அவர்கள் சூரியன் எழுவதற்கு முன்னால் எழுகிறார்கள். நாள் முழுதும் வேலை செய்கிறார்கள். அவர்களின் வீடுகளில், அவர்களின் வயல்களில், அவர்களுடைய குழந்தைகளையும் குடும்பங்களில் இருக்கின்ற ஆண்களையும் பராமரிப்பதற்காக, அவர்களின் ஆடுகள், மாடுகள், கோழிகளை பராமரிப்பதற்காக, அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள். அதுவும் அவர்கள் இமயமலையின் உச்சியில் சரளைக் கற்கள் நிறைந்த மலைப்பாதைகளில் இதனை செய்கிறார்கள். அவர்களுடைய முதுகுகளில் கனமான சுமைகளை ஏற்றிக் கொண்டு இந்தப் பணிகளைச் செய்கிறார்கள். உற்பத்திப் பொருட்களையும் தீவனங்களையும் முதுகுகளில் தூக்கிக் கொண்டு அவர்கள் இதைச் செய்கிறார்கள். இமாச்சல் பிரதேசத்தின் பஹாரி சமூகப் பெண்கள்தான் அவர்கள். அவர்களைச் சந்தியுங்கள்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் சுபத்ரா தாகூர் அவரது சமையலறைக்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தார். சுவர்கள் எல்லாம் நீல நிறம். ரப்பர் கையுறைகளை அணிந்து கொண்டு அவர் வெள்ளை வண்ணத்தை பூசிக் கொண்டு இருந்தார். சமையல் முடிந்து விட்டது. காலை 11.30 மணி ஆகிவிட்டது, சின்ன இடைவேளை எடுத்துக்கொள்வோம் என்பதற்காக அவர் வீட்டுக்கு வெளியில் காலடி வைத்தார். அவரைப் பார்ப்பதற்காக பேரக் குழந்தைகள் வந்திருந்தார்கள். வெயிலில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு புன்னகையோடு அவர்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் கோடையில் முழுநாளும் அவருடைய குடும்பத்தின் வயல்களில் அவர் செலவிடுவார். ஆனால், குளிர் காலம் வருகிறது. குளிர்காலத்தின் வருகையோடு சின்ன ஓய்வு .....
பிடான்கிலி கிராமத்தில் இருக்கிறது அவரது வீடு. அங்கிருந்து மசூப்ரா எனுமிடத்தில் உள்ள அவரது வயல்களுக்கு மலை ஓரமாக சுபத்ராவும் அவரது மருமகள் ஊர்மிளாவும் குறுகலான, கற்பாதைகளின் மூலமாக இறங்கி கீழே வருவார்கள். மலைச் சரிவுகளைத் தழுவியதாக, வனத்தைப் பிளந்தபடி, ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் பகுதி சாய்வான நிலையில் இருக்கிறது.
பெண்கள் வயல்களுக்கு முன்னதாகவே போய்விடுகிறார்கள். அவர்கள் கையில் சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். மாலை நேரத்தில் அறுவடை முடிந்த பிறகு, வீடு திரும்புகிறார்கள். முழு நாள் வேலை செய்த களைப்போடு அவர்கள் கிலோக்கணக்கில் தலையிலும் முதுகிலும் சுமைகளைத் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருக்கிறது.
ஏறக்குறைய எல்லா குடும்பங்களிலும் ஏதோ கொஞ்சம் கால்நடைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்த மலைக்கே உரிய, இந்தப் பகுதிக்கே உரிய கால்நடைகள் இருந்தன. சின்னதாக, அழுத்தமான, வலுவான கால்களோடு, அந்தப் பகுதிக்கு தங்களை நன்றாக தகவமைத்துக் கொண்டதாக அந்த கால்நடைகள் இருக்கும். அதற்குப் பிறகு கலப்பின கால்நடைகள் வரத் தொடங்கிவிட்டன. இப்போது எல்லா இடங்களிலும் கலப்பின கால்நடைகள்தான். ஜெர்சி பசுக்களுக்கு நிறைய தீவனம் போட வேண்டும். பஹாரி பகுதியைச் சேர்ந்த பசு மாடுகளை விட மிக அதிகமான அளவும் அதிகமான முறையும் கலப்பின ஜெர்சி மாடுகள் பால் உற்பத்தி செய்கின்றன. அவற்றிலிருந்து பால் கறப்பதும் அவற்றுக்காக தீவனங்கள் சேகரிப்பதும் சாணத்தை அகற்றி மாட்டுக்கொட்டகைகளை ஒழுங்குபடுத்துவதும் கூட பெண்களின் வேலைகள் தான்.
இமயமலையின் முகடுகள் மிக மிக அழகானவை. அதே நேரத்தில் அவை ஏறுவதற்கு மிக மிக சிரமமானவை. உள்ளூர் பெண்கள் எளிதாக, இந்த மலைமுகடுகளை கடக்கிறார்கள். அழுத்தமான வண்ணங்கள் கொண்ட, பளிச்சென்று தெரியக்கூடிய வண்ணங்களைக் கொண்ட சல்வார் கமீஸ் களையும், மற்ற ஆடைகளையும் அணிந்துகொண்டு, அவர்கள் மலைமுகடுகளில் ஆங்காங்கே காணப்படுவார்கள். கடுமையாக உழைப்பவர்களாக, தாங்கள் வெட்டிய புல்லை பண்டலாக கட்டுபவர்களாக, வர இருக்கின்ற குளிர்காலத்துக்கான தீவனங்களை சேகரிப்பவர்களாக காணப்படுவார்கள். வீட்டின் முற்றங்களில் புற்களை சூரிய வெளிச்சத்தில் காய வைத்து, சேமித்து வைக்க வேண்டும்.
வயல்களிலிருந்து வருகிற விளைபொருள்கள் குடும்பங்களுக்கும் உணவு அளிக்கின்றன. சிறுதானியங்கள், பீன்ஸ், சோளம் ஆகியவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றை மாவாக அரைத்து வைக்க வேண்டும். கோடை காலங்களில் காலிஃப்ளவரும் முட்டை கோசும் வயல்களை பச்சை பசேல் என்று மாற்றும். ஆனால், ஆப்பிள் மரங்கள் யாரும் பறிக்கக்கூடியதாக இருக்கும். பியர் பழங்கள் கீழே விழுந்து தரையில் அழுகிக்கிடக்கும்.
வசந்த காலத்தில் மலைச்சரிவுகளில் உள்ள வயலை சுபத்ராவின் கணவர் பஹாரி எருதுகளைக் கொண்டு உழுவார். (முதுகெலும்பு பிரச்சினையானல்
அவதிப்படுகிற அவரின் மகன் சுற்றுலா வண்டி ஓட்டுநராக போய்விட்டார்)
பயிர் வைக்கிற இரண்டு காலகட்டங்களுக்கு இடையில்
சுபத்ரா மாதிரியான சொந்தமாக நிலம் வைத்திருக்கிற குடும்பங்கள் கொஞ்சம் பணமும்
சேர்த்துவைத்துக்கொள்வார்கள். குளிர்காலத்துக்காக கொஞ்சம் சேமித்தும்
வைத்துக்கொள்வார்கள். பனி தரையில் கொட்ட ஆரம்பிக்கும்போது அழையா விருந்தாளியைப்
போல வந்து பல வாரங்களுக்கு அப்படியே உட்கார்ந்துகொள்ளும். பெண்கள் அவர்களால்
எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சுள்ளிகளை சேமித்துவைத்துக்கொள்வார்கள்.
அடுப்புக்கு அவை தேவை. வனப்பாதைகளில் உள்ள பைன் மரக் கட்டைகள் கூட சேமிக்கப்படும்.
கதகதப்புக்கு எரியூட்டப்படும்.
குளிர்காலத்தில் பெரும்பாலான வேலைகள் மூடிய கதவுகளுக்கு உள்ளேதான் நடக்கும். பெண்கள் பின்னல் ஆடைகளை பின்னுவார்கள். சமைப்பார்கள். சுத்தம் செய்வார்கள். குழந்தைகளை பராமரிப்பார்கள். இமயமலையில் வசிக்கும் பெண்களுக்கு ஓய்வு என்பது வெறும் வார்த்தைதான். அவர்களின் முதுகுகளில் அவர்கள் சுமக்கும் சுமைகள் தரையில் இருந்ததை விடவும் அவர்களின் முதுகுகளில் இருந்த நேரம்தான் அதிகம்.
தமிழில் : த. நீதிராஜன்