“கரோனா வைரஸ் குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கு, தினமும் குறைந்தது 25 வீடுகளுக்கு மாதத்திற்கு குறைந்தது நான்கு முறை ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல வேண்டும்“ என்கிறார் சுனிதா ராணி. இவர் 10 நாட்களுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளையில் ஹரியாணாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 180க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி வரை இரண்டு பேர் இறந்துள்ளனர் என்கிறது மாநில சுகாதாரத் துறை.
“இந்நோயை கண்டு மக்கள் அஞ்சுகின்றனர். தொட்டால் பரவிவிடும் என பலரும் நினைக்கின்றனர். ஊடகங்களில் சொல்லப்படும் ’சமூக விலகல்’ குறித்த தகவல்களை தொடர்ந்து பேசுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்தும், அதற்காக ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விளக்குகிறேன். ஆனால், அவர்கள் இதை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை.” என்று சொல்லும் சுனிதா, ”ஏழு பேர் வசிக்க கூடிய 10 அடிக்கு 10 அடி உள்ள வீட்டில் அவர்களால் எப்படி விலகி இருக்க முடியும்“ என்கிறார்.
ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள நாதுபூர் கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளராக (ஆஷா) இருக்கிறார், 39 வயதாகும் சுனிதா. இந்தியாவின் கிராமப்புற மக்களிடம் பொது சுகாதார நலன் குறித்து எடுத்துச் செல்லும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்களில் சுனிதாவும் ஒருவர். பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, கருவுற்ற மகளிரின் நலன் பேணுதல், குடும்பக் கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்குதல் எனப் பல்வேறு பணிகளையும் கோவிட்-19 தொற்று தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. கோவிட்-19 பொதுநல மற்றும் சமூக நல நெருக்கடியை பெருமளவில் ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 முதல் தொற்று மார்ச் 17ஆம் தேதி ஹரியாணாவின் குருகிராமில் கண்டறியப்பட்டது. இந்நோய் பற்றி சோனிபட்டில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு கண்காணிப்பாளரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. நான்கு நாட்களில் சோனிபட்டில் முதல் தொற்று உறுதியானது. கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாதுகாப்பு விதிமுறைகள், எதைப் பின்பற்றுவது என்பன போன்ற எந்த வழிகாட்டுதலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சார்ஸ்-CoV-2 எனும் ஆபத்தான வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி சுனிதா உள்ளிட்ட 1,270 ஆஷா பணியாளர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அளிக்கப்பட்டது. அதேசமயத்தில் தான் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது அப்போதுதான் மாநிலத்தின் முதல் கோவிட்-19 இறப்பும் பதிவு செய்யப்பட்டது.
சுனிதாவின் கண்காணிப்பில் தோராயமாக 1000 பேர் கிராமத்தில் உள்ளனர். அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியில் கோவிட்-19 தொற்று ஏற்படக் கூடிய ஆபத்துள்ள புற்றுநோய், டிபி அல்லது இதய நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், ஒவ்வொரு வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வயது போன்றவற்றையும் விரிவாக சேகரித்து பதிவு செய்ய வேண்டும். இது அவருக்கு கூடுதலான புதிய பொறுப்பு. “கரோனா அறிகுறிகளான காய்ச்சல் போன்றவை இருக்கிறதா என்பதை நான் கண்டறிய வேண்டும். எனக்கு இதெல்லாம் கஷ்டமான வேலை கிடையாது. விரிவான பதிவேட்டை தயாரிப்பது எனக்கு பழக்கமான வேலைதான். ஆனால் சூழல்தான் முற்றிலும் வேறாக உள்ளது“ என்கிறார் சுனிதா.




