இந்த ஊரடங்குக்கு தயாராக தனக்கு ஏன் கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடியாமல் தவிக்கிறார் முகமது கோகன். நகரின் நகராட்சி நிறுவனமான ப்ருகத் பெங்களூரு மகாநகர பாலிகேவின் தூய்மை பணியாளர் இப்படி கூறுகிறார் - ”இது ஒரு நீண்ட சிறைவாசம் எனத் தெரிந்திருந்தால், தான் உணவு வாங்க சிறிது பணத்தை ஒதுக்கி வைத்திருக்க முடியும் என்று!
முகமதுக்கு வீடு வெகு தொலைவில் உள்ளது - தெற்கு டெல்லியின் ஓரம் உள்ள ‘நகர்ப்புற’ கிராமமான ஜசோலாவில். பெங்களூரில், நகரின் வடக்கே உள்ள அம்ருத்தஹள்ளி பகுதியில் அவர் பணிபுரியும் குப்பை பகுதிக்கு அருகே வசிக்கிறார். ”ஊரடங்குப் பற்றி எங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் என்னிடம் கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைத்திருப்பேன். எனது ஒப்பந்தக்காரரை அணுகி எனது கஷ்டங்களை விளக்கிக் கூறி, அவரிடம் கொஞ்சம் பணம் கேட்டிருக்கலாம், ”என்று கூறுகிறார்.
இப்போது வருமானமும் இல்லாமல், உணவும் இல்லாமல், தன்னார்வ அமைப்புகளால் அளிக்கப்படும் உணவுப் பொட்டலங்களைத்தான் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிடுவதாக முகமது கூறுகிறார். "இது எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகிவிட்டது, ஏனெனில் ஊரடங்கு திடீரென்று தொடங்கியது," என்று அவர் கூறுகிறார்.
நகரம் முழுவதும், தெற்கு பெங்களூரில், ஊரடங்கு உத்தரவு மிகக் குறைந்த காலத்தில் அறிவிக்கப்பட்டது என்று சுந்தர் ராமசாமி ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் இதற்குத் தயாராக இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கான உணவை நாங்கள் சேமித்து வைத்திருக்க முடியும். உணவு இல்லாமல் நாங்கள் எப்படி வீட்டுக்குள் இருக்க முடியும்? ” என்று கேட்டிகிறார் சுந்தர். 40 வயதாகும் அவர், ஒரு வணிக ஓவியராக இருக்கிறார்.



