாதம்தான்,” என்கிறார் அவர்.
ஜானி இங்கு ஏதோவொரு மாற்றம் நேர்வதை உணர்ந்திருக்கிறார். ஆனால் என்னவென தெளிவாக தெரியவில்லை அவருக்கு. “இப்போதெல்லாம் சில ஆபத்துகள் பிரசவங்களில் இருக்கின்றன. ஏனெனில் இரும்புச்சத்து மாத்திரைகள் இப்போது பெண்களுக்குக் கிடைக்கிறது. பல ஆரோக்கிய விஷயங்களும் கிடைக்கிறது. முன்பெல்லாம் இப்படி கிடையாது,” என்கிறார் அவர். “ஆமாம். மாற்றம் நேர்ந்திருக்கிறது. ஆனாலும் பிற கிராமங்களில் நேர்ந்த அளவுக்கு மாறிவிட வில்லை. எங்களின் பெண் குழந்தைகள் படிக்கின்றனர். எனினும் நல்ல சுகாதார வசதிகள் அவர்களுக்கு இன்னுமே பிரச்சினையாகத்தான் இருக்கின்றன. மருத்துவமனைகள் இருக்கின்றன. அவசர காலத்தில் அங்கு துரிதமாக செல்லுமளவுக்கு நல்ல சாலைகள் இல்லை.”
குரெஸ்ஸின் மருத்துவமனை தூரத்தில் இருக்கிறது. அங்கு செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஐந்து கிலோமீட்டரேனும் நடக்க வேண்டும். அதற்குப் பிறகு பொதுப் போக்குவரத்துக்கான வழி கிடைக்கலாம். அரை கிலோமீட்டரில் தனியார் வாகனம் கிடைக்கும். ஆனால் செலவு அதிகமாக இருக்கும்.
“இரண்டாம் கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் ஷமீனா மிகவும் பலவீனமாக இருந்தார்,” என்கிறார் ஜானி. “அங்கன்வாடி ஊழியர் அறிவுறுத்தியதன்பேரில் நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல நினைத்தோம். ஆனால் வேலை தேடி என் மருமகன் வெளியூர் சென்றிருந்தார். வாகனம் கிடைப்பது இங்கு மிகவும் கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் கர்ப்பிணிப் பெண்ணை மக்கள் வாகனத்துக்கு தூக்கிச் செல்ல வேண்டும்,” என்கிறார் அவர்.
“அவர் போன பிறகு எங்கள் கிராமப் பெண்களுக்கு என்ன ஆகும்? யாரை நாங்கள் சார்ந்திருக்க முடியும்?” ஜானியைக் குறிப்பிட்டு அஃப்ரீன் பேசுகிறார். அது மாலை நேரம். இரவுணவுக்காக வீட்டுக்கு வெளியே இருக்கும் புதர்களில் முட்டைகள் தேடுகிறார் ஷமீனா. “கோழிகள் முட்டைகளை மறைத்து வைக்கின்றன. முட்டைப் பொறியல் செய்ய அவற்றை நான் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் இன்றும் ராஜ்மா சோறுதான். எதுவும் இங்கு சுலபமாக கிடைப்பதில்லை. மரங்கள் சூழ இருக்கும் இந்த கிராமம் தூர இருந்து பார்க்க அழகாக இருக்கலாம். நெருங்கி வந்து பார்த்தால்தான் எங்களின் வாழ்க்கைகள் இருக்கும் நிலை உங்களுக்கு புரியும்,” என்கிறார் அவர்.
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்